இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான இரா.சம்பந்தன் இன்று (ஜூலை-1) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91.
இராஜவரோதயம் சம்பந்தன் 1933 பிப்.5ல் பிறந்தவர். இலங்கைத் தமிழ் அரசியல்வாதி. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர். இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவர். 1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். பின் 2001 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2015 செப்டம்பர் 3 முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
வயது மூப்பு காரணமாக இரா.சம்பந்தன் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல், இன்று காலமானார். சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி உள்ளிட்டவைகளின் தலைவராக இருந்தார்.
இவர் 1977 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திரிகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி ஆனார். இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த முதுபெரும் தலைவராக திகழ்ந்து வந்தார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
அவரது மறைவிற்கு கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன், 1980 முதல் அவர் தன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் நினைவு கூர்ந்து இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளார். (படம்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இரா. சம்பந்தனுடன்)