December 6, 2024, 10:54 AM
27.2 C
Chennai

IND Vs NZ ODI: சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி வெற்றி!

இந்தியா-நியூசிலாந்து இரண்டாவது ஒருநாள் போட்டி, ராய்ப்பூர், 21.01.2023
சிறப்பான பந்துவீச்சால் இந்தியா அபார வெற்றி

K.V. பாலசுப்பிரமணியன்

ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை (34.3 ஓவரில் 108 ரன்னுக்கு ஆல் அவுட், கிளன் பிலிப்ஸ் 36, சாண்ட்னர் 27, பிரேஸ்வெல் 22, ஷமி 3/18, ஹார்திக் 2/16, வாஷிங்டன் சுந்தர் 2/7, சிராஜ் 1/10, தாகூர் 1/26, குல்தீப் 1/29) இந்திய அணி (20.1 ஓவரில் 111/2, ரோஹித் ஷர்மா 51, ஷுப்மன் கில் 40,) எட்டு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராய்ப்பூரில் உள்ள “தியாகி வீர் நாரயண் சிங் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில்” இன்று இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. போட்டியில் யார் முதலில் பூவாதலையா வெல்கிறார்களோ அவர்களே ஆட்டத்தில் வெற்றிபெறுவர் என வல்லுநர்கள் கூறியிருந்தனர்.

ஆட்டத்தின் பின் பகுதியில் பனியின் காரணமாக பந்துவீச சிரமமாக இருக்கும்; எனவே டாஸ் வெல்லும் அணியின் தலைவர் முதலில் பந்துவீசுவார் என்பதுதான் கணிப்பு. ஆனால் ரோஹித் ஷர்மா பூவாதலையா வென்று பந்துவீசுவதா இல்லை மட்டையாடுவதா எனக் கணநேரம் குழம்பினார்; பின்னர் பந்துவீசுவதாக முடிவெடுத்தார்.

ALSO READ:  மதுரையில் எஸ்.பி.பி., 4ம் ஆண்டு நினைவஞ்சலி!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இன்று அசத்தலாகப் பந்துவீசினார்கள். முதல் ஓவரில் ஃபின் ஆலன் ஷமியிடம் ஆட்டமிழந்தார். ஹென்றி நிக்கோலஸ் ஆறாவது ஓவரில் அவுட்டானார். இப்படி பதினோறாவது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 15 ரன் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் கிளன் பிலிப்ஸ் (36 ரன்), பிரேஸ்வெல் (22 ரன்), சாண்ட்னர் (27 ரன்) ஆகியோர சிறப்பாக ஆடினர். நியூசிலாந்து அணியில் இரட்டை இலக்க ரன் எடுத்தது இவர்கள் மட்டுமே.

இப்படியாக 34.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. 109 ரன்கள் என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ஷுப்மன் கில்லும் சீரான வேகத்தில் ஆடினர். முதல் பவர்ப்ளே ஓவரான 10 ஓவர்களில் இந்திய அணி விக்கட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது.

இதே பத்து ஓவரில் நியூசிலாந்து அணி 4 விக்கட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித்தும் கில்லும் ஆட்டத்தை வெற்றியோடு முடிப்பார்கள் என எண்ணியிருந்த வேளையில் 51 ரன்னுக்கு ரோஹித் ஷர்மாவும், 11 ரன்னுக்கு விராட் கோலியும் ஆட்டமிழந்தனர்.

ALSO READ:  IND Vs BAN Test: டிரா ஆக வேண்டிய மேட்சுக்கு உயிர் கொடுத்த ரோஹித்!

இந்திய அணி 20.1 ஓவர்களில் 111 ரன் எடுத்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இத்தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணி 24ஆவது முறையாக இத்தகைய தொடர் வெற்றியைப் பெறுகிறது. முகமது ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.