நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலை 7 கட்டங்களாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, அடுத்த அரசு பதவி ஏற்க வேண்டும். எனவே, தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இதனிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் ஆணையரான அருண் கோயல் கடந்த 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். எனவே, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணையராக பதவியில் இருந்து வந்தார். இதை அடுத்து இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்தது.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர். இதை அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மூவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்து முன்னரே முடிவு எடுத்து விட்டதால், அது தொடர்பாக புதிய தேர்தல் ஆணையர்கள் இருவருடனும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை நடத்தினார். அவர்கள் தேர்தல் தொடர்பாக இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. அருணாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநில சட்டமன்றங்களுக்கும் சேர்த்து, தேர்தல் தேதி அறிவிக்கப்பட வுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மே மாத இறுதியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், அரியானா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கத்தில் 6 முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படக் கூடும். 48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.