
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தொல்லியல் அகழாய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கீழடியில் தமிழக தொல்லியல் துறையினரால் 6 ம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ஏற்கெனவே கீழடியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்ற நிலையில் இந்தாண்டு, கீழடியைச் சுற்றியுள்ள மணலூர், அகரம், கொந்தகை என 4 இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் கொந்தகையில் கடந்த மார்ச் மாதம் மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு இடைவெளிக்குப் பின்னர் நேற்று மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கீழடியில் விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறு சிறு எலும்புத் துண்டுகள் கிடைத்த நிலையில், தற்போது முதன் முறையாக நீளமான முதுகொலும்பு மற்றும் விலா எலும்புகளுடன் கூடிய விலங்கின் எலும்புக்கூடு தற்போது தென்பட்டுள்ளது.
இதனால் தொல்லியல் அகழாய்வாளர்கள் உற்ச்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே 4 ம் கட்ட அகழாய்வில் திமிலுடன் கூடிய காளைமாடு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது கண்டெடுக்கப்பட்ட விலங்கு எத்தகையது என்பது அகழாய்வுக் குழியை முழுமையாகத் தோண்டிய பின்னரே தெரிய வரும்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை