
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
சிவகாசி அருகே உள்ள கட்டினார் பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று விருதுநகர் அருகே உள்ள ஓ. கோவில்பட்டியில் இயங்கி வருகிறது.நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
வழக்கம் போல் இன்று காலை 30 அறைகளில் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்டது. ஏராளமான தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர்.பிற்பகலில் மருந்து கலவை அறையில் மருந்து கலவை செய்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அதோடு அடுத்தடுத்து இருந்த இரு அறைகளும் இடிந்து சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் மருந்து கலவை செய்த தொழிலாளி பெரிய மருளுத்தூரைச் சேர்ந்த மல்லீஸ்வரன் (43) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற தொழிலாளர்கள் அனைவரும் தப்பியோடினர். தகவலறிந்த ஆமத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சடலத்தை போலீஸார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை