
எந்த விஷயத்தையும் தனக்கே உரிய இயல்பான பேச்சு பாணியில் சொல்லி அசத்துபவர் அமைச்சர் செல்லூர் ராஜூ!
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “வடிவேலுவை கடித்த நாய்கள் செத்ததைப் போல கொரோனாவும் சீக்கிரம் செத்து விடும். நிச்சயம் ஒரு நாள் கொரோனாவை நாம் வெல்வோம்” என்று கூறி நம்பிக்கை கொடுத்துள்ளார். இதைக் கேட்ட தொண்டர்கள் “ஆஹாஹாஹா” என்று வடிவேலு பாணியில் பதிலளித்து புளங்காகிதம் அடைந்துள்ளனர்.
நடிகர் வடிவேலுவை பத்து, பதினைந்து நாய்கள் சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கும். வடிவேலுவோ.. கடிக்காதீங்க, கடிக்காதீங்க என்று அலறுவார். ஆனால் நாய்கள் அவரை விடாமல் கடித்துக் குதற தொடங்கும். ஆனால் அடுத்த சில நொடிகளிலேயே நாய்கள் அத்தனையும் செத்துவிடும்.
அப்போது நாய்களை பார்த்து வடிவேலு சொல்வார், அப்பவே நான் சொன்னேனே கேட்டீங்களா? கடிக்காத கடிக்காதன்னு சொன்னேனே கேட்டீங்களா… இப்ப பரிதாபமா செத்துப் போய் கிடக்குறீங்களே… என்பார்.
இதைப் போலத்தான் நம்மை பதம் பார்க்கிற கொரோனாவும் பயந்துபோய் செத்துவிடும் என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
அத்துடன் ஊடகங்களுக்கும் சில டிப்ஸ் கொடுத்துள்ளார். கொரோனா நம்மைக் கண்டு பயந்து போக வேண்டும் என்றால், அரசு அலுவலகம் வந்த நபர் மரணம்; குப்பை வண்டியில் உடலை அகற்றிய கொடூரம் என்றெல்லாம் ஊடகங்களில்
எழுதாதீர்கள் என்றுகேட்டுக் கொண்டார். காரணம், மக்கள் பயப்படாமல் இருந்தால் நம்மை கண்டு கோரோனா பயந்து ஓடிவிடுமாம்…
மதுரையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று கூறிய செல்லூர் ராஜூ, இங்குள்ள ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே தெய்வத்திற்கு இணையாக மருத்துவர்களை வணங்குங்கள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்….
- ரவிச்சந்திரன், மதுரை