
பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
வெங்கடேஷ் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பின் சுற்றியுள்ளார். பின்னர் ஒருநாள் சிறுமியை வலுக்கட்டாயமாக தனி இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இப்படி பல முறை மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதனை பயன்படுத்தி அந்த மாணவியை மயிலம் அருகே உள்ள கோயிலில் வைத்து அவர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துக்கொண்டார்.
இவ்வளவு விவகாரமும் அந்த மாணவியின் வீட்டிற்கு தெரியவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து பெற்றோர்கள் அவரைப் புதுவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதைத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வெங்கடேஷை, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.