October 26, 2021, 4:54 pm
More

  ARTICLE - SECTIONS

  கொரோனா காலத்தில்… சீந்தில் கொடியால் வாழ்வில் வளம் பெற்றவர்!

  கண்டிப்பாகச் செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் உங்களுக்கு வருவாய் ஈட்ட புதியதொரு வாய்ப்பும் ஏற்படும்.

  mannkibaat - 1

  June 27, 2021

  மனதின் குரல், 78ஆவது பகுதி
  ஒலிபரப்பு நாள்:  27.06.2021
  ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
  தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

  பிரதமர் நரேந்திர மோதி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி…

  எனதருமை நாட்டுமக்களே, நமது சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாமா?

  நாஸ்தி மூலம் அனௌஷதம்...

  அதாவது, உலகில் மருத்துவ குணம் இல்லாத தாவரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது என்பதே இதன் பொருள்.  நமக்கு அருகிலேயே இப்படி எத்தனையோ மரம்-செடி-கொடிகள் இருக்கின்றன, இவற்றில் அற்புதமான குணங்கள் நிரம்பியிருக்கின்றன என்றாலும் பலவேளைகளில் நமக்கு இவை பற்றி எதுவும் தெரிந்திருப்பதில்லை.  நைனிதாலைச் சேர்ந்த நண்பர் ஒருவரான பரிதோஷ் என்பவர், இந்த விஷயம் குறித்து ஒரு கடிதம் வரைந்திருக்கிறார். 

  இவர் சீந்தில் கொடி மற்றும் பிற தாவரங்களின் பல ஆச்சரியமான அற்புதங்கள் நிறைந்த மருத்துவ குணங்கள் பற்றி, கொரோனா வந்த பிறகு தான் தெரிய வந்தது என்று எழுதியிருக்கிறார்.  அக்கம்பக்கத்தில் இருக்கும் தாவரங்கள் பற்றித் தெரிந்து கொள்வதோடு, மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் என்று மனதின் குரலின் அனைத்து நேயர்களிடமும் நான் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். 

  உண்மையில், இவையனைத்தும் நமது பல நூற்றாண்டுக்கால பழமையான மரபுகள், இவற்றை நாம் தான் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.  இந்தத் திசையில் மத்தியப்பிரதேசத்தின் சத்னாவில் இருக்கும் ஒரு நண்பரான  ராம்லோடன் குஷ்வாஹா அவர்கள் மிகவும் மெச்சத்தக்க பணி ஒன்றைச் செய்திருக்கிறார்.  ராம்லோடன் அவர்கள் தனது வயலிலேயே நாட்டு மூலிகை அருங்காட்சியம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.  இந்த அருங்காட்சியகத்தில் இவர் பல நூற்றுக்கணக்கான மருத்துவத் தாவரங்களையும், விதைகளையும் சேகரித்து வைத்திருக்கிறார்.  இவற்றை இவர் தொலைவான பகுதிகளிலிருந்து கொண்டு வந்திருக்கிறார். 

  இதனைத் தவிர, இவர் ஒவ்வொரு ஆண்டும் பலவகையான இந்தியக் காய்கறிகளையும் பயிர் செய்கிறார்.  ராம்லோடன் அவர்களின் இந்தத் தோட்டம், இந்த நாட்டு மூலிகைகளின் அருங்காட்சியகத்தைக் காண மக்கள் வருகிறார்கள், இவை மூலம் அதிகம் கற்கவும் செய்கிறார்கள்.  உண்மையிலேயே, இது மிக அருமையான ஒரு செயல்பாடு.  இதைப் போலவே தேசத்தின் பல்வேறு பகுதிகளில் செய்ய வேண்டும். 

  உங்களில் யாராலாவது இது போன்ற முயற்சியில் ஈடுபட முடியுமென்றால், கண்டிப்பாகச் செய்யுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  இதன் மூலம் உங்களுக்கு வருவாய் ஈட்ட புதியதொரு வாய்ப்பும் ஏற்படும்.  மேலும் ஒரு ஆதாயம் என்னவென்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்த தாவரங்கள் வாயிலாக, உங்கள் பகுதிக்கும் ஒரு அடையாளம் கிடைக்கும். 

  என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்னும் சில நாட்கள் கழித்து, ஜூலை மாதம் 1ஆம் தேதியன்று நாம் தேசிய மருத்துவர்கள் தினத்தைக் கடைப்பிடிக்க இருக்கிறோம்.  தேசத்தின் மகத்துவம் வாய்ந்த மருத்துவரும், அரசியல் மேதகையுமான, டாக்டர். பீ.சீ. ராய் அவர்களின் பிறந்த நாளுக்கு இந்த நாள் சமர்ப்பிக்கப்பட்டது. 

  கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் பங்களிப்புக்கு நாம் அனைவரும் கடன் பட்டிருக்கிறோம்.  நம்முடைய மருத்துவர்கள், தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது, நமக்கெல்லாம் சேவை புரிந்து வருகிறார்கள்.  ஆகையால் இந்த முறை தேசிய மருத்துவர்கள் தினமும் மேலும் சிறப்படைகிறது. 

  நண்பர்களே, மருத்துவ உலகின் மிகவும் கௌரவமிக்க நபர்களுள் ஒருவரான ஹிப்போக்ரேட்ஸ் கூறியிருக்கிறார் –

   “Wherever the art of Medicine is loved, there is also a love of Humanity.

  அதாவது எங்கே எல்லாம் மருத்துவம் என்ற கலை நேசிக்கப்படுகிறதோ, அங்கே எல்லாம் மனித சமூகத்தின் மீது அன்பு நிறைகிறது.  இந்த அன்பின் சக்தி வாயிலாகவே மருத்துவர்களால் நமக்கு சேவையாற்ற முடிகிறது ஆகையால், நாம் அதே அளவு அன்போடு அவர்களுக்கு நமது நன்றிகளை அளித்து, அவர்களின் மனோபலத்தைப் பெருக்க வேண்டியது நமது கடமையாகிறது.  மருத்துவர்களுக்கு உதவும் பொருட்டு, தாமே முன்வந்து செயல்கள் புரிபவர்கள் நமது தேசத்திலே பலர் இருக்கிறார்கள். 

  இப்படிப்பட்ட ஒரு முயல்வு ஸ்ரீநகரில் நடந்திருப்பது  என் கவனத்துக்கு வந்தது.  இங்கே டல் ஏரியில், ஒரு படகு அவசர வாகனச் சேவை தொடங்கப்பட்டது.  இந்தச் சேவையை ஸ்ரீநகரின் தாரிக் அஹ்மத் பட்லூ அவர்கள் ஆரம்பித்தார்கள், இவர் ஒரு படகு வீட்டுக்குச் சொந்தக்காரர்.  இவர் தாமே கோவிட் 19 பெருந்தொற்றோடு போராடி வெற்றி பெற்றவர், இது தான் அவசர வாகனச் சேவையைத் தொடங்க இவருக்கு உத்வேகத்தை அளித்தது. 

  இவருடைய இந்த அவசர வாகனத்தால், மக்களிடத்தில் விழிப்புணர்வு உண்டாக்கும் இயக்கமும் நடைபெற்று வருகிறது, தொடர்ந்து அவசர வாகனத்தில் இவர் அறிவிப்புகளையும் செய்து வருகிறார்.  மக்கள் முகக்கவசத்தை அணிதல் முதல் இன்னும் பிற அவசியமான எச்சரிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே முயற்சி.

  நண்பர்களே, மருத்துவர்கள் தினத்தோடு கூடவே, ஜூலை 1ஆம் தேதியன்று பட்டயக் கணக்காளர்கள் தினமும் கடைப்பிடிக்கப் படும்.  சில ஆண்டுகள் முன்பாக,  நமது இந்திய கணக்காய்வு நிறுவனங்கள் உலகம் தழுவியவையாக இருக்க வேண்டும் என்று நாட்டின் பட்டயக் கணக்காளர்களிடத்தில் நான் கோரியிருந்தேன்.  இன்று இதுகுறித்து நான் அவர்களுக்கு நினைவூட்ட விழைகிறேன்.  பொருளாதாரத்தில் ஒளிவுமறைவற்ற நிலையை உருவாக்க, பட்டயக் கணக்காளர்களால் மிகச் சிறப்பான, ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்க முடியும்.  நான் பட்டயக் கணக்காளர், அவர்தம் குடும்பத்தினர் என அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

  என் இனிய நாட்டுமக்களே, கொரோனாவுக்கு எதிராக பாரதத்தின் போராட்டத்தில் ஒரு பெரிய சிறப்பம்சம் உண்டு.  இந்தப் போரிலே, தேசத்தின் ஒவ்வொரு நபரும், தனது பங்களிப்பை அளித்திருக்கிறார்.  நானும் மனதின் குரலின் ஒவ்வொரு பகுதியிலும் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.  ஆனால் சிலரைப் பற்றி நான் அதிக அளவில் குறிப்பிடுவதில்லை என்று அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

  வங்கிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், சிறிய வணிகர்கள் அல்லது கடை வைத்திருப்பவர்கள், கடைகளில் வேலை பார்க்கும் சிப்பந்திகள், தள்ளுவண்டி செலுத்தும் சகோதர சகோதரிகள், பாதுகாப்புக் காவலாளிகள், தபால்காரர்கள் மற்றும் அஞ்சலகப் பணியாளர்கள் எனப் பலர் கொண்ட இந்தப் பட்டியல் மிக நீண்டது, இவர்களில் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக ஆற்றியிருக்கிறார்கள். 

  இதே போல நிர்வாக அலகுகளிலும் எத்தனையோ பேர்கள் அவரவருக்குரிய வகைகளில் சிறப்பாகப் பணிபுரிந்திருக்கிறார்கள். 

  நண்பர்களே, இந்திய அரசாங்கத்தில் செயலராக இருந்த குரு பிரஸாத் மஹாபாத்ரா அவர்களின் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம்.  இன்றைய மனதின் குரலில் நான் அவரைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.  குருபிரஸாத் அவர்களுக்கு கொரோனா பீடிப்பு ஏற்பட்டு விட்டது, இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனது கடமையை ஆற்றி வந்தார். 

  தேசத்தில் பிராணவாயு உற்பத்தி அதிகரிக்க வேண்டும், தொலைவான பகுதிகள் வரை பிராணவாயு சென்று சேர வேண்டும் என்பதற்காக இவர் இரவுபகலாகப் பணியாற்றினார்.  ஒருபுறத்தில் நீதிமன்றங்களுக்குப் படையெடுப்பு, ஊடகங்கள் அளிக்கும் நெருக்கடி என பல முனைகளில் இவர் போராடி வந்தார், மறுபுறத்திலோ இவர் கொரோனாவால் தாக்குண்ட நிலையிலும் பணியாற்றுவதை நிறுத்தவில்லை.   உடல்நலத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட பிறகும் கூட, இவர் பிடிவாதமாக பிராணவாயு தொடர்பான காணொளி மாநாடுகளில் பங்கெடுத்து வந்தார். 

  நாட்டுமக்கள் குறித்த இத்தனை கவலை இவர் மனதில் வியாபித்திருந்தது.   மருத்துவமனைப் படுக்கையில் படுத்தவாறே, தன்னைப் பற்றிய கவலை ஏதும் இன்றி, நாட்டுமக்களுக்கு பிராணவாயு கிடைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.  இந்த கர்மயோகியையும் தேசம் இழந்து விட்டது என்பது நம்மனைவருக்கும் துக்கமளிக்கும் செய்தி.  கொரோனாவானது இவரையும் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது.  இப்படிப்பட்ட எண்ணிலடங்கா மனிதர்களைப் பற்றி நம்மால் பேசக் கூட முடியவில்லை. 

  நாம் கோவிட் நெறிமுறையை முழுமையான வகையில் பின்பற்றுவதும், தடுப்பூசி எடுத்துக் கொள்வதும் தான் இப்படிப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் நாம் அளிக்கக்கூடிய தூய்மையான நினைவாஞ்சலியாக இருக்க முடியும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-