பிரதமர் மோதியின் மனதின் குரல் ஜூன் 27
மனதின் குரல், 78ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள்: 27.06.2021
ஒலிபரப்பு: அகில இந்திய வானொலி, சென்னை
தமிழாக்கம் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
பிரதமர் நரேந்திர மோதி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து ஒரு பகுதி…
எனதருமை நாட்டுமக்களே, நமது நாட்டிலே இப்போது பருவமழைக் காலம் வந்து விட்டது. மேகங்கள் நமக்காக மட்டுமே பொழிவது இல்லை, மழைமேகங்கள் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தான் பொழிகின்றன. மழைநீரானது நிலத்தடியில் சென்று சேமிக்கப்படும் போது, நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர் நிலைகளையும் மேம்படுத்துகிறது. ஆகையால் தான் நீர் பாதுகாப்பு என்பதை நான் தேசப்பணியாகவே கருதுகிறேன்.
நம்மில் பலர் இந்தப் புண்ணியச் செயலைத் தங்களுடைய கடமையாகவே கருதிச் செயல்படுவதை நீங்கள் கண்டிருக்கலாம். இப்படிப்பட்ட ஒருவர் தான் உத்தராகண்டின் பௌடி கட்வாலைச் சேர்ந்த சச்சிதானந்த் பாரதீ அவர்கள். பாரதீ அவர்கள் ஒரு ஆசிரியராகப் பணிபுரிகிறார்; இவர் தனது செயல்களின் வாயிலாகவும் பிறருக்கு மிக அருமையான கல்வியளித்திருக்கிறார்.
இன்று இவருடைய கடினமான உழைப்பின் காரணமாக, பௌடீ கட்வாலின் உஃபரைங்கால் பகுதியில் பெரிய தண்ணீர் சங்கடத்திற்கு ஒரு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. எந்தப் பகுதியில் நீர்த்தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வந்தார்களோ, அங்கே இன்று ஆண்டு முழுவதிலும் நீர் நிரம்பிக் காணப்படுகிறது.
நண்பர்களே, மலைகளில் நீர் சேமிப்பிற்கான ஒரு பாரம்பரியமான வழிமுறை இருக்கிறது, இதை சால்கால் என்றும் அழைக்கிறார்கள். அதாவது நீரைச் சேமிக்க ஒரு மிகப்பெரிய பள்ளத்தைத் தோண்டுவது. இந்தப் பாரம்பரிய வழிமுறையோடு பாரதி அவர்கள் சில புதிய வழிமுறைகளையும் இணைத்தார். இவர் தொடர்ந்து சிறிய-பெரிய குளங்களை உருவாக்கினார்.
இதனால் உஃபரைங்காலின் மலைப்பகுதியில் பசுமை கொஞ்சியதோடு, மக்களின் குடிநீர் சங்கடமும் முடிவுக்கு வந்தது. பாரதீ அவர்கள் இப்படி 30,000த்திற்கும் அதிகமான நீர்நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் என்ற தகவல் உங்களுக்குப் பேராச்சரியத்தை அளிக்கலாம். முப்பது ஆயிரம். இவரது இந்த பகீரதப் பணி, இன்றும் தொடர்கிறது, பலருக்கு இவர் உத்வேக ஊற்றுக்கண்ணாக விளங்கி வருகிறார்.
நண்பர்களே, இதைப் போலவே யூபீ மாநிலத்தின் பாந்தா மாவட்டத்தின் அந்தாவ் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்கள். இவர்கள் தங்கள் இயக்கத்திற்கு மிக சுவாரசியமானதொரு பெயரையும் சூட்டினார்கள். ‘खेत का पानी खेत में, गाँव का पानी गाँव में’ அதாவது, வயலின் நீர் வயலுக்கு, கிராமத்தின் நீர் கிராமத்திற்கு என்பதே அது. இந்த இயக்கத்தின்படி, கிராமத்தின் பல ஏக்கர் நிலங்களில் உயரமான வரப்புகளை ஏற்படுத்தினார்கள்.
இதன் காரணமாக மழைநீரானது வயலில் சேரத் தொடங்கியது. இப்போது அனைவரும் வயல்வெளிகளில் இருந்த வரப்புகளில் மரம் நடும் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். அதாவது இப்போது விவசாயிகளுக்கு நீர், மரம் மற்றும் பணம் என மூன்றும் கிடைக்கும். தங்களின் நற்செயல்கள் காரணமாக, இவர்களின் கிராமத்தின் புகழ் தொலைவில் இருக்கும் கிராமங்கள் வரை பரவி வருகிறது.
நண்பர்களே, இவை அனைத்திலிருந்தும் உத்வேகமடைந்து, நாம் நமது அக்கம்பக்கத்தில் எந்த வகையிலாவது நீரை சேமிக்க முடிந்தால், அப்படி கண்டிப்பாகச் செய்ய வேண்டும். பருவமழையின் இந்த மகத்துவமான சமயத்தை நாம் தொலைத்து விடக்கூடாது.