October 28, 2021, 3:51 am
More

  ARTICLE - SECTIONS

  இந்த லிங்கை தொடாதீங்க.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!

  hacker
  hacker

  நாளுக்கு நாள் புதிய பரிணாமத்தில் மக்களை இணைக்கும் இணையதள வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தற்போது இருக்கும் நவீன மோசடி கும்பல்கள் உடலுலைப்பின்றி மக்களின் ஆசையை தூண்டியோ, ஏமாற்றியோ உக்கார்ந்த இடத்திலிருந்து பணம் பறிக்க ஆரம்பித்து விட்டனர்.

  கடந்த வருடம் கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பெரும்பாலான மக்களை இணையத்தின் பக்கம் செல்ல வைத்துவிட்டது. அதற்கேற்ப மோசடிகளும் அதிகரித்துவிட்டன.

  வங்கியிலிருந்து வருவது போல வரும் போலி குறுஞ்செய்திகளை நம்பி லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என சென்னை சைபர்க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

  தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு வசதிகளை அளித்துள்ள நிலையில் மோசடி கும்பலுக்கும் அதை வகையாக இருக்கிறது.

  மாவட்டத்தைப் பொருத்தவரையில் சைபர் கிரைமிற்கு என தனி பிரிவு தொடங்கி ஓரிரு மாதங்கள் தான் ஆகிறது என்ற நிலையில், புகார்களுக்கு பஞ்சமில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. தினமும் புதுவிதமாக மக்கள் ஏமாறுகின்றனர் என்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.

  போலி இணையதளம், ஆன்லைன் ஷாப்பிங், விற்பனை இணையதளங்கள், ஓ.டி.பி , பேஸ்புக், குறுஞ்செய்தி, ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டம், கே.ஒய்.சி போலி செயலி என பல வகைகளில் மோசடிகள் நடக்கின்றன.

  இதில் பெரும்பாலும் ஏமாறுபவர்கள் நன்கு படித்தவர்கள் தான் என்பது வேதனைக்குரியது. சினிமா வசனம் போல, ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால் அவரின் ஆசையை தூண்ட வேண்டும் என்ற பாணியை சரியாக பயன்படுத்துகின்றன இந்த மோசடி கும்பல்கள்.

  ஓ.எல்.எக்ஸ்., மோசடி

  இது ஆன்லைனில் பழைய, பயன்படுத்திய பொருட்களை விற்க பயன்படும் இணையதளம். இதில் ராணுவ வீரர், வெளிநாட்டில் வாழ்பவர், உயர் அதிகாரி என்ற போர்வையில் போலியான கணக்குகளை துவங்கி, அவசர தேவைக்காக, பணிமாறுதல் என்பதால் தன் வாகனத்தை, பொருட்களை விற்பதாக பதிவிடுகின்றனர். இதனை நம்பி அவரிடம் பேசும் வாடிக்கையாளர்களிடம் முன்பணம் செலுத்த கூறும் கும்பல், பணத்தை பெற்றவுடன் காணமல் போய்விடுகின்றன.

  சமீப காலங்களில் வங்கியிலிருந்து பேசுவது போல தொடர்பு கொண்டு செய்யும் பண மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

  அந்த வகையில் தற்போது வங்கியிலிருந்து வருவது போல செல்போன் எண்களுக்கு கே.ஒய்.சி\ஆதார் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்ய சொல்லி லிங்க் வருகிறதாம்.

  அதில் சென்று விவரங்களை பூர்த்தி செய்யும் சமயத்தில் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடுவதாக கூறப்படுகிறது.

  போலி இணையதளம் மூலம் அலைபேசிக்கு வருகிறது ஒரு குறுஞ்செய்தி. அதில் உங்களது வங்கி கணக்கை ரினிவல் செய்ய வேண்டும் என ஒரு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

  அதனை பதிவு செய்து உள்ளே சென்றால் சம்பந்தப்பட்ட வங்கி போன்றே போலியான இணையதளம் இருக்கிறது. இதில் தங்களது பெயர், கடவுச் சொல் பதிவு செய்தவுடன், வரும் ஓ.டி.பி., யை பதிவு செய்தால் போதும் மொத்த பணமும் காலியாகிவிடும்.

  இவ்வாறு திண்டுக்கல் மாவட்டத்திலேயே லட்சக்கணக்கில் பணம் இழந்தவர்கள் உள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்கள் குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு பணம் செலுத்தி விளையாடலாம் என்ற விதி உள்ளது. இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் விளையாடி பெற்றோரின் பணத்தை பறிகொடுத்து விடுகின்றனர்.

  குழந்தைகளுக்கு வங்கி விவரம் தெரிவதால் அதனை பதிவிட்டு சென்றுவிடுகின்றனர். நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக பணம் முழுவதும் சுரண்டப்படுகிறது. அதேபோல், பெட்டிங் போன்ற சூதாட்டத்தால் ஒரு குடும்பமே தன் சொத்துகளை இழக்கும் தருவாயில் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

  போலி செயலிகள் ஆக்ஸிமீட்டர் செயலி, பங்குச்சந்தை முதலீடு போன்ற பல்வேறு போலியான செயலிகள் உலா வருகின்றன.

  இதில் தங்களது விவரங்களை பதிவிடுவதால் மொத்த தரவுகளும் திருடப்படுவதோடு, பணமும் பறிபோகிறது. சில இடங்களில் மிரட்டியும் பறிக்கின்றனர்.

  சமூக வலைதளமான முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் முகம் தெரியாத நபர்களிடம் பேசி அவர்களின் வார்த்தை வலைகளில் விழுந்து பணத்தை லட்சக்கணக்கில் பறிகொடுத்துள்ளனர் பலர்.

  சமீபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண் வெளிநாட்டில் வசிப்பதாக கூறிய ஒருவருடன் முகநூல் வாயிலாக மட்டுமே பேசி ரூ.10 லட்சத்திற்கும் மேல் பறிகொடுத்துள்ளார்.

  பெரிய ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களின் பெயர்களில், தங்களுக்கு பரிசு விழுந்துள்ளதாக வீட்டிற்கே தபால் அனுப்புகின்றனர். அதன் வாயிலாக முன்பணம் சிறிது கட்டினால் கார் பரிசு என ஆசை காட்டி லட்சக்கணக்கில் பலர் பணத்தை பறிகொடுத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும், வீட்டிற்கும் அலைந்து வருகின்றனர்.

  இதுபோல, கணக்கில்லாமல் வேலை வாங்கி தருவதாக, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி பல வழிகளிலும் மோசடி செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

  குறிப்பாக பண வசதி உள்ள வயதானவர்களிடம் தங்களின் வங்கி கணக்கில் மாற்ற செய்ய வேண்டுமென கூறி மோசடி செய்யும் புகார்கள் அதிகமாக வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

  சமீபத்திய ஆய்வில் சைபர் மோசடி அதிகமாக நடக்கும் இடங்களில் இந்தியா 7 வது இடத்தில் உள்ளது அதிர்ச்சியான விஷயமாகும். சைபர் தொடர்பான குற்றங்கள் மீது புகார் அளிக்க 155260 என்ற எண்ணிலும், Http://cybercrime.gov.in தொடர்புகொள்ளலாம்.

  இது குறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் பிரிவு போலிசார் கூறியதாவது சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகமாகின்றன.

  இதில் ஏமாறுவது பெரும்பாலும் படித்தவர்கள் தான். இது போன்ற மோசடிகள் எல்லாம் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு நடக்கிறது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதே காரணம். முக்கியமாக ஆசை படுகின்றனர்.

  எவரும் லாபம் இல்லாமல் பரிசாகவோ, அதிஷ்டமாகவோ கொடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலில் இணையதளம் குறித்த ஓரளவிற்கு தெளிவான புரிதலை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். தேவையற்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது.

  வங்கி அழைப்பு என எதுவாயினும் நேரில் சென்று பேச வேண்டும். முன் பின் தெரியாத நபர்களிடம் எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ள கூடாது. ஓ.டி.பி., கடவுள் சொல் எவரிடமும் தெரிவிக்க கூடாது.

  குழந்தைகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் புகைப்படங்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை ஏமாந்து விட்டால் சைபர் கிரைம் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார்.

  இதுகுறித்து எச்சரித்துள்ள சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வங்கிகள் இப்படியான மெசேஜ்களை அனுப்புவது இல்லை. எனவே இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-