சென்னை: தற்கொலைகள் அதிகம் இருக்கும் விதர்பா விவசாயிகளைவிட தமிழக விவசாயிகள் அதிக கடன் சுமையில் இருக்கின்றனர், அவர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய விவசாயிகளின் நிலைமை குறித்து தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் (National Sample Survey Organisation-NSSO) நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தமிழக விவசாயிகளின் நிலைமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி மட்டுமின்றி அனுதாபமும் அளிப்பவையாக உள்ளன. தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் நடத்திய விவசாயிகளின் நிலைமை குறித்த 70 ஆவது கணக்கெடுப்பில் தமிழக விவசாயிகளில் 82.5 விழுக்காட்டினர் மீள முடியாத கடன்சுமையில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே ஆந்திரா (92.90%), தெலுங்கானா (89.10%) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக கடனாளி விவசாயிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்திலுள்ள விவசாயக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ரூ.1,15,900 கடன் இருப்பதாகவும் இக்கணக்கெடுப்பில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. விவசாயக் குடும்பங்களின் சராசரிக் கடன் அதிகமாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 4 ஆவது இடத்தில் உள்ளது. விவசாயிகள் பெற்றுள்ள கடனில் 60% மட்டுமே வங்கிகள் உள்ளிட்ட முறையான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 40% கடன்கள் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளில் பெரும்பான்மையினர் ஏழைகள் ஆவர். அவர்களால் சராசரியாக ரூ.1.15 லட்சம் கடனை சமாளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். தமிழக விவசாயக் குடும்பங்களுக்கு வேளாண்மை மூலம் கிடைக்கும் மாத வருமானம் வெறும் ரூ.2474 மட்டும் தான். ஆனால், இந்தக் குடும்பங்களின் கடன் சுமையோ மாத வருமானத்தை விட 47 மடங்கு அதிகம் ஆகும். மாத வருமானம் 2474 ரூபாயைக் கொண்டு பசியின்றி குடும்பம் நடத்துவதே சாத்தியமில்லாத நிலையில், இதில் ஒரு பகுதியை மிச்சப்படுத்தி விவசாயிகள் தங்களின் கடனை அடைப்பது ஒருபுறம் இருக்கட்டும்….கடனுக்கான வட்டியை செலுத்துவதே குதிரைக் கொம்பை விட அதிசயமானது தான். தமிழக விவசாயிகள் அதிக அளவு கடன் சுமையில் சிக்கித் தவிப்பதற்கு காரணம் தமிழக அரசு கடைபிடித்து வரும் தவறான வேளாண் கொள்கைகள் தான். பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் மாதம் ரூ.16,349 வருவாய் கிடைக்கும் நிலையில், தமிழக விவசாயிகளுக்கு அதில் சுமார் ஏழில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழக விவசாயிகளுக்கு மாத வருமானமாக கிடைக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்புக்கு 3000 ரூபாய்க்கு மேல் கொள்முதல் விலை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாகவே கரும்பு கொள்முதல் விலை ரூ.2650 என்ற அளவிலேயே இருக்கிறது. இதைக் கூட வழங்கத் தயாராக இல்லாத தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.2250 மட்டுமே வழங்கி வருகின்றன. சர்க்கரை ஆலைகளை எச்சரித்து மீதமுள்ள தொகையை வசூலித்துத் தருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்பது தான் சோகம். விவசாயத்திற்கு தேவையான தரமான விதைகள், இடுபொருட்கள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு தடையின்றி கிடைப்பதற்கான எந்த ஏற்பாடும் தமிழகத்தில் இல்லை. விவசாயிகள் இலாபகரமானத் தொழிலாக மாறாமல் இருப்பதற்கும், விவசாயிகள் கடன் வலையில் சிக்கித் தவிப்பதற்கும் இவை தான் காரணமாகும். விவசாய வளர்ச்சிக்கு தேவையான சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தாததால் தான் தமிழகத்தில் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 12 விழுக்காடு என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்வதற்கோ அல்லது வேளாண் வளர்ச்சிக்கு தடையாக உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்கோ தமிழக அரசு ஒருபோதும் தயாராக இல்லை. விவசாயிகள் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கும் விதர்பா பகுதியை உள்ளடக்கிய மராட்டிய மாநிலத்தைவிட அதிக அளவிலான கடன் சுமை தமிழக விவசாயிகளுக்குத் தான் உள்ளது. இந்த நிலை மாற்றப்படாவிட்டால் ஒரு கட்டத்தில் விதர்பாவுக்கு இணையாக தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க முடியாமல் போய்விடும். எனவே, விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்துவதுடன், இனிவரும் காலங்களிலாவது விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடன் சுமையில் தமிழக விவசாயிகள்; தற்கொலைகளைத் தடுக்க அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week