
மும்பை: அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் ஸ்வாமி, தமது 87ஆம் வயதில் மும்பையில் இன்று காலமானார்.
அகில இந்திய வானொலியில், பல ஆண்டுகளாக தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றியவர் சரோஜ் நாராயண்ஸ்வாமி. தில்லியில் இருந்து ஒலிபரப்பாகும் தேசியச் செய்திகளை இவர் வாசிக்கும் விதமே தனியானதாக இருக்கும். அந்த வித்தியாசத்தின் காரணத்தாலும், கணீர் என்ற குரலாலும், வானொலி நேயர்களைக் கவர்ந்திழுத்தார். இவரது உச்சரிப்புக்காகவும், கம்பீரமான வெங்கலக் குரலுக்காகவும் ஏராளமான தமிழ் நேயர்களைப் பெற்றவர் சரோஜ் நாராயண் ஸ்வாமி.
இவரது செய்தி வாசிப்பைக் கேட்டவர்கள், இது ஆண் குரலா அல்லது பெண் குரலா என்று ஒரு கணம் தடுமாறித்தான் போனார்கள். இது பற்றி பொதுத் தளங்களில் விவாதிக்கவும் செய்திருக்கிறார்கள்.
1965இல் அகில இந்திய வானொலியில் பணியில் சேர்ந்தார். தில்லியில் தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றிய இவர், 1995இல் ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
மும்பையில் வசித்து வந்த இவர், முதுமை காரணமாக 87 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சென்னை வானொலி ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது. வானொலி பணியாளர்களும், நேயர்களும் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அகில இந்திய வானொலியின் அடையாளமாக நிலைத்துவிட்ட எங்கள் ஆதர்ச நாயகி விடைபெற்றார்.
சரோஜ் நாராயணஸ்வாமி என்ற குரலை,பெயரை மறந்துவிட முடியுமா என்ன…