
மத்திய பிரதேசம் மாநிலம் பெதுல் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். போபால், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பெதுல் என்ற இடத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் மீட்பு குழுவினரின் உதவியுடன் காரில் இருந்து 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 11 தொழிலாளர்கள் மராட்டியத்தின் அமராவதியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குட்கான் மற்றும் பைஸ்தேஹி இடையே ஜல்லார் காவல் நிலையம் அருகே அதிகாலை 2 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பெதுல் உயர் போலீஸ் அதிகாரி சிமலா பிரசாத் கூறினார். மேலும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.