
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெற இருந்த ஆர் எஸ் எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
நவம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆர்.எஸ்.எஸ்., சார்பாக நடைபெற இருந்த
அணிவகுப்பு ஊர்வலம் உள்ளரங்கமாக மட்டும் நடத்த நீதிமன்றம் கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கிறோம். நவம்பர் 6ஆம் தேதி நமது பகுதியில் எந்த அணிவகுப்பு ஊர்வலமும் நடைபெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மறு அறிவிப்பு வரும் வரை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது… என்று அந்த அமைப்பினருக்கு தகவல் அளிக்கப் பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கோவை, திருப்பூர், குமரி மாவட்டம் நீங்கலாக 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மனு அளித்தனர். ஆனால், போலீசார் அனுமதி அளிக்காததால் உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நவ.6ஆம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடர்பான விசாரணை கடந்த 2ஆம் தேதி மீண்டும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நடந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்,ஆர்.இளங்கோ உளவுத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்து வாதங்களை முன்வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்த பின் மீதமுள்ள இடங்களில் அனுமதி வழங்குவது குறித்து 4ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார். இந்நிலையில் நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது…
கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தவிர்த்து மற்ற 44 இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். அதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோயில், அருமனை பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும். காவல்துறை, பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டி உளவுத்துறை அறிக்கையை அளித்துள்ளது. உளவுத்துறை சுட்டிக்காட்டிய 6 இடங்களில் ஊர்வலம் நடத்துவது குறித்து 2 மாதங்களுக்கு பிறகு மனு அளிக்கலாம். நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு முழுமையாகப் பின்பற்ற வேண்டும் .. என்று உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவில் தான், அணிவகுப்பு ஊர்வலத்தை உள்ளரங்கமாக நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் நிபந்தனையில் குறிப்பிட்டது. இதனை ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் ஏற்கவில்லை.
நேற்று இந்த உத்தரவு வந்த போது, மைதானத்தில் உள்ளரங்கமாக ஊர்வலம் செல்வதற்கு, அந்தந்த பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கினால் போதாதா? இதற்காகவா நீதிமன்றம், வழக்கு என்று இப்படி மாதக் கணக்கில் மல்லுக்கட்டிக் கொண்டு கிடந்தோம் என்ற கருத்துகள் அந்த அமைப்பினரிடையே பரவத் தொடங்கியது.