பாலுக்கு ஜிஎஸ்டி என பொய் சொல்லும் அமைச்சர்; திறனற்ற திமுக., ஆட்சி: அண்ணாமலை நறுக்!

Published:

1780855 annamalai2 - 2026

ஆவின் பால் விலை உயர்வுக்கு விளக்கம் கூறிய பால்வளத்துறை அமைச்சர் நாசர் பாலுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால் இவ்வாறு விலை உயர்வு ஏற்பட்டதாக தவறான தகவலை செய்தியாளர்கள் மத்தியில் பதிவு செய்தார்

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்று அண்ணாமலை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். மேலும் அதிமுக அரசு பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது….

இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய்க் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு GST வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர்.

பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வைத் திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இதனிடையே, “பால் கொள்முதல் விலையை சிறிதளவு உயர்த்தி விட்டு, உண்மையை மறைத்து, பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் வகையில் ஆவின் ஆரஞ்சு, டீமேட், கோல்டு பாலின் விற்பனை விலையை அதிகபட்சமாக உயர்த்துவதா..?” என்று, பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 15.00ரூபாய் வரை உயர்த்தி வழங்க வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முன் வந்த தமிழக அரசுக்கும், நடைமுறைபடுத்த உத்தரவிட்ட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், பரிந்துரைத்த பால்வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயம் லிட்டருக்கு 15.00ரூபாய் வரை பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு வெறும் 3.00ரூபாய் உயர்த்தி வழங்கியிருப்பது என்பது யானை பசிக்கு சோளப்பொறியை உணவாக கொடுத்தது போல் இருக்கிறது என்பதை தமிழக முதல்வர் அவர்கள் உணர்ந்து தற்போது அறிவித்துள்ள கொள்முதல் விலையில் மாற்றம் செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 12.00ரூபாயாவது உயர்த்தி வழங்க முன் வர வேண்டும்.

ஆரஞ்சு பால் வணிக ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக தவறான தகவலை கூறியும், அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வை காரணமாக கொண்டும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனை விலையை லிட்டருக்கு 12.00ரூபாயும், “டீமேட்” என்று சொல்லப்படும் சிவப்பு நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை விலையை லிட்டருக்கு 16.00ரூபாயும், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் நடைமுறையில் உள்ள “ஆவின் கோல்டு” பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு 11.00ரூபாயும் உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்தும் தமிழக அரசுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் ஆவின் ஆரஞ்சு, டீமேட், கோல்டு பாலின் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

மேலும் தற்போது கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் பொது வணிகத்திற்கான விற்பனை விலையை லிட்டருக்கு 12.00ரூபாய் உயர்த்துகின்ற அறிவிப்பு என்பது ஆவினில் மிகப்பெரிய அளவில் ஊழல், முறைகேடுகள் நடக்கவே வழிவகுக்கும் என்பதையும், பால் முகவர்களுக்கான பால் விற்பனை கமிஷன் தொகை உயர்த்தப்படாததால் அது ஆவின் பால் விற்பனையை கடுமையாக பாதிக்கும் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனி கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஏனெனில் தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விற்பனை விலையை உயர்த்தி விட்டு, பால் முகவர்களின் உழைப்பிற்கேற்ற வருமானம் வழங்கவில்லை என்றால் பால் முகவர்கள் அனைவரும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளின் விற்பனையை புறக்கணிக்கும் சூழல் ஏற்படும்.

மேலும் இந்த விற்பனை விலை உயர்வு என்பது மாதாந்திர அட்டைதாரர்களுக்கு அமுல்படுத்தப்படாததால் பொது வணிகம், மாதாந்திர அட்டை இரண்டுக்கும் இடையே லிட்டருக்கு 14.00ரூபாய் வித்தியாசம் வருவதால் அதன் பலனை ஆவின் மண்டல அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டு மாதாந்திர அட்டை மூலம் கள்ளச் சந்தையில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்யும் சூழல் உருவாகும்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அதுமட்டுமின்றி பொது வணிகத்திற்கும், மாதாந்திர அட்டைக்கும் லிட்டருக்கு 14.00ரூபாய் வித்தியாசம் இருப்பதால் தற்போது ஆவினில் உள்ள மொத்த விநியோகஸ்தர்கள் ஆவின் மண்டல அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு மாதாந்திர அட்டைகளை மொத்தமாக வாங்கி அதன் மூலம் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்து அதிக லாபம் ஈட்டத் தொடங்கி விடுவர். ஒரு சில சில்லரை வணிகர்களும், பால் முகவர்களும் கூட அது போன்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம். இதனால் ஆவினுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதை கடந்த 2006-2011காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முன்னுதாரணமாக கொண்டு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

எனவே தற்போது உயர்த்தப்பட்டுள்ள பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 12.00ரூபாயாவது உயர்த்தி வழங்கவும், பால் முகவர்களுக்கு ஆவின் பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை தற்போதுள்ள நிலையில் இருந்து நியாயமான அளவில் உயர்த்தி வழங்கிடவும் ஆவண செய்திட வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்… என்று தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img