
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகர் வதால் வரும் 20-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழக கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும் என்பதாலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
20-ந்தேதி கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 21-ந்தேதி தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.