விஜயகாந்துடன் தமிழக பாஜக தலைவர்கள் திடீர் சந்திப்பு: வைகோ காரணமா?

சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை, பாஜக தலைவர்கள் சனிக்கிழமை நேற்று திடீரென சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக தலைவர்கள், இது நட்பின் அடிப்படையிலும், மரியாதை நிமித்தமாகவும் நடைபெற்ற சந்திப்பு என்றனர். இருப்பினும் இது வைகோ.,வின் நடவடிக்கைகளின் பாதிப்பு என்று கூறப்படுகிறது.

பாஜக.,வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக., கூட்டணியை விட்டு ஒரு கட்டத்தில் விலகியது. மேலும், கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக., உள்ளிட்ட பிற கட்சிகள் தங்கள் நிலையை அதன் பின்னர் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இந்நிலையில், ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த தேமுதிக., தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியை வரவேற்று பேட்டி அளித்திருந்தார்.

மேலும், சென்னையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ., மக்கள் நலக் கூட்டணியை விஜயகாந்த் பாராட்டிப் பேசியதாகவும், அவரை நேரில் சந்தித்துப் பேசி, தங்களது கூட்டணிக்கு வர அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மக்கள் நலக் கூட்டணி குறித்த விஜயகாந்தின் கருத்தும், வைகோவின் அழைப்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு உள்ளிட்டோர் விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது என்ன பேசினார்கள் என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக., தலைவர்கள், விஜயகாந்தை நட்பு மற்றும் மரியாதை அடிப்படையில் சந்தித்ததாகவும், அரசியல் ரீதியாக எதையும் பேசவில்லை என்றும் தெரிவித்தனர்.