சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானதல்ல: தொடர்ந்து விசாரணை

புது தில்லி:

காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் இயற்கையானதல்ல, இருப்பினும் அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தில்லி காவல் ஆணையர் பி.எஸ். பஸ்ஸி கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தில்லியில் உள்ல ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். 4 முறை சசி தரூரிடம் விசாரணை நடத்தினர்.

சுனந்தாவுக்கு ‘ரேடியம்’ அளிக்கப்பட்டு அவர் கொலை செய்யப் பட்டிருக்காலம் என தகவல் வெளியானதையடுத்து அவரது உள்ளுறுப்புகளின் மாதிரிகள் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள எப்பிஐ ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எப்பிஐ, சுனந்தா மரணம் குறித்த ஆய்வறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பாக தில்லி போலீஸாருக்கு அனுப்பி வைத்தது. அதில் சுனந்தா உடலில் விஷதன்மையுள்ள எவ்வித ரேடியோ பொருள்களும் இல்லை என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அறிக்கையை ஆய்ந்து உரிய அறிக்கை தருமாறு தில்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவை தில்லி போலீஸார் கேட்டுக் கொண்டனர்.

எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் தங்களது அறிக்கையை தில்லி போலீஸாருக்கு வழங்கிய நிலையில், அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி காவல் ஆணையர் பஸ்ஸி, “சுனந்தா மரணம் இயற்கையான முறையில் நடைபெறவில்லை. இதுவரை கிடைத்த தடயங்கள் அடிப்படையில் அது உறுதியாகியுள்ளது. எப்பிஐ அறிக்கையின்படி, வேறு விதமான வேதியியல் கூட்டுப் பொருள்கள் சுனந்தாவின் உடலில் இருந்துள்ளன.  எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சில முடிவுகளை அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்” என்றார்.