கருணாநிதியாவது செத்தவரை துணைக்கு அழைப்பார்! ஆனால் ராகுல்..? இனி எவரும் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்களே!

ராகுல் இப்போது மீண்டும் தாம் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ரபேல் காந்தி எனும் பட்டப் பெயரைத் தாங்கிக் கொள்வதற்காக, சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ராகுல் மேற்கொள்வது, ஒரு பெரிய கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்தியாவின் தலை எழுத்து இப்படிப்பட்ட அரைவேக்காட்டுத் தனமான நபரைத்தான் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பது!

அண்மைக் காலத்தில் பிரான்ஸ் அதிபர் தன்னிடம் ரபேல் குறித்து சொன்னதாக ஒரு கதை அளந்தார். ரபேல் உடன்படிக்கை ரகசிய உடன்படிக்கை இல்லை என பிரான்ஸ் அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல்காந்தியின் குற்றச் சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்தது.

எப்படியாவது எதையாவது சொல்லி குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது, அல்லது தான் சொல்ல வந்ததை மற்றவர் பெயரைப் பயன்படுத்தி அப்படித்தான் என்று நிரூபிக்க முயல்வது என்பதெல்லாம் அரசியல் வாழ்க்கையில் அசிங்கம் என்பதை ராகுல் உணரும் காலம் வரும். அதற்கு முன், எவருமே ராகுலை தம்மைச் சந்திக்க அனுமதிப்பதையே தவிர்த்து விடும் சம்பவங்கள் அதிகம் நடக்கும்! அப்போது ராகுல் புரிந்து கொள்வார்.

திமுக., தலைவராக இருந்த கருணாநிதி, தாம் சொல்ல விரும்பும் அரசியல் லாப நோக்கிலான கருத்தை, இறந்தவர் பெயரைக் குறிப்பிட்டு, அவர் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று கதை விடுவார். அந்தக் கதைகளை நிரூபிப்பதற்கு சம்பந்தப் பட்ட நபர் உயிருடன் இருந்தால்தானே!

ஆனால், ராகுல் இந்த ஆட்டத்தை உயிருடன் உள்ளவர்களை வைத்து துவங்கியிருப்பது அவருக்கே பெரும் சிக்கல் என்பதையும், அரசியல் வாழ்வில் இருந்து தன்னை அப்புறப் படுத்தி விடும் என்பதையும் அவர் உணரவேண்டியது அவசியம்!

இப்போது, குள்ளநரி விட்ட முதலைக் கண்ணீர் கதை ஆகிவிட்டது, புற்றுநோய் தாக்கிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரைப் பார்த்து ராகுல் நலம் விசாரித்த நாடகம்.

சந்திப்பு நடந்தது 7 நிமிடங்கள்தான்! அதுவும் கோவா சட்டசபையில் வைத்து! தனியாக சந்தித்து பேசியதும் சில நொடிகள்தான்! அதற்குள் ரபேல் விவகாரம் பற்றி எல்லாம் பாரிக்கர், தன்னுடன் பேசியிருப்பதாக ராகுல் ஒரு கதை அளந்திருக்கிறார். அதற்கு பாரிக்கர் மனம் நொந்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

மனோகர் பாரிக்கர் எழுதிய அந்த சாட்டையடி கடிதமே, ராகுலின் அரசியல் வாழ்க்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது போல் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பொய்யரும் சுயநலமியும் இந்திய அரசியலில் இருக்க முடியுமா என்பதற்கான அத்தாட்சியாக அந்தக் கடிதம் விளங்குகிறது. காங்கிரஸால் திணிக்கப் பட்ட ராகுலை ஏன் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் மற்ற கட்சிகள், குறிப்பாக மம்தா, மாயாவதி போன்றவர்களும் மறுக்கிறார்கள் என்பதை நியாயப் படுத்தும் விதமாகவும் இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.

ராகுலுக்கு பாரிக்கர் எழுதிய அந்தக் கடிதத்தின் சாரம்…

“எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து என்னைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தீர்கள். என்னதான் வேறுபாடுகள் இருப்பினும் உடல்நிலை பற்றி விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்துவது அரசியல் நாகரிகம் ஆதலால், உங்களை அந்த நல்ல நோக்கினை கருத்தில் கொண்டு வரவேற்றேன்.

நாம் சந்தித்த ஐந்து நிமிடங்களில் ரஃபேல் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை; நாம் விவாதிக்கவில்லை. ரஃபேல் குறித்து எதையுமே பேசவில்லை.

இவ்வாறு இருக்கையில், “ரஃபேல் முடிவுகள் எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது; ரஃபேல் வாங்கும் விஷயத்தில் நான் பங்கு பெறவேயில்லை” என்று நான் சொன்னதாக ஊடகங்களிடம் கூறி கேவலமான அரசியல் லாபத்துக்காக தங்கள் வருகையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

அரசியல் லாபத்துக்காக மிக மட்டமான அளவுக்குக் கீழிறங்கி பொய்களைப் பேசியுள்ள நீங்கள், நாகரிகம் கருதி உங்களைச் சந்திக்க முன்வந்த என்னை ஏமாற்றியுள்ளீர்கள். கடும் நோயால் துன்பப்படும் என்னைப் பார்த்து நல்வாழ்த்து சொல்ல வரவில்லை. இப்படி வேறு எண்ணத்துடன் வந்திருப்பீர்கள் என நான் சிறிதும் நினைக்கவில்லை.

நோயுற்று அவதிப்படும் ஒரு மனிதனை நலம் விசாரிப்பதை அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக பயன்படுத்தாதீர்கள்”

இப்படி ஒரு கடிதத்தை ஒரு மனிதர் நொந்து நூலாகும் அளவுக்கு எழுதியிருக்கிறார் என்றால், நோய்வாய்ப்பட்டு இருக்கும் அந்த மனிதனை சாகடிப்பதற்கு சமம் என்பதை ராகுல் உணரவேண்டும். இது, கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அநாகரிகம் என்பதை உலகம் உணரவேண்டும்!

இழிவு தரத்தக்க நாடகங்களை அரங்கேற்றி பச்சைப்பொய்களை கூசாமல் தொடர்ந்து பேசி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தான நபர் என்பதை இந்திய மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறார். இத்தகைய நபர்கள் முளையிலேயே கிள்ளி எறியப் படாவிட்டால், அது நம் நாட்டின் புற்றுநோயாய் உருவெடுத்து விரைவிலேயே நாட்டின் ஒற்றுமையையும் எதிர்காலத்தையும் அழித்துவிடும்!

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...