நூற்றாண்டை எட்டும் ‘தமிழ்நேசன்’ நாளிதழ் இன்றுடன் நிறுத்தம்!

நினைவில் நிற்கும் “நேசன்!”-1 : மலேசியாவின் மூத்த நாளேடான தமிழ் நேசன் 2019 ஜனவரி 31ந் தேதியுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது! 94 ஆண்டுகள் தமிழுக்கு அருஞ் சேவையாற்றிய இதழ் நேசன்.

நவீன, மின்னியக்க வண்ணத் தயாரிப்பாகக் கவரும் விதத்தில் வந்த “நேச”னின் உருவாக்கமே தமிழுக்குப் பெருமையளிப்பதாக இருந்தது. ஞாயிறு தோறும் கூடுதல் பக்கங்களுடன் பொலிவுடன் வழங்கப்பட்டு வந்தன. அரசியல், இலக்கியம், ஆன்மீகம், கதை, கட்டுரை, கவிதை, கலை எனப் பல்சுவை அம்சங்களுடன் ஞாயிற்றுப் பதிப்பு திகழும். 

நான் பள்ளி மாணவனாக இருக்கும்போதே எழுத்துத் துறையில் ஈடுபட நேசன் பெரிதும் உறுதுணையாக இருந்தது. 1950களில் மகாத்மா காந்தி, நேதாஜி, பாரதியார் போன்ற தேசத் தலைவர்கள் பற்றிய கட்டுரைகள் எழுதினேன்.

நேசன் நடத்திய கதை வகுப்பில் கவிஞர் கா, பெருமாளும் நானும் கலந்துகொண்டு “தேர்ந்த எழுத்தாளர்கள்” என்ற விருதும் பெற்றோம். இந்த 70 ஆண்டுத் தொடர்பில் நான் எழுதிய ஏராளமான கதைகள், கட்டுரைகள் நேசனில் வெளிவந்திருக்கின்றன. ஒரு விழா எடுத்து எங்களைச் சிறப்பித்தார் டத்தின் இந்திராணி.

இவர்களுடன் துன் எஸ். சாமிவேலு, இவர்கள் மகன் நிர்வாகி எஸ். வேள்பாரி ஆகியோரும் நேசனைப் பல சோதனைகளிலும் சாதனை இதழாக நிறுத்த அரும்பாடு பட்டிருக் கின்றனர். 

இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டைக் காண இருந்த வேளையில் இந்த மூத்த இதழான நேசனுக்கு நேசக் கரம் கொடுத்து உயர்த்திவிடக் கூடியவர்களைக் காண இயலாது போனதுதான் பேரிடியாகவும் பேரிழப்பாகவும் தமிழ் சமூகத்திற்கே பேரதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.

பல்வேறு சமூகங்களிடையே கூடி வாழும் தமிழர்கள் மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினர் எனினும் அவர்களின் சாதனைகளால் பெருங்குடி மக்களுக்கு ஈடு கொடுத்து நிற்க முடிகிறது. தகவல் சாதனங்களில் நூறு ஆண்டை எட்டக்கூடிய ஒரு தமிழ் நாள் இதழை நடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தோம் என்பதே ஒரு சாதனைதான்!

நேசன் ஆசிரியர்களாக இருந்த மலையாண்டிச் செட்டியார், ஆதி நாகப்பன், கு. அழகிரிசாமி, முருகு சுப்பிரமணியன், பி. சந்திரகாந்தம் போன்றோரும் இன்னும் பல துணை ஆசிரியர்களும் புகைப்பட, ஓவியர்கள், கணிப்பொறி வித்தகர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரின் அயரா உழைப்பை நாம் என்றும் மறக்க முடியாது.

நேசனின் சகாப்தம் ஒரு நூற்றாண்டை எட்டும் தருவாயில் தடைப்பட்டு நின்று போனாலும் அந்த இழப்பை இருக்கும் நாளிதழ்கள் இன்னும் சிறப்பான சேவையால் ஈடுகட்டும் என எதிர்பார்ப்போம்!

  • சிங்கப்பூர் சர்மா
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...