‘பகவத் கீதை’ உரைக்கு மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரையில் சில ஆழ்ந்த கருத்துகளைத் தெரிவிக்கிறார். புத்தி தெளிவாகி அறிவு மேம்பட மனதை நேராக்க வேண்டும். அதற்கு குழந்தைகளின் மனநிலையைக் கொண்டிருங்கள் என்கிறார்.
‘பகவத் கீதை’ உரைக்கு மகாகவி பாரதி எழுதியுள்ள முன்னுரை…யில் இருந்து..!
“புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு, நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறந்து விடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது”
— பகவத் கீதை 2ஆம் அத்தியாயம் 50ஆவது ஸ்லோகம்.
இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக்கெல்லாம் அடிப்படையாகும். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தெளிவாக மாசுமறுவின்றி வைத்திருந்தல். தெளிந்த புத்தியே மேற்படி ஸ்லோகத்திலே புத்தி என்று சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக நிறுத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புக்களும், அவற்றுக்காதாரமான பாவநினைப்புக்களுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்.
‘நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி, மோக்ஷ ராஜ்யத்தை எய்தமாட்டீர்கள்’ என்று ஏசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்தைக் கொண்டுதான்.
‘குழந்தைகளைப் போலாய்விடுங்கள்’ என்றால், ‘உங்களுடைய லெளகீக அனுபவங்களையெல்லாம் மறந்து விடுங்கள்; நீங்கள் படித்த படிப்பையெல்லாம் இழந்துவிடுங்கள்; மறுபடி சிசுக்களைப் போலே தாய்ப்பால் குடிக்கவும், மழலைச் சொற்கள் பேச்வுந் தொடங்குங்கள்; என்பது கொள்கையன்று. ‘ஹிருதயத்தைக் குழந்தைகளின் ஹிருதயம்போலே நிஷ்களங்கமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்பது கருத்து.
ஹிருதயம் தெளிந்தாலன்றி புத்தி தெளியாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்த நிலை ஏற்படும்வரை, புத்தி இடையிடையே தெளிந்தாலும், மீண்டும் மீண்டும் குழம்பிப் போய்விடும்.
ஹிருதயம் சுத்தமானால், தெளிந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிறான்: “அந்த அறிவுத் தெளிவிலே நிலைபெற்று நில், அர்ஜுனா” என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது நற்செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே. மனம்போனபடி இருப்பின் அஃதும் நன்றாம். நீ நற்செய்கை, தீச்செய்கை என்ற பேதத்தை மறந்து, உனக்கு இஷ்டப்படி எது வேண்டுமாயினும் செய்யலாம். ஏனென்றால், நீ செய்வதெல்லாம் நன்றாகவே முடியும். உனக்கு புத்தி தெளிந்துவிட்டதன்றோ? புத்தி தெளிவுற்ற இடத்தே உனக்குத் தீயன செய்தல் ஸாத்தியப்படாது. ஆதலால், நீ நல்லது தீயது கருதாமல் மனம் போனபடியெல்லாம் வேலை செய்யலாம்.
இனி, இங்ஙனம் உரை கொள்ளாதபடி, ‘நற்செய்கை தீச்செய்கை, அதாவது எல்லாவிதமான செய்கையையுந் துறந்துவிட்டு, அர்ஜுனா, நீ எப்போதும் தூங்கிக் கொண்டேயிரு’ என்று கடவுள் உபதேசம் பண்ணியதாகக் கருதுதல் வெறும் மடமையைத் தவிர வேறொன்றுமில்லை.
ஏனென்றால், கடவுளே மேலே மூன்றாம் அத்தியாயத்தில் பின்வருமாறு சொல்லுகிறார்: “மேலும், எவனும் ஒரு க்ஷணமேனும் செய்கையின்றி இருத்தல் இயலாது. எல்லா உயிர்களும் இயற்கையில் தோன்றும் குணங்களால் தமது வசமின்றியே தொழிலில் பூட்டப்படுகின்றன” என.
ஆதலால் மனிதன் தொழில் செய்துதான் தீரவேண்டும். எப்போதும் தூங்கக் கும்பகர்ணனாலே கூட இயலாது. அவனுக்குக்கூட ஆறு மாஸகாலம் விழிப்பு உண்டு. ஆனால் நீ தொழில் செய்யுமிடத்தே, அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு மனமுடைந்து ஓயாமல் துன்பப்பட்டுக் கொண்டே தொழில் செய்யாதே. ஸ்ரீபகவான் சொல்லுகிறான்; “அர்ஜுனா! உனக்குத் தொழில் செய்யத்தான் அதிகாரமுண்டு, பயன்களில் உனக்கு எவ்வித அதிகாரமும் எப்போதுமில்லை” என.
ஆதலால், கடவுள் சொல்லுகிறார், “கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி; அவனே யோகி” என்று.
அறிவுத் தெளிவைத் தவறவிடாதே. பின் ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அது நல்லதாகவே முடியும். நீ சும்மா இருந்தாலும், அப்போது உன் மனம் தனக்குத்தான் ஏதேனும் நன்மை செய்து கொண்டேயிருக்கும். உடம்பினால் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா? படிப்பு தொழில் இல்லையா? மனனம் தொழில் இல்லையா? சாஸ்திரங்களெல்லாம், கவிதைகளெல்லாம், நாடகங்களெல்லாம், சட்டங்களெல்லாம், வேதங்களெல்லாம், புராணங்களெல்லாம், கதைகளெல்லாம், காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா? இவையெல்லாம் உடம்பாற் செய்வதின்றி மனத்தாற் செய்யப்படுவன அன்றோ?
அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே! அப்பால், “யோகம் பண்ணு. எதன் பொருட்டெனில் யோகமே செய்கைகளில் திறமையாவது” என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்லுகிறான்.
தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும்.
யோகமாவது சமத்துவம். “ஸமத்துவம் யோக உச்யதே” அதாவது, பிறிதொரு பொருள கவனிக்குமிடத்து, அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும், சலிப்பேனும், பயமேனும் இன்றி, அதை ஆழ்ந்து, மனம் முழுதையும் அதனுடன் லயப்படுத்தி கவனிப்பதாகிய பயிற்சி.
நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.
“யோகஸ்த: குரு கர்மாணி” என்று கடவுள் சொல்லுகிறார். “யோகத்தில் நின்று தொழில்களைச் செய்” என.
யோகி தன் அறிவைக் கடவுளின் அறிவுபோல விசாலப்படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்றால், ஊன்றிக் கவனிக்கும் வழக்கம் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய்விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத் தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் கடவுள் எங்கும் இருப்பதைக் காண்கிறான்.