கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாள்களாக திருநெல்வேலியில் அல்வா விற்பனை முடங்கியுள்ளதால் சுமார் ரூ.50 கோடிக்கும் மேல் வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக அல்வா திகழ்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் இறக்குமதி பண்டமான அல்வா, தாமிரவருணி தண்ணீரால் கூடுதல் சுவை பெற்று திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்து வருகிறது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை நகரங்களில் அல்வா விற்பனையை மட்டுமே நம்பி 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிட்ட சில கடைகளில் தினமும் 300 கிலோவுக்கு மேல் அல்வா விற்பனையாகிறது.
திருநெல்வேலி நகரத்தில் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலின் அருகேயுள்ள இருட்டுக்கடை, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள புராதான லாலா கடைகள் ஆகியவற்றில் பண்டிகைக் காலங்களிலும், கோடை விடுமுறைக் காலத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்துதான் மக்கள் அல்வாவை வாங்கிச் செல்வது வழக்கம்.
ஆனால், கொரோனாவிற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25 -ஆம் தேதி முதல் திருநெல்வேலி மாவட்ட இனிப்பகங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அல்வா விற்பனை முடங்கியுள்ளது.
அதனை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது.
2000 கிலோ விற்பனை: இதுகுறித்து அல்வா தயாரிக்கும் தலைமை சமையல் கலைஞர் ஒருவர் கூறியது: அல்வா தயாரிப்பு மிகப்பெரிய வேலை கொண்டது. 12 மணி நேரம் கோதுமையை நனைய வைத்து பால் எடுக்க வேண்டும். பின்னர் அதனை 12 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்
அந்தப் பாலுடன், சர்க்கரை, நெய், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்த்துதான் அல்வா தயாரிக்கப்படுகிறது. 4 கிலோ கோதுமையை அரைத்தால்தான் ஒரு லிட்டர் பால் கிடைக்கும். இதற்காக பஞ்சாபில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் தினமும் 2 ஆயிரம் கிலோ அல்வா உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இது தவிர வழக்கமான பூந்தி, ஜிலேபி, லட்டு, பாதுஷா, மைசூர்பாகு போன்ற 30 வகையான இனிப்பு வகைகளும், மிக்சர், காராபூந்தி, சீவல், காரசேவு, பக்கோடா, சீடை உள்ளிட்ட 20}க்கும் மேற்பட்ட கார வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இனிப்பகங்களை நம்பி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இனிப்பகங்கள் வராது என்பதால் கடந்த 40 நாள்களாக இனிப்பகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் இனிப்பக தொழிலாளர்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றார்.
இதுகுறித்து அல்வா கடை உரிமையாளர்கள் கூறியது: திருநெல்வேலி அல்வா உலகப்புகழ் பெற்றதாகும். இளையதலைமுறையைக் கவரும் வகையில் ரோஜாப்பூ அல்வா, பழங்கள் அல்வா, பேரீட்சை அல்வா, வெள்ளரி அல்வா, திருபாகம், வெள்ளரி அல்வா, தேங்காய்ப்பால் அல்வா, மஸ்கோத் அல்வா உள்பட 10-க்கும் மேற்பட்ட வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனாலும், கோதுமைப் பால் அல்வாவே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. திருநெல்வேலியில் 24 மணி நேரமும் அல்வா விற்பனையாகிறது.
சபரிமலை ஐயப்ப சீசன் காலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் முடித்த கையோடு குற்றால அருவி அல்லது கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குளித்துவிட்டு திருநெல்வேலி அல்வா வாங்காமல் வீடு திரும்புவதில்லை. இதேபோல கோடைக்காலத்தில் தென்தமிழக சுற்றுலாவைத் திட்டமிடும் அனைவரும் தித்திக்கும் அல்வாவை சுவைக்காமல் செல்வதில்லை.
கோடை விடுமுறைக் காலத்தில் மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து வீடு திரும்புவோரும், அங்கு வசிக்கும் தங்கள் உறவினர்களைப் பார்க்கச் செல்வோரும் அல்வா வாங்காமல் செல்வதில்லை.
திருநெல்வேலியில் இருந்து தினமும் பேருந்து மற்றும் ரயில்களில் 500 கிலோவுக்கு மேல் வெளிமாவட்டங்களுக்கு அல்வா ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகள், மும்பை, தில்லி நகரங்களுக்கும் தினமும் 100 கிலோவுக்கு மேல் ஏற்றுமதியாகி வருகிறது. மஸ்கோத் அல்வாவை குறைந்தது 3 வாரங்கள் வரை வைத்து சுவைக்க முடியும் என்பதால் வெளிநாடுகளுக்கு மஸ்கோத் அல்வா அதிகம் செல்கிறது. ஆன்லைன் வர்த்தக முறையிலும் இப்போது திருநெல்வேலியில் இருந்து அல்வா விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு: கொரோனா ஊரடங்கு காலத்தில் அல்வா விற்பனையின்மையால் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதர இனிப்பு, கார வகைகளால் விற்பனையையும் சேர்த்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இனிப்பகங்களில் மட்டும் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனிப்பக தொழிலாளிகள் மட்டுமன்றி கோதுமை, சர்க்கரை இறக்குமதியாளர்கள், நெய் உற்பத்தியாளர்களும் வேலையிழந்துள்ளனர்.
கொரோனாவுக்காக ஒட்டுமொத்த நாடும் போராடும்போது அதில் விதிவிலக்கு எதிர்பார்ப்பது சரியல்ல. அதேநேரத்தில் வேலையிழப்பை சந்தித்துள்ள தொழிலாளிகள், கடை உரிமையாளர்களுக்கு தேவையான கடனுதவிகளை அளிக்க அரசு முன்வர வேண்டும் என்றனர்