
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
இருவரும் நன்றாக பேசி பழகி வந்த நிலையில், நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து கண்ணன் அடிக்கடி ஜெய்ஹிந்த்புரம் வந்து அப்பெண்ணை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இருவரும் பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களும் எடுத்து கொண்டனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கும் கண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக அந்த பெண் கண்ணனுடன் பேசாமல் விலகி சென்றுள்ளார்.
இந்நிலையில் பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை கண்ணன் தெரிந்து கொண்டார். இதனையடுத்து ஃபேஸ்புக்கில் போலி பக்கத்தை உருவாக்கினார் கண்ணன். அதில் இளம் பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார்.
அதோடு நிற்காமல் அந்த பெண்ணை கல்யாணம் செய்யவிருந்த மணமகனுக்கும் போட்டோக்களை அனுப்பினார். இதனால் நடக்க இருந்த திருமணம் நின்றது. மேலும் லட்சக்கணக்கில் பணம் தந்தால் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிடுகிறேன் என அவர் பெண்ணின் தந்தையை மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் இணையதளம் மூலமாக மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிற்கு புகார் தெரிவித்தார்.
ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் சேது மணிமாதவன் தலைமையில் தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் 2 மணி நேரத்தில் மதுரையில் பதுங்கியிருந்த கண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.