spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்குளிர்பான நிறுவனத்துக்கு சிப்காட்டில் இடம்: ஆட்சியரிடம் முறையிடும் பொதுமக்கள்!

குளிர்பான நிறுவனத்துக்கு சிப்காட்டில் இடம்: ஆட்சியரிடம் முறையிடும் பொதுமக்கள்!

- Advertisement -

பெருந்துறை சிப்காட்டில் பொடாரன் குளிர்பானக் கம்பெனிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரியும், ஓடைக்காட்டூர் குளத்தில் திடக் கழிவுகளை அகற்றி தூர்வாரக் கோரியும் 12-7-2019 அன்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கருக்கங்காட்டூர் ஊர் பொதுமக்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று மாலை 6.00 மணிக்கு பெருந்துறை, கருங்கங்காட்டூரில் என்.சதீஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் V.M.கந்தசாமி, K.V.பொன்னையன், S.பொன்னுசாமி, O.C.சண்முகம், V.T.ஜெகதீஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவற்றில்…

1) சிப்காட்டில் பொடாரன் குளிர்பானக் கம்பெனிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!

பெருந்துறை சிப்காட்டில் பொறியியல் தொழில்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத்தில், விதிகளைத் தளர்த்தி, பொடாரன் குளிர்பானக் கம்பெனி உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சுமார் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி பொதுமக்கள் மனதில் எழுகிறது.

இதே சிப்காட்டில், கடந்த 2015 ஆம் ஆண்டில் கோகோ கோலா குளிர்பானக் கம்பெனி அமைவதை எதிர்த்து பொதுமக்கள் தொடந்து போராடியதால் அந்நிறுனத்திற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதோடு, அந்நிறுவனத்திற்கு வழங்கிய 71.34 ஏக்கர் நிலம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், மீண்டும் அதே தன்மையுள்ள, தண்ணீரை மூலப்பொருளாக கொண்ட குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இதில் முதல் கட்டமாக பொடாரன் குளிர்பானக் கம்பெனி கட்டுமானப் பணிகளைத் துவங்கியது. இத்தொழிற்சாலை அமைந்தால் இப்பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறையும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்பதால் இதற்கு இப்பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆகவே, கடந்த 27-6-2019 அன்று உயர்திரு. வட்டாட்சியர், பெருந்துறை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிப்காட் மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும், கடந்த 1-7-2019 அன்று உயர்திரு.கோட்டாச்சியர், ஈரோடு அவர்கள் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்திலும் இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது நிறைவாக, இக்கம்பெனி மேற்கொண்டு வந்த கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை வரவேற்கிறோம்.

மேலும், இப்பகுதி பொதுமக்களின் நலன்கருதி பொடாரன் குளிர்பானக் கம்பெனிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்நிறுவனத்திற்கு எக்காரணம் கொண்டும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி வழங்கக் கூடாது என்றும் மக்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும், சக்தி மசாலா நிறுவனத்தினர் கோட்டாட்சியர்  தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி, அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மசாலா பொருட்கள் தயாரிப்பதற்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்து விட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் குளிர்பதனக் கிடங்குகள் (Cold Storage) அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் பொதுமக்களுக்கும் மக்கள் நலச் சங்கத்திற்கும் ஆட்சேபணை இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன், எதிர்காலத்தில் சிப்காட்டில் சுற்றுச் சூழலையும், பொதுமக்களையும் பாதிக்கும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் அனுமதி வழங்கக் கூடாது என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2) ஓடைக்காட்டூர் குளத்தில் திடக்கழிவுகளை அகற்றி தூர்வாரக் கோருதல்:

பெருந்துறை சிப்காட்டையொட்டி, வரப்பாளையம் ஊராட்சி, ஓடைக்காட்டூரில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. இக்குளம் இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக விளக்கி வருகிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னால் சிப்காட்டில் செயல்படும் சாயத் தொழிற் சாலைகளின் பொதுசுத்திகரிப்பு நிலையத்தில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறிய பல லட்சம் லிட்டர் நச்சு கழிவு நீர் குட்டப்பாளையம் ஓடை வழியாக சென்று இக்குளத்தில் தேங்கி நிற்கிறது. அதோடு சாயம் மற்றும் தோல் தொழிற் சாலைகளின் பொது சுத்திகரிப்பு பகுதியில் இருந்து கசிவு நீர் வெளியேறி மேற்படி ஓடை வழியாக இக்குளத்தில் தேங்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள நச்சு திடக்கழிவுகள் இக்குளத்தில் புதைந்துள்ளன. இதன் காரணமாக இக்குளத்தில் உள்ள தண்ணீரில் லிட்டருக்கு 5000 TDS என்ற அளவுக்கு மேல் மாசடைந்துள்ளது.

கடந்த ஓராண்டாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவும், கடுமையான வறட்சியின் காரணமாகவும் இக்குளத்தில் தண்ணீர் வற்றியுள்ளது.

ஆகவே, மழைக்காலம் தொடங்கும் முன்பாக இக்குளத்தில் புதைந்துள்ள திடக்கழிவுகளை அகற்றி குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது. கழிவுநீரை வெளியேற்றி குளத்தில் தேங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்திய தொழிற்சாலைகள் மீது தொடரப்பட்ட வழக்கில் இத்தொழிற் சாலைகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை வட்டியோடு சுமார் ரூ 17 லட்சத்திற்கும் மேல் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளது. ஆகவே, போர்க்கால வேகத்தில் இக்குளத்தில் உள்ள திடக்கழிவுகளை அகற்றி தூர்வார வேண்டும் என மக்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.

எனவே, வரும் 12-7-2019 வெள்ளி காலை 10.00 மணிக்கு பாதிக்கப்படும் மக்களோடு சென்று மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி: – கே.சி.கந்தசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe