
தமிழகத்தில் இன்று 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது! இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக 1000த்தைக் கடந்து கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப் பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று 4ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐக் கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,000ஐக் கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் சென்னையில் தொற்று பாதிப்பு 1,000ஐக் கடந்தது. சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு 17,000ஐக் கடந்துள்ளது. அவ்வகையில் சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 17,598ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரம், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தொற்றில், ஐக்கிய அரபு அமீரகம், துபாயிலிருந்து வந்தவர்களில் 15 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 58 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 19 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
