தேசிய மக்கள் நீதிமன்றம்: புதுவையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி வைக்கிறார்

புதுச்சேரி:
புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தொடங்கிவைக்கிறார்.

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்று (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் அந்தந்த நீதிமன்றங்களிலும் நடைபெறுகிறது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சமாதானம் செய்யத்தக்க குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், உரிமையியல் சிவில் வழக்குகள், வருவாய்த்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வழக்குகள், சிவில் மேல்முறையீடு, குற்றவியல் வழக்கு மேல்முறையீடு மற்ற வகையான மேல்முறையீடு வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், ஓய்வூதியநிலுவை சம்பந்தப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையம் செய்துள்ளது.

மேலும் இன்றைய தினம் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவில், இந்திய அரசிய லமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் புதுச்சேரியில் உள்ள அரசு கல்லூரிகள், அரசு மேல்நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நடந்த கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.

மேலும் புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செய்தி தொகுப்பு வெளியீடு மற்றும் புதுச்சேரியில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் 4-வது குற்றவியல் நீதிமன்றம், காரைக்கால் குடும்ப நீதிமன்றம் மற்றும் சார்பு நிலை நீதிமன்றங்களில் திறப்பு விழாவும் நடக்கிறது. ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணைய செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான ஜெய்சந்திரன், நீதிபதி சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விழா நடக்கிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.