
கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில் வானதி சீனிவாசன், விளக்கேற்றி வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இறைவன் அருளால் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கோவை இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. கோவையில் பயங்கரவாத செயல்கள் நடந்தும் இன்னும் முதல்வர் வந்து பார்க்கவில்லை. இது பற்றி முதல்வர் இன்னும் பேசாதது ஏன்? கோவையை முதல்வர் இன்னும் பழிவாங்கும் எண்ணத்துடன் தான் இருக்கிறார் என்ற எண்ணம் எழுகிறது.
உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. இது ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் கிடையாது. தமிழக மண், பயங்கரவாதத்தை அனுமதிக்காது எனில், இந்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைக்க வேண்டும்.
இதில் முதல்வருக்கு கவுரவ பிரச்னை இருக்க கூடாது. தமிழகம் முழுவதும் இது மாதிரியான பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.