படிச்சது மெரிட்லயா? ரெகமெண்டேஷன்லயா? சூடுபிடிக்கும் தமிழிசை-அன்புமணி விவாதம்!

இதை அடுத்து, சேலம் சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்த விவாதம், மரம் வெட்டுவதில் துவங்கி, அறிவாளி வரை சென்று, தற்போது டாக்டர் பட்டத்தில் வந்து நிற்கிறது.

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை விவகாரம் இப்போது வேறு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பாஜக., பாமக., இடையிலான வார்த்தைச் சவடால் போர் இப்போது சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.

சேலம் -சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை அறிவித்தார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். அதற்கான காரணங்களில் ஒன்றாக, ஆயிரக்கணக்கான மரங்கள் இந்த திட்டத்தால் வெட்டப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து ஒரு டிவி., விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக., தலைவர் தமிழிசை, மரம் வெட்டுவது குறித்து ராமதாஸ் பேசுவதா? என்று சொல்லி சிரித்துக் கொண்டார்.

இந்த விவகாரம் பெரிய அளவில் பாமக.,வினரால் முன்னெடுக்கப் பட்டது. துவக்க காலத்தில் சாலை ஓர மரங்களை வெட்டி போக்குவரத்தை நிறுத்தி போராட்டங்களை நடத்தி பேர் பெற்ற வன்னியர் சங்கத்தில் இருந்து பாமக., என்ற கட்சி உருவான பின்னர், அதன் நிறுவுனர் ராமதாஸ்  செய்த முதல் வேலை பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் பல்வேறு இடங்களில் மரங்களை நடச் செய்ததுதான். இந்த அமைப்புக்கு அன்புமணி ராமதாஸ் மற்றும் அவர் மனைவி சௌம்யா அன்புமணி ஆகியோர் பொறுப்பு ஏற்று, பிரசாரங்களைச் செய்து வருவதுடன், மரம் நடு விழாக்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பழைய விவகாரத்தைக் கிளறப் போக, இப்போது தமிழிசைக்கும் பாமக.,வுக்கும் வார்த்தை மோதல் மட்டுமல்ல, கைகலப்பும் ஏற்பட்டிருக்கிறது. தனக்கு இரவு பகல் பாராமல் நடு இரவிலும் தொலைபேசியில் அழைத்து பாமக.,காரர்கள் மிரட்டுகின்றார்கள் என்று தமிழிசை புகார் தெரிவித்தார்.இதை அடுத்து, தனது ‘சாதிக்கார’ செய்தி தொலைக்காட்சியில் தாம் அளித்த பேட்டியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழிசை, தான் பாமக., நிறுவுனர் ராமதாஸ் குறித்தோ, அவரது கட்சியினர் குறித்தோ தாம் தவறாக எந்த வார்த்தையும் பேசவில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் டாக்டர் தமிழிசைக்கும் டாக்டர் அன்புமணிக்கும் டாக்டர்த்தனமான வார்த்தைப் போர் இப்போது துவங்கியுள்ளது. யார் மெரிட்டில் டாக்டர் சீட் வாங்கி படித்தவர் என்றும், யார் ரெகமெண்டேஷனில் சேர்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர் என்றும் பேசுமளவுக்கு அடுத்த கட்ட வார்த்தை யுத்தத்துக்கு அன்புமணி தயாராகிவிட்டார். அதனை தனது டிவிட்டர் பதிவுகளில் வரிசையாகப் போட்டு வந்தார் அன்புமணி.

தொடர்ந்து, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், தாம் மெரிட்டில் எம்.பி.பி.எஸ். படித்ததாகவும், தமிழிசை ரெகமண்டேசனில் படித்ததாகவும், எனவே அவர் தான் அறிவாளி என்றும் தெரிவித்தார். சமுதாயம் குறித்து இழிவாகப் பேசியதற்காக தமிழிசை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்திக் கூறினார்.

இதை அடுத்து, சேலம் சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டம் குறித்த விவாதம், மரம் வெட்டுவதில் துவங்கி, அறிவாளி வரை சென்று, தற்போது டாக்டர் பட்டத்தில் வந்து நிற்கிறது.