உள்கட்சி உரசலில் திமுக.,! அதற்குக் காரணம் பாமக.,!

தமிழகத்தில் கடந்த வாரம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய விவகாரம் என்றால் அது, பாமக.,வினால் ஏற்பட்டது தான்!

முந்தைய நாள் வரை அதிமுக., அரசை விமர்சனம் செய்து கொண்டிருந்த பாமக., திடீரென்று அக்கட்சியுடன் கூட்டணியில் போய்ச் சேரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் எதிர்பாராதவை நடப்பதுதானே அதிரடி அரசியல்! அந்த அதிரடி அரசியலை அரங்கேற்றியது பாமக.,!

பாமக., கடந்த சில வருடங்களாக கழகங்கள் இல்லா தமிழகம் என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் செய்து வந்தது. திமுக., அதிமுக., இரண்டு கட்சிகளுடனும் இனி கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறி வந்த பாமக.,வுடன், திமுக., கூட்டணிப் பேச்சைத் துவங்கியது. ஆனால் சீட் பேரம் பேசும் கட்சிகளில் முதலாவது கட்சி என்று பேர் பெற்ற பாமக., கடந்த காலங்களில் இரு கட்சிகளுடனும் பேரம் பேசி, எங்கே தங்களுக்கு கூடுதல் தொகுதிகளும் கூடுதல் லாபமும் கிடைக்கிறதோ அங்கே சேருவது ஒரு கொள்கை என்ற அளவில் இருந்து வந்தது.

ஆனால் இந்தக் கொள்கையை கொஞ்ச காலம் புறம் தள்ளிவைத்து, இரு கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து கடந்த இரு தேர்தல்களை அவ்வாறே சந்தித்தது. ஆனால் எதிர்பார்த்த வாக்குகளைப் பெற இயலவில்லை. காரணம், ஜெயலலிதா ஒட்டு மொத்த ஓட்டுகளையும் அப்படியே அள்ளினார்.

ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுக., பலவீனப்பட்டுள்ள நிலையில், பாமக., அக்கட்சியுடன் கூட்டணிக்குச் செல்லாது என்று திமுக., கணக்குப் போட்டது. அதே நேரம், கருணாநிதி இல்லாத நிலையில் கோமாளித்தன அரசியல் செய்து வரும் ஸ்டாலினுடன் செல்வது தங்களுக்கு பாதகமே என்று பாமக.,வும் முடிவு செய்தது. இரு கழகங்களும் பலவீனம் அடைந்துள்ள நிலையில், குறிப்பிடத் தக்க தொகுதிகளைப் பெற்று மீண்டும் தில்லிக்கும் கோட்டைக்கும் தங்களது உறுப்பினர்களை அனுப்ப வேண்டுமானால், புதிய கொள்கைகளை வகுக்க வேண்டிய நிலையில் இருந்த பாமக., இடைக்கால கழகங்கள் இல்லா தமிழகம் கொள்கையை பரணில் வைத்தது.

இந்நிலையில், பாமக., தங்களுடன் நிச்சயம் வரும், சரிந்து விட்ட திமுக.,வின் ஓட்டு வங்கியை சரிக்கட்ட, பாமக.,வை உள்ளே இழுக்க வேண்டும் என்று திமுக., மிகவும் முயன்றது. அதற்காக திரைமறைவுப் பேச்சுகள் எல்லாம் நடந்தன. இதனை அன்புமணி ராமதாஸும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார். இரு கட்சிகளுடனும் கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்றார். ஆனால் திடீரென அதிமுக., பக்கம் சாய்ந்ததில் மிகவும் நொந்துபோனது திமுக.,தான்!

காரணம், அதிமுக., செய்து கொண்ட உடன்படிக்கை! 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக.,வுக்கு பாமக., நிபந்தனை அற்ற ஆதரவு தரும் என்ற அந்த அறிவிப்புதான்! இந்தத் தொகுதிகளில் பெரும்பாலானவை தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ளன. பாமக., கணிசமாக ஓட்டு வங்கி வைத்திருக்கும் இந்தத் தொகுதிகளில் திமுக., போட்டியிட்டு வென்றால், சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்று தாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அமையும் என்று நம்பிக் கொண்டிருந்தது திமுக.,!

ஆனால் பாமக.,வினால், இன்னும் இரு வருடங்கள் தாக்குப் பிடிக்க வேண்டுமே எனும் கவலை திமுக.,வுக்கு வந்துவிட்டது. ஜெயலலிதா மறைந்த பின்னர் ஆட்சிக் கட்டிலில் தாங்களே அமர்வோம் என்று நம்பிக்கொண்டு பல்வேறு திரைமறைவு எதிர்மறை அரசியலைச் செய்து வந்த போதும், அதிமுக.,வை அசைக்க முடியாமல் போனது! காரணம், மத்திய பாஜக., ஆட்சியாளர்களின் ஆசியுடன் அதிமுக., மேலும் உடைந்து சிதறாமல் தப்பியது.

இந்நிலையில், பாமக.,வின் முடிவால் திமுக.,வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாமக., தனது முடிவை அறிவித்த உடனேயே ஸ்டாலின் மிகக் கேவலமான வார்த்தைகளால் நிதானம் இழந்து வசை பாடினார். திராவிட இயக்கத்தின் வாரிசு எப்படிப் பேச வேண்டுமோ அப்படியே மேடைப் பேச்சில் நாலாந்தர வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்து தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், அந்த வகையில் திமுக.,வின் அடுத்த கட்டத் தலைவரான துரைமுருகனால் வெளிப்படுத்த இயலவில்லை. வெறுமனே பார்க்கும் நபர்களிடம் எல்லாம் புலம்பித் தள்ளுகிறார்… துரைமுருகன்!

நானும், ஜெகத்ரட்சகனும் தைலாபுரம் தோட்டத்திற்கு போய் இருந்தால் பாமக கூட்டணி மிகவும் எளிதாக அமைந்து இருக்கும். ஆனால், ஸ்டாலின் குடும்பத்தின் வாரிசுதான் தன்னிச்சையாக பேசி காரியத்தைக் கெடுத்து விட்டார் என்று வெளிப்படையாகவே சொல்லி வருகிறாராம் துரை முருகன்.

திமுக.,வுக்குத்தான் பாமக.,வின் ஒட்டுறவு எவ்வளவு தேவையாய் இருக்கிறது?!

அந்த இயலாமை, ஆத்திரத்தின் வெளிப்பாடுதான், சமூக வலைத்தளங்களில் பாமக.,வை வசை பாட என்று தனது குழுவுக்கு ப்ராஜக்ட் ஒர்க் கொடுத்திருக்கிறது திமுக., என்கிறார்கள்! தொடர்ந்து வன்னியர் சங்கத்தை தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாகவும், காடுவெட்டி குருவின் குடும்பத்தை கிளப்பிக் கொண்டிருப்பதாகவும் பல விதமான பேச்சுகள் பூதமாய்க் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...