Home Blog Page 6034

இ.எஸ்.ஐ. கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த முடிவு: முதல்வர் கடிதம்

panneerselvamசென்னை: சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் அனுப்பிய கடிதத்தில், சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்த தமிழக அரசு கொள்கை முடிவு மேற்கொண்டுள்ளது . அவ்வாறு தமிழக அரசு ஏற்று நடத்தும்பட்சத்தில், இரு கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் 85% தமிழக அரசுக்கும், எஞ்சிய 15% அனைத்திந்திய அளவுக்கும் ஒதுக்கீடு பகிரப்படும். தமிழக அரசின் இந்த முடிவை, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையும், காப்பீடும் வழங்குவதற்காக இ.எஸ்.ஐ சார்பில் நாடு முழுவதும் 21 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு கல்லூரி சென்னையில் செயல்படுகிறது. கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு திறக்கப்படவில்லை. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக மருத்துவக் கல்லூரிகளை மூட இ.எஸ்.ஐ., முடிவு செய்திருந்தது.

மகப்பேறு காலத்தில் தன்னிச்சையாக மருந்துகள் வேண்டாம்

மகப்பேறு காலத்தில் பெண்கள் தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக் கூடாது என்று அரசு பொதுமருத்துவமனை இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் கூறுகிறார். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இரைப்பை-குடல் பிரச்னை தொடர்பாக அவசர சிகிச்சை தேவைப்படும் நிலையில் மருத்துவ ரீதியாக அதைச் சமாளிப்பது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:- “பெண்கள் மகப்பேறு காலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக்கூடாது. மாறாக, டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.மகப்பேறு காலத்தில் ஒட்டுக்குடல், பித்தப்பையில் கல், தொடர் குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனுக்குடன் டாக்டர்களை அணுகுவதுடன் தேவைப்படும் பட்சத்தில் ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் இருக்கும் பெண்கள் தங்கள் உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். உணவில் உப்பை அறவே தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பின் மாத்திரைகள் சாப்பிடுவதை விட உணவு வகைகள் மூலம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் மேற்கொண்டு ஏற்படும் இடர்பாடுகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும்” என்றார் டாக்டர் சந்திரமோகன்.

தவறான புரிதல்: தேசிய கீதம் இசைத்தபோது மேடையிறங்கிய சர்ச்சைக்கு ஆளுநர் தரப்பு விளக்கம்

karnataka_governorபெங்களூரு: தேசியகீதம் இசைத்தபோது கர்நாடக ஆளுநர் மேடையைவிட்டு இறங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தவறான புரிந்துணர்வில் ஏற்பட்டுவிட்டதாக ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராஜ்பவனில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராகவேந்திர சிங் சௌஹானுக்கு பதவிப் பிராமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, மேடையில் தலைமை நீதிபதி வகேலா உட்பட புதிதாக பதவி ஏற்ற நீதிபதி ராகவேந்திரசிங் சவுகான் மற்றும் தலைமை செயலாளர் முகர்ஜி உள்ளிட்டோர் எழுந்து நின்றனர். ஆனால் தேசிய கீதம் ஒலிக்கும் முன்பே ஆளுநர் பாஜ்பாய் மேடையில் இருந்து இறங்கியதால், நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உதவியாளர் இதுபற்றிக் கூற, தவறை உணர்ந்து உடனே அவர் மேடையில் ஏறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய கீதத்தை ஆளுநர் அவமானப் படுத்த வில்லை என்றும், கவனக்குறைவின் காரணமாக கழிவறைக்குச் செல்லும் அவசரத்தில் கீழே இறங்கினார் என்றும் பின்னர் தெரிய வந்தது. இது குறித்த விளக்கத்தை ஆளுநர் மாளிகை பின்னர் தெரிவித்தது.   https://www.youtube.com/watch?v=Wr-IGMLyzHE

கிள்ளிவளவனுக்கு நிதியுதவி: ஜெயலலிதாவுக்கு தமிழருவி மணியன் பாராட்டு

சென்னை:

கிள்ளிவளவனுக்கு நிதியுதவி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

நீதிக்கட்சியில் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னாளில்  அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த தோழராய் அவரோடு நெருக்கமாக அரசியல் களம் கண்டு, அவருடைய ‘ஹோம்லேண்ட்’ ஆங்கில  இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று அரும்பணியாற்றிய கிள்ளிவளவன் பெருந்தலைவர் காமராஜரால்  ஈர்க்கப்பட்டு  காங்கிரஸ் பேரியக்கத்திற்காகத்  தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட தனித்துவம் மிக்க  நெறிசார்ந்த அரசியல்வாதி ஆவார் .

வாழப்பாடி இராமமூர்த்தி முதல் பழ. நெடுமாறன் வரை இவருடைய ஆழ்ந்தகன்ற அரசியல் அறிவில் பெரிதும்  ஈடுபாடு  கொண்டவர்கள்.

சுயநலச் சிந்தனையுடன் பொது வாழ்க்கையில் வலம்  வரும்  போலித்தனமும் பொய்ம்மையும்  நிறைந்த மலினமான மனிதர்களுக்கு நடுவில்,  தனக்கென்று எதையும் பெரிதாக எதிர்பாராமல்  தன்  தெளிந்த அரசியல் ஞானத்தைத் தான் நெஞ்சில் நேர்ந்து கொண்ட தலைவர்களுக்காகவும் இயக்கங்களுக்காகவும் அர்ப்பணித்த அரிய  மனிதர் கிள்ளிவளவன்.

அரவணைப்பின்றி வயோதிகத்தில் நோயுற்று வாடும் அவருடைய நிலையறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அன்புடன் உதவிக்கரம் நீட்டி அவரது பெயரில் ஐந்து இலட்சம் ரூபாயை  டெபாசிட் செய்ததுடன், உடனடி செலவுக்காக ரூ.5000/- அளித்திருப்பதும்,  அமைச்சர்களை நேரிடையாக அனுப்பி வைத்து ஆறுதல் வழங்கி இருப்பதும் பாராட்டுக்குரிய பண்பு நலனாகும்.

முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருக்கு உள்ளம் கனிந்து உதவிக்கரம் நீட்டிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு காந்திய மக்கள் இயக்கம் தன்  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

எழுத்துரிமை என்ற பெயரில் ஆபாச எழுத்தை ஆதரிக்கும் கம்யூஸ்ட்களுக்கு கொ.ஜ.க. கண்டனம்

சென்னை: கருத்துரிமை,பேச்சுரிமை,எழுத்துரிமை என்ற பெயரில் ஆபாச புத்தக எழுத்தாளர்களை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு எழுதியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: Ø கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சிலர் பொருளாதாரஆதாயத்திற்காகவும்,தங்களை பிரபலபடுத்திக்கொள்ளவும் கொங்கு மண்டலத்தில் அமைதியாக வாழ்ந்துவரும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்தும்,அவர்கள் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கேவலப்படுத்தியும் ஆபாச புத்தகங்களை எழுதிவருகின்றார்கள். Ø திருச்செங்கோட்டை மையமாகக் கொண்டு பெருமாள் முருகனும்,கரூரை மையமாககே கொண்டு புலியூர் முருகேசனும் இதற்கு சிறந்த உதாரணங்கள். Ø எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லாமல் பெருமாள் முருகனும்,புலியூர் முருகேசனும் காமக்கதைகள் எழுதுவதுபோல புத்தகங்களை எழுதி மரியாதையோடு வாழ்ந்துவரும் ஒரு சமுதாயத்தின்மீது தன் வக்கிரங்களை கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். Ø இதுபோல எந்தவொரு சமுதாயத்தைப்பற்றி எழுதினாலும் யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.இதை அனுமதிக்கவும் முடியாது. Ø இதுபோன்ற ஆபாச புத்தகம் எழுதும் எழுத்தாளர்களை கண்டிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்கள் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அவர்களுக்காக போராட்டம் நடத்துவதும்,அறிக்கை வெளியிடுவதும் கண்டனத்துக்குரியது. Ø மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணனும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்துஅரசனும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் இவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தைப் பற்றி கேவலமாக ஆபாசமாக விமர்சித்து புத்தகம் எழுதினால் அவர்களுக்கு இவர்கள் ஆதரவு தருவார்களா? Ø எனவே இதுபோன்ற ஆபாச புத்தகங்களை இலக்கியம் என்ற பெயரில் எழுதி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் எழுத்தாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மத்திய அரசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள்

புதுதில்லி: மத்திய அரசின் ஏழு சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் 104 எஸ்.சி. ஊழியர்களும் 30 எஸ்.டி. ஊழியர்களும் பணி புரிந்து வருகின்றனர். நாடு முழுவதும் 199 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இத்தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி, என்.ஐ.டி. கல்லூரிகளுக்கு ஒரே கலந்தாய்வு

புதுதில்லி: ஐஐடி, என்.ஐ.டி. மற்றும் சி.எப்.டி.ஐ பொறியில் கல்லூரி நிறுவனங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒரே கலந்தாய்வு மட்டுமே நடத்தப்படும். இது வரும் கல்வி ஆண்டு 2015 – 2016 முதல் நடைமுறைபடுத்தப்படும். இந்த முடிவை இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் தேசிய தொழில்நுட்பக் கழகம் எடுத்துள்ளது. இதனை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும்.
 
ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.
பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காக டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என அண்மையில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன
காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்..!

digital-lockerபொதுமக்களின் முக்கிய சான்றிதழ்கள் ‘டிஜிட்டல்’ முறையில் இருந்தால் அதை பாதுகாப்பாக வைக்க ‘டிஜிலாக்கர்’ என்ற இணைய வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. கல்விச் சான்றிதழ்கள், வங்கி டிபாசிட் சான்றிதழ்கள் போன்ற சான்றிதழ்களை வீடுகளில் பாதுகாப்பாக தாள்களாக பத்திரமாக வைத்திருப்போம். அது போல அந்த சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைக்கும் புதிய முறை அறிமுகம் இப்போது செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒரு இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. http:/digitallocker.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று ஆதார் எண் மற்றும் பிற தகவல்களை பதிவு செய்து ‘பீட்டா வெர்சன்’ எனப்படும் டிஜிட்டல் முறையில் வைத்திருக்கும் சான்றிதழ்களை இந்த லாக்கரில் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் பத்திரமாக வைத்திருக்கலாம். தற்போது இந்த வசதி ஒவ்வொரு தனிநபர்களுக்கும் 10 எம்.பி., அளவுக்குத் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. யார் இந்த சான்றிதழ்களை இந்த டிஜிட்டல் லாக்கரில் வைக்கிறாரோ அவர் தான் அதை எடுக்க முடியும். அதற்காக ரகசிய பாஸ்வேர்டு குறியீடு எண்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் தங்களுக்கு என தனியாக டிஜிட்டல் லாக்கர் வசதியை கொண்டுள்ளன. இதில் சாதாரண தாள் வடிவில் உள்ள சான்றிதழ்களை பாதுகாக்க முடியாது. பீட்டா வெர்சன் என்ற கம்ப்யூட்டர் நகல் வடிவில் உள்ள சான்றிதழ்களை மட்டுமே பாதுகாப்பாக வைக்க முடியும்.

லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட்..!

கடந்த வாரம் டெல்லியில் நடந்த இன்டர்நேஷனல் க்ரீன் மொபிலிட்டி எக்ஸ்போ 2015 நிகழ்ச்சியில் மாருதி ஸ்விஃப்ட் Range Extender கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி. ஏற்கெனவே 2014 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கான்செப்ட்டை காட்சிக்கு வைத்திருந்தது மாருதி. Plug-in Hybrid வகை காரான இந்த ஸ்விஃப்ட் Range Extender கான்செப்ட் லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜை அளிக்கிறதாம்.

ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாகும் ஸ்விஃப்ட் காரை அடிப்படையாகக் கொண்டது இந்த கான்செப்ட் கார் லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் அளிப்பது மட்டுமில்லாமல் ப்யூர் எலெக்ட்ரிக் மோடில் 25.5 கிமீ வரை செல்கிறது. இதில் 658 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் 73 hp சக்தியை அளிக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் உள்ளது. 1,600 கிலோ எடை கொண்ட இந்த கான்செப்ட் காரில் லித்தியம்-அயான் பேட்டரி உள்ளது. இது முழுமையாக சார்ஜ் ஆக ஒன்றரை மணிநேரம் ஆகும். 2017-ம் ஆண்டில் அடுத்த தலைமுறை ஸ்விஃப்ட் காரில் ஹைபிரிட் மாடலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.maruti-swift