Home Blog Page 6194

66ஏ சட்டப்பிரிவு ரத்து: ப.சிதம்பரம் வரவேற்பு

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் இன்று அடிப்படைக் கருத்துரிமை தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரிவு மிகவும் பலவீனமாக கட்டமைக்கப்பட்டதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது என்றும், இதன் மூலம் இந்தப் பிரிவு தவறாக கையாளப் பட வாய்ப்பு இருப்பதாகவும், தவறாகக் கையாளப்பட்டதாகவும் கூறியுள்ளார். பேச்சுரிமை சுதந்திரத்துக்கு எதிரானதாக இது இருந்துள்ளது. தற்போதைய நடைமுறைச் சட்டங்களின் மூலம் இது தொடர்பான தண்டனைகளைப் பெற்றுத் தர வாய்ப்பு உள்ளது. தற்போதைய சட்டப் பிரிவையே மேலும் வலுப்படுத்த யோசிக்கலாம், ஆனால் 66ஏ அதற்கான பதில் அல்ல என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கருணைக் காஞ்சி – கனகதாரை – பாகம் 1

  கனகதாரை எனில் மகாலக்ஷ்மி நினைவே வரும். ஒரு மகாலக்ஷ்மியம்மாள் இந்த உலகு முழுவதற்கும் ஈய்ந்த கருணை – ஞானக் கனகதாரைதான் ஸ்ரீ மகா பெரியவாள். அவரது பீடாதிபத்தியப் பொன்விழாவையொட்டி அவருக்குக் காஞ்சியில் கனகாபிஷேகம் செய்தபோது அவர் காஞ்சிக்கும் கனகதாரைக்கும் உள்ள பொருத்தத்தை அவருக்கே உரிய அரிய பார்வையில் கண்டு, அவையோருக்குப் பொன்னுரையாக வழங்கினார். காஞ்சி பீடத்தின் ஆதாரசக்தியான அம்பிகை, அப்பீடத்தைப் புதுப்பொலிவோடு நிறுவி, தாமே அங்கு புதிதாக உள்ள கனகதாரைத் தொடர்பை எடுத்துரைத்தார். பாலப் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் ஸ்ரீசங்கரர் பிக்ஷை எடுத்தபோது ஒரு த்வாதசி அன்று ஒரு ஏழை அந்தண மாடு அவருக்கு ஈய ஏதுமில்லையே என்று தாரை தாரையாகக் கண்ணீர் வடித்து,த்வாதசிப் பாரணைக்கு என்று வைத்திருந்த ஒரே ஒரு பண்டமான அழுகல் நெல்லிக்கனியை பிக்ஷையிட்டாள். அதைக் கண்டு உருகியே கருணைச் சங்கரர் திருமகளைத் துதித்து அவளுக்குக் கனகதாரையை பொன் நெல்லிக்காய் மழையாக வரவழைத்துக் கொடுத்து விட்டார் என்று நயமுரக் கூறினார். ஏழை மாதின் அன்பு கண்ணீர் தாரையாகவும், அருளாளர் சங்கரரின் கருணை கனகதாரையாகவும் ஆனதைக் காட்டினார். முன்வினைப் பாபந்தான் அவளை வறுமையெனும் வெப்பத்தால் பொசிக்கிற்று என்றாலும் கூட, கருணை என்ற காற்றில் திருமகள் கடாக்ஷ முகிளை அவளிடம் தள்ளிவந்து திரவிய மழை பொழிய வேண்டும் என பாலா சங்கரர் வேண்டியதைக் குறிப்பிட்டார். வாழ்க்கை தொடக்கத்தில் இவ்வாறு கருணைக் கனகதாரை பெருக்கிய அந்த பாலா பிரஹ்மச்சாரியே ஸன்னியாசச் சக்கரவர்த்தியான ஸ்ரீ சங்கர ஜகத்குருவான பின் வாழ்க்கையின் இறுதியில் இந்தக் காஞ்சிக்கு வந்த பொது, உக்ர ரூபிணியாக இருந்த காமாக்ஷியை அனுக்ரஹ மூர்த்தியாக்கிக் கருணை தாரை பொழிய வைத்ததையும் சொன்னார். அதோடு நில்லாமல், அபூர்வமான பூர்வ கதையொன்றும் சொல்லி அந்தக் காமாக்ஷியும் கனகதாரை பொழிந்திருப்பதை விவரித்து அவையோரைப் புளகிக்க வைத்தார். காமக்ஷியின் உக்ரகோபம் ஓர் இடைக்காலத்தே அவைதிகப் புற மதத்தாரின் வழிபாட்டால் ஏற்பட்டதுதான். அதற்கு முன் அவள் கருணைத் தாயகத்தான் இருந்தாள். கண்ணோக்கால் மக்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேற்றுவதாலேயே “காமாக்ஷி” என்ற நாமம் பெற்றவள் வேறப்படி இருந்திருபாள்.? அப் பூர்வக்காலத்தில் காஞ்சியைச் சூழ்ந்த தொண்டை மண்டலத்தில் பஞ்சம் மக்களை வருத்திற்று. மக்களின் பாபம்தான் இப்பஞ்சத்திற்குக் காரணம் – அந்தண மாதின் பாபமே அவளுடய வறுமைக்குக் காரணமானது போல, அப்படி இருந்தும் அன்னையாரான லக்ஷ்மியும், காமாக்ஷியும் ஓர் அளவுக்கு மேல் மக்களின் துயரம் சென்றபோது கர்மத்தை மன்னித்துக் கருணை காட்டினர். அந்தண மாது ஒருத்திக்கு மட்டும் லக்ஷ்மி கனகதாரை வர்ஷித்தாள் எனில் காமாக்ஷியோ தொண்டை மண்டலம் முழுவதும் அப்பகுதி மக்களுக்கென பொன்மழை பொழிந்தாள். இதற்கு மேலும் ஒன்று காமாக்ஷியின் பெருமையைத் தெரிவிப்பதாக எடுத்துக் காட்டினார் நமது ஆச்சாரியப் பெருமான். பொன்னை மாத்திரம் கொடுத்தால் போதாது; அது மீண்டும் மக்களைப் பாபத்தில் தூண்டினாலும் தூண்டும்** என்று காமாக்ஷி அன்னை எண்ணி இயற்கையாகவே கோணல் வழியில் செல்லும் மக்களின் பாபப் போக்கையே நீக்கி, ஞானச் செல்வமான “ப்ராதிப ஸ்ரீ”யை அவர்களுக்கு வளப்புடன் அளித்து அதன் பின்னரே தொண்டை மண்டலம் முழுவதும் கனகதாரை வர்ஷித்தாளாம்! பொன்மழை போலவே இந்த அறிவுக் கொடையையும், விடாமற் பெய்யும் பெருமழையாகப் பெய்தாளாம் – அலுப்பு சலிப்பு இல்லாமல் பெய்தாளாம்! இவ்வபூர்வ விருந்தாந்தத்தைக் காமாக்ஷி மீது ஸ்ரீமுககவி பாடிய ஐநூறு அமுதப் பாக்கள் கொண்ட “மூக பாஞ்சசதீ”யின் ஆதாரத்திலேயே கூறிய நமது ஸ்ரீசரணர் அந்த ச்லோகத்தையும் மதுரமாக ஓதினார். பொருட்செல்வம், அறிவுச்செல்வம் இரண்டும் பெறப் பாராயணம் செய்யவேண்டிய ச்லோகம் இது என்று ஸ்ரீசரணாள் கூறுவார். கண்டகீக்ருத்ய பிரக்ருதி குடிலம் கல்மஷம் ப்ராதிபஸ்ரீ- கண்டீரத்வம் நிஜபதஜூஷாம் சூன்யதந்த்ரம் திசந்தீ| துண்டீராக்யே மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டி-ப்ரதாத்ரீ சண்டீ தேவீ கலயதி ரதிம் சந்த்ரசூடால சூடே|| (தனது திருவடியை அண்டிய மக்களின் இயற்கையிலேயே வக்கிரமான பாபப் போக்கை கண்டனம் செய்து அருவிச் செல்வத்தின்  நிறைவைச் சோம்பலின்றி வழங்கிக் கொண்டு “துண்டீரம்” என்னும் தொண்டை மண்டலமான மகிமை வாய்ந்த நாட்டில் பொன்மழை பொழியும் சண்டிகா பரமேச்வரி சந்த்ர மௌலீச்வரனிடம் ப்ரேமை புரிகிறாள்.) **தைத்திரீய உபநிஷத்தில் முதலில் அறிவை வேண்டி, அதன்பின் பொருட் செல்வம் அருள வேண்டியிருப்பதையும், அதற்குப் பொன் மழை பொழிவித்த ஆசார்யாளே தமது பாஷ்யத்தில் “அறிவற்றவரிடம் பொருள் சேர்ந்தால் அனர்த்தமேயாகும்.” என்று விளக்கம் தந்திருப்பதையும் ஸ்ரீ மஹாபெரியவாள் எடுத்துக்காட்டுவார். .-. மழை வர்ஷிக்கும்

அதிகாரி தற்கொலை; அவதூறு பரப்பாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்க: ராமதாஸ்

சென்னை: நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கை திசை திருப்ப அவதூறுத் தகவல்களைப் பரப்புவதாக பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; இதற்குக் காரணமான முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கத்துடன் முத்துக்குமாரசாமி பற்றி அவதூறான செய்திகளை தமிழக காவல்துறை பரப்பி வருகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும். வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி நெல்லையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்காக தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் ரூ13.50 லட்சம் முன்பணம் கொடுத்திருந்ததாகவும், அது குறித்த விசாரணைக்காக பிப்ரவரி 20 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்ததாகவும், விசாரணை நடைபெறவிருந்த நாளில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஊடகங்கள் மூலம் தமிழக காவல்துறை அவதூறு செய்தி பரப்பி வருகிறது. அதாவது முத்துக்குமாரசாமியிடம் வருமான வரித்துறை அழைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு பணம் இருந்தது, வருமானவரித் துறையின் விசாரணைக்கு பயந்து தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் தமிழக காவல்துறையின் நோக்கம். உண்மையில், முத்துக்குமாரசாமியிடம் அவர் செய்த முதலீடுகள் குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை சம்மன் அனுப்பவில்லை. அவர் வீடு வாங்குவதற்காக முன்பணம் கொடுத்திருந்த நிறுவனம் ரூ.2.30 கோடியை முன்பணமாக வசூலித்திருந்ததாக வருமானவரி ஆய்வில் தெரியவந்திருந்தது. இதுகுறித்து முன்பணம் கொடுத்த 47 பேரிடமும் விசாரிப்பதற்காக அவர்கள் அனைவரையும் வருமானவரித்துறை அழைத்திருந்தது. முத்துக்குமாரசாமி உள்ளிட்ட அனைவரும் சாட்சிகளாகத் தான் அழைக்கப்பட்டிருந்தார்களே தவிர குற்றஞ்சாற்றப்பட்டவர்களாக அழைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, முத்துக்குமாரசாமி 35 ஆண்டுகளாக அரசுத்துறையில் பணியாற்றி வந்தவர்- கடைசியாக அவர் மாதம் ரூ.88 ஆயிரம் அளவுக்கு ஊதியம் பெற்றுள்ளார். அவரது இரு மகன்கள் நல்ல ஊதியத்தில் வேலையில் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் ரூ.13.50 லட்சம் எப்படி வந்தது? என வருமானவரி துறைக்கு கணக்கு காட்ட முடியாமல் தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்களின் உதவியுடன் காவல்துறை முயல்வது வெட்கக்கேடானது. அதுமட்டுமின்றி, பிப்ரவரி மாதத்தின் முதல் 20 நாட்களில் செல்பேசி மூலம் 600 அழைப்புகளை செய்திருப்பதையும் பூதாகரமாக சித்தரிக்க காவல்துறை முயன்றிருக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அமைச்சரின் உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் அவருடன் பேசியியுள்ளனர்; அவரும் இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக பலரை தொடர்பு கொண்டிருக்கிறார். முத்துக்குமாரசாமியின் தொலைபேசி அழைப்புக்களில் சர்ச்சை எதுவும் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொண்டே அதை காவல்துறை பெரிய செய்தியாக்கியிருப்பது நேர்மையான செயல் அல்ல. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு செய்தியை தமிழக காவல்துறை திட்டமிட்டு பரப்பியிருக்கிறது. ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நேர்மையான அதிகாரி மீது அவதூறு சேற்றை அள்ளி காவல்துறை பூசியிருக்கிறது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகளை அவசரமாக மறுத்த காவல்துறை, பாதிக்கப்பட்டவர் குறித்து அவதூறு செய்தி பரப்புவதிலிருந்தே அதன் உண்மையான நோக்கத்தை உணரலாம். ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக கருதப்பட்ட தமிழக காவல்துறையின் பெருமை இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது வேதனையளிக்கிறது. வழக்கையே அடியோடு திசை திருப்ப முயலும் தமிழக காவல்துறை, இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் யாருக்கும் இல்லை. எனவே, அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். முத்துக்குமாரசாமி குறித்து அவதூறு தகவல்களை ஊடகங்களுக்கு பரப்பிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு காரணமான முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்… என்று கோரியுள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ. 64 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 8 குறைந்து ரூ. 2,476க்கும் சவரன் ஒன்றுக்கு ரூ. 64 குறைந்து ரூ. 19,808க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2 அதிகரித்து ரூ. 2,648 க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசு அதிகரித்து ரூ. 40.60 என்ற அளவிலும், பார் வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ. 275 உயர்ந்து ரூ. 37,920 என்ற அளவிலும் விற்பனையாகிறது.

ஜெயலலிதா வெளியே வரக்கூடாது என்றே அமைச்சர்கள் கோயில் கோயிலாகச் செல்கிறார்கள்: குஷ்பூ

kushboo_congress திருச்சி: ஜெயலலிதா வெளியே வந்துவிடக் கூடாது என்றே தமிழக அமைச்சர்கள் கோயில் கோயிலாகச் சென்று கும்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன் என நடிகை குஷ்பு பேசினார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியபோது, ‘மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒரு திட்டமல்ல, திருட்டு. விவசாயிகளின் நிலத்தை அவர்கள் அனுமதியின்றி எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வோம் என்கிறது பா.ஜ.க. அரசு. விவசாய நிலத்தை கையகப்படுத்துவதிலும் ஒரு முறை இருக்கிறது, அவை இந்தச் சட்டத்தில் பின்பற்றப்படவில்லை. ஆனால், விவசாயிகளின் வலி, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தெரியும். அதனால்தான், கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தில், விவசாயிகளுக்கு சாதகமான பல அம்சங்களோடு இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை முதலில் எதிர்த்த அ.தி.மு.க., தற்போது நாடாளுமன்றத்தில் இதற்கு ஆதரவாக அந்தர் பல்டி அடித்துள்ளது. அது ஏன் என்றுதான் எனக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெங்களுரில் நடந்து வரும் வழக்குக்கும், இந்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகம் எனக்கு மட்டும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே உள்ளது. நீதிமன்றத்தால், தண்டனை பெற்றவர், தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் கோயில், கோயிலாகப் போய் யாகம், சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்கள். எனக்கு என்னவோ, சாமி, அம்மா தண்டனையில் இருந்து விடுதலை பெறணும்னு அவங்க வேண்டிக்கிறா மாதிரி தெரியவில்லை. ஐயா சாமி, தயவு செய்து அவங்க வெளியே வந்துடக் கூடாது. அவங்களை உள்ளேயே வை. அந்த அம்மாவை பார்த்து குனிஞ்ச நாங்க இப்பதான் நிமிர்ந்து நிக்கிறோம்னு அவங்க கோயில் கோயிலா போய் கும்பிடுறாங்க என்று நினைக்கிறேன்” என்று பேசினார். அவரின் இந்தப் பேச்சு இப்போது சூட்டைக் கிளப்பியுள்ளது.

“பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறது”

“பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறது” (சுவாமிக்கு சமமா போற்றப்படற நம் ஆசார்யாளும் ) 10482143_599228513527816_46027082804070919_n சொன்னவர்– பி. ராமகிருஷ்ணன் நன்றி-குமுதம் பக்தி ஸ்பெஷல்-இந்த வாரம். குரு சிஷ்ய பாவம்கறது பாரம்பரியமா இந்து மதத்துக்கே உள்ள தனிப் பெருமை. மாதா, பிதாவுக்கு அப்புறம், தெய்வத்தைவிடவும் முன்னதா குருவைத்தான் சொல்லி இருக்கு. அந்தக் காலத்துல எல்லாம் குருவாக இருக்கறவர் ஒரு ஆக்ஞை இட்டுட்டான்னா அது எவ்வளவு சிரமமானதா இருந்தாலும் செய்யறச்சே கஷ்டங்கள் பலதும் வந்தாலும், கொஞ்சமும் சலிச்சுக்காமலும் தவிர்க்காமலும் சீடர்கள் செய்து முடிச்சுடுவா. அதேசமயம் அவஸ்யம் இல்லாத எந்தக் காரியத்தையும் அவாளைச் செய்யச் சொல்லமாட்டார் குருநாதர். அப்படிப்பட்ட காலகட்டத்துல நடந்த குருகுல அனுபவம் ஒண்ணை முதல்ல சொல்றேன். அதுக்கும் மகாபெரியவாளுக்கும் என்ன சம்பந்தம்கறதை அடுத்ததா சொல்றேன். மூணு இளைஞர்கள் ஒரு குரு குலத்துக்கு வந்தாங்க. குருதேவரை தரிசனம் பண்ணி, தாங்கள் அவர்கிட்டே சீடர்களா சேர்றதுக்காக வந்திருக்கறதா சொன்னாங்க.இந்தக் காலத்துல பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கறதுக்கு முன்னால, நேர்முகத் தேர்வு, என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதவைக்கிறது இப்படியெல்லாம் தகுதித்தேர்வு நடத்தறாங்க இல்லையா? அத அந்தக் கால குருகுல முறையில இருந்துதான் வந்தது. சின்னவயசுலயே குருகுலத்துல சேர்த்து படிப்படியா கத்துக் குடுத்தது ஒருவகை. இன்னொரு வகை நடுத்தர வயசுல குருகுலத்துல சேர்ந்து படிக்கறது. இதுல இரண்டாவது முறையில சீடர்களை சேர்த்துக்கறச்சே அவாளுக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் சேர்த்துக்குவாங்க. அந்த வழக்கப்படி, தன்கிட்டே பாடம் கத்துக்க வந்த மூணு இளைஞர்களுக்கும் ஒரு தேர்வு வைச்சார், குருநாதர். மூணுபேர்கிட்டேயும் ஆளுக்கு ஒரு பறவையைத் தந்தார். “இதை யாரும் பார்க்காத இடத்துல வைச்சு கொன்னுட்டு வந்துடுங்கோ!’ அப்படின்னார். இளைஞர்கள் பறவையை எடுத்துண்டு போனாங்க. ரெண்டுபேர் கொஞ்ச நேரத்துலயே வெறும் கையோட திரும்பி வந்துட்டாங்க. மூணாவது இளைஞர் ரொம்பநேரம் கழிச்சு வந்தான். அவன் கொண்டுபோன பறவை அவன் கையிலயே இருந்துது. குருநாதர் அவங்ககிட்டே நடந்ததை சொல்லச் சொன்னார். முதல் இளைஞன் சொன்னான் “நீங்க சொன்னபடியே பண்ணிட்டேன். என் இருப்பிடத்துல ஓர் அறைக்குள்ள போய், கதவை இறுக்க மூடிட்டேன். ஒருத்தரும்… ஏன் சூரிய வெளிச்சம் கூட உள்ளே வரமுடியாதபடி இருண்டுடுத்து. உடனே அங்கேயே வச்சு, அதைக் கொன்னுட்டேன்’. ரெண்டாவது இளைஞன் அதைக்கேட்டு சிரிச்சான். “நீ குருநாதர் சொன்னதை சரியா புரிஞ்சுக்கலை. யாருமே பார்க்காதபடி பறவையைக் கொல்லச் சொன்னார். ஆனா, நீ அதைக் கொன்ன சமயத்தல அந்தப் பறவை உன்னைப் பார்த்திருக்கும் இல்லையா? அதனால நீ தோத்துட்டே நானும் உன்னை மாதிரிதான் இருட்டு றைக்கு அதை எடுத்துண்டு போனேன். ஆனா அங்கே வைச்சு அதோட கண்ணை ஒரு துணியால கட்டிட்டு வதைச்சுட்டேன். குருநாதர் சொன்னதோட அர்த்தம் புரிஞ்சு செயல்பட்ட என்னைத்தான் அவர் சீடனா ஏத்துப்பர். ஏன்னா, அடுத்தவன் அவர் சொன்னதையே கேட்காம பறவையை உயிரோட திருப்பி எடுத்துண்டு வந்திருக்கான். அதனால தகுதித் தேர்வுல ஜெயிச்சது நான்தான்!’ அமைதியாக நின்றிருந்த மூன்றாவது இளைஞனைப் பார்த்தார் குருநாதர், “நீ என்னப்பா சொல்லப்போறே?’ அப்படின்னு கேட்காமலே கேட்ட அவரோட பார்வைக்கு அர்த்தம் புரிஞ்சுண்டு பேச ஆரம்பிச்சான் அவன். “சுவாமி, நீங்க சொன்னமாதிரியே பறவையை எடுத்துண்டு போனேன். ஆனா, எங்கே போய் நின்னாலும் கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார்னே, தோணித்து. யாருக்கும் தெரியாம பண்ணணும்னா, அது பகவானுக்கும் தெரியக்கூடாதே? எல்லாஇடத்துலயும்நிறைஞ்சிருக்கற, எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கற அவருக்குத் தெரியாம எந்த ஒரு காரியத்தையும் பண்றது சாதித்தியமில்லைன்னு தோணித்து. அதோட, உயிர்வதை செய்யறதுல உங்களுக்கு எந்த விருப்பமும் இருக்காது. அதனால் அதை திரும்ப எடுத்துண்டு வரணும்கற அர்த்தத்துலதான் நீங்க அப்படி சொல்லியிருக்கணும்கறதும் புரிஞ்சுது. அதான் பறவையைக் கொண்டு வந்துட்டேன்’ சொல்லி முடிச்ச அவனை, சந்தோஷமா சீடனா ஏத்துண்டு ஆசிர்வதிச்சார் குருநாதர். இந்தக் கதையை எதுக்கு சொன்னேன் தெரியுமா? உலகத்துல நாம எங்க இருந்தாலும் சரி, பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை விளக்கத்தான். சுவாமிக்கு சமமா போற்றப்படற ஆசார்யாளும் இப்படி எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருந்து நடக்கற எல்லா விஷயத்தையும் பார்த்துண்டு இருந்தார்ங்கறதை நிரூபிக்கறவிதமா நடந்த சம்பவம் ஒண்ணைதான் நான் இப்போ சொல்லப்போறேன். ஒரு சமயம் காஞ்சி மடத்துல பெரியவா, பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். எத்தனை எத்தனையோபேர் எங்கெங்கே இருந்தெல்லாமோ வந்திருந்தா. வரிசை ரொம்ப பெரிசா இருந்தது. வந்திருந்தவாள்ல அடிக்கடி வர்றவா, எப்போதாவது வர்றவா, புதுசா வர்றவான்னு எல்லா தரப்பும் இருந்தா. அந்தக் கூட்டத்துல சுமார் அறுபது வயசு உள்ள ஒரு பாட்டியும் இருந்தா. நெத்தி நிறைய குங்குமமும் சந்தனமும் இட்டுண்டு , தழையத் தழைய பட்டுக் கட்டிண்டு இருந்தா அந்தப் பாட்டி, பத்தாக்குறைக்க கழுத்துல ருத்ராட்சம், ஸ்படிக மாலைகளையும் போட்டுண்டு இருந்தா. பார்க்கறவா எல்லாருக்கும் கொஞ்சம் கூடுதலாவே மதிக்கத்தோணும். அப்படி ஒரு தோற்றம் அந்தப் பாட்டிக்கு ரொம்ப பக்தி நிறைஞ்சவா, அவாகூட நாமளும் வர்றதே பாக்யம்னு நினைச்சு சந்தோஷமா வரிசைல வந்தா எல்லாரும். ஆச்சு, ஒருவழியா பாட்டியோட முறை வந்துது, மகாபெரியவாளை ரெண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் பண்ணினா அந்த மூதாட்டி.ஆசார்யா, ஆசிர்வாதம் செய்யப்போறார்னு நினைச்சதுக்கு மாறா, பக்கத்துல இருந்த சீடனை கூப்பிட்டார் பரமாசார்யா. “மடத்து உக்ராண அறையில் இருந்து (சமையல்கட்டு) நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வா!’ உத்தரவிட்டார். அவசர அவசரமாக ஓடினார் அந்தச் சீடர். பாட்டிக்கு ஒண்ணும் புரியலை. சுத்தி இருந்தவாளுக்கோ ஆச்சரியம். “பெரியவா ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்தாலே அது மகாபிரசாதம். நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கார்னா, இந்தப் பெரியம்மா ஏதோ பாக்யம் பண்ணி இருக்கணும்னு!’ ஆளாளுக்கு பேசிக்க ஆரம்பிச்சா. ஒரு கூடையில நூறு எலுமிச்சம் பழத்தை எடுத்துண்டு வேகவேகமா ஓடி வந்தார் சீடர். கூடையை அந்த மூதாட்டி பக்கத்துல வைக்கச் சொன்னார் ஆசார்யா. “இந்தா இதெல்லாம் உனக்குதான். எடுத்துண்டு போ. நீ செய்யற காரியத்துக்கு உபயோகமா இருக்கும்’ பெரியவா சொல்ல, திருதிருன்னு முழிச்சா அந்த வயதான பெண்மணி. ரொம்ப தயங்கி, “பெரியவா, என்ன சொல்றேள்னு புரியலை. எனக்கு எதுக்கு இத்தனை எலுமிச்சம்பழம்’ கேட்டா. “அதான் காசுவாங்கிண்டு, குடும்பத்தைக் கெடுக்கறது, உறவை அழிக்கறது, ஏவல் வைக்கறதுன்னெல்லாம் எலுமிச்சம்பழத்துல மாந்திரீக வேலைகளைப் பண்ணிண்டு இருக்கியே… அதுக்கு இது உபயோகப்படும்னுதான் குடுக்கச் சொன்னேன்!’

மகாபெரியவா கொஞ்சம் கோபமான குரல்லயே சொன்னதும்தான் எல்லாருக்கும் அந்த மூதாட்டியோட மறுமுகம் என்னன்னு தெரிஞ்சுது. துஷ்டனை கண்டமாதிரி எல்லாரும் விலகி நின்னா.சட்டுன்னு பெரியவா கால்ல விழுந்த அந்தப் பாட்டி

, “என்னை மன்னிச்சுடுங்கோ… காசுக்க ஆசைப்பட்டு, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு தைரியமா அத்தனை காரியத்தையும் செஞ்சுட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்தமாதிரி நீங்க சொன்னது பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை எனக்கு உணர்த்திடுத்து. இனிமே எந்தக் கெட்ட காரியமும் கனவுலயும் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ’ன்னு கதறினா. அவ கண்ணுல இருந்து வழிஞ்ச நீரே அவ பாவத்தைக் கழுவிடும்படிக்கு அழுதா. கொஞ்ச நேரம் கழிச்சு, “உனக்கு தெரிஞ்ச அபிசார மந்திரத்தை எல்லாம் ஏதாவது ஒரு பசுமாட்டோட காதுல சொல்லிட்டு அதோட தலை முழிகிடு. அதெல்லாம் உனக்கு முழுசா மறந்துடும். போயிட்டு வா. இனிமேலாவது நல்லகாரியம் பண்ணு!’ன்னு சொல்லி அந்தப் பாட்டியை அனுப்பி வைச்சார், பரமாச்சார்யார். இப்போ, சொல்லங்கோ மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு எல்லாரும் சொல்றது சத்தியமான வார்த்தைகள்தானே!

  • பி. ராமகிருஷ்ணன்

கோத்தகிரியில் பெண்ணைக் கொன்ற கரடி சுட்டுக் கொலை

SAMSUNG DIGITAL CAMERAஉதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நேற்று ஒரு பெண்ணை இழுத்துச் சென்று கொன்ற கரடி இன்று வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. முன்னதாக இந்தக் கரடி தாக்கியதில் பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர் உள்பட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்தில் ரேலியா அணை பீட் பகுதியில் இருப்புகல், தொத்தமுக்கு கிராமத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் ஹாலன் என்பவரின் மனைவி மாதி (50). இவர், திங்கள்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தேயிலைத் தோட்டத்திற்குள் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென மாதியின் மீது பாய்ந்து தாக்கியது. இதில், மாதியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அவரது கணவர் ஹாலன், உறவினர் குமார் ஆகியோர் கரடியை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது கரடி, ஹாலன், குமார் ஆகியோரையும் தாக்கியுள்ளது. இதில், அவர்களின் முகம், கண், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள், தீப்பந்தத்தை கொளுத்தி கரடியை விரட்டினர். கரடி அங்கிருந்து ஓடும்போது மாதியை இழுத்துக் கொண்டே ஓடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கோத்தகிரி வனத் துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹாலன், குமார் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீஸார், வனத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் மிலானியஸ், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் கரடி இழுத்துச் சென்ற மாதியை தேயிலை தோட்டப் பகுதியில் தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர், உயிரிழந்த நிலையில் மாதியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக மாதியின் உடல், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆபத்தான நிலையிலுள்ள ஹாலன், குமார் ஆகியோருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களாகவே இங்கு கரடி தொல்லை இருந்து வருவதாகவும், இதுகுறித்து வனத்துறைக்கு புகார் கொடுத்த போதும் அவர்கள் கரடியை பிடிக்க கூண்டு இல்லை என்றும், கூண்டு வந்ததும் கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெத்தனமாக பதிலளித்ததாகவும், வனத்துறையினரின் இந்த அலட்சியப் போக்கு குறித்து இங்கு வந்துள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றும் மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை தீவிர வேட்டை நடத்திய வனத்துறையினர், கரடியை சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தனர்.

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் குறித்த சட்டப்பிரிவு 66 ஏ ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  புது தில்லி சமூக வலைத்தளங்களில் கூறப்படும் கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இன்று இவ்வாறு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு வாய்ப்பிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை முடிவில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், “சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் தொடர்புடையவரை கைது செய்ய வழிவகை செய்யும் சட்டப் பிரிவு 66-ஏ , அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாகப் பறிப்பதாக உள்ளது. இச்சட்டப்பிரிவில் உள்ள சில வார்த்தைகள் பொதுவாக இருப்பது ஏற்புடையதல்ல. ஒருவருக்கு அவதூறாக உள்ள ஒன்று, மற்றவருக்கு இல்லாமல் போகலாம். எனவே இச்சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

லஞ்ச வேட்டை கல்வி அமைச்சர் வீரமணியை கைது செய்க; ஒலிப்பதிவு ஆதாரம் உள்ளது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

E_V_K_S__Elangovan சென்னை: லஞ்ச வேட்டையை நடத்துவதற்கு காரணமான கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியை பதவி நீக்கம் செய்வதோடு, கைது செய்யப்பட வேண்டும். இவர்களை ஒரு நிமிடம் கூட பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே பதவியிலிருக்கும் போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் அனைவருக்கும் மிகப்பெரிய தலைக்குனிவு உண்டு. ஆனால் தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவையைச் சேர்ந்தவர்களின் ஒரே நோக்கம் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான். என்ன வறட்சியோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் லஞ்ச வேட்டையை நோக்கமாக கொண்டு அமைச்சர்கள் செயல்படுகிற காரணத்தால் பல்வேறு விபரீத விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டம் தான் செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் அறிவொளி ஆகியோரின் மரணங்கள். இந்தியாவிலேயே கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வந்ததற்கு மிகப்பெரிய பின்னடைவு தற்போதைய ஆட்சியில் ஏற்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களுக்கு கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. பணிநியமனம் செய்துவிட்டு, மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிட வேண்டும். இது காலந்தொட்டு நடக்கும் நடைமுறையாகும். தற்போது 62 ஆசிரியர் பணி நியமன ஒப்புதலுக்காக இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தால் தான் ஒப்புதல் வழங்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக 2013-14 ஆம் கல்வியாண்டில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பல மாதங்களாகியும் ஒப்புதல் வழங்கப்படாததோடு, சம்பளமும் தரப்படாமல் உள்ளது. இந்த ஒப்புதலுக்காக மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணிக்கு முழு தொகையையும், ஒரே தவணையில் கப்பம் கட்டினால் தான் ஒப்புதல் கிடைக்கும் என்கிற அவலநிலை குறித்து வெட்கப்பட வேண்டிய நிலை இன்றைக்கு மாவட்டத்தில் கல்வித்துறை செம்மையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கல்வி அலுவலர் நாகராஜன், கண்காணிப்பாளர் கந்தசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்துப்பிள்ளை ஆகியோர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பாக புரோக்கர்களாக செயல்பட்டு வசூல் வேட்டை நடத்தி, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கொடுமைப்படுத்தி, மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த லஞ்ச வேட்டையில் இந்த அதிகாரிகள் பலரோடு பேசிய ஒலி நாடாவை கேட்கின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. இந்த ஒலி நாடாவை ஆதாரமாக வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாக சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளையும், இந்த லஞ்ச வேட்டையை நடத்துவதற்கு காரணமான கல்வி அமைச்சர் கே.சி. வீரமணியை பதவி நீக்கம் செய்வதோடு, கைது செய்யப்பட வேண்டும். இவர்களை ஒரு நிமிடம் கூட பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது. அப்படி தொடர்வது தமிழகத்தில் கல்வித்துறையையே சீரழிக்கிற வாய்ப்பு ஏற்பட்டு விடும். இக்கொடுமை குறித்து தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பலமுறை கல்வி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டதற்கு தீர்வு காணாமல், அதற்கு மாறாக மிரட்டி அச்சுறுத்துகிற வேலையை கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர். எனவே, ஆசிரியர் நியமனங்களில் எவ்வித ஊழலும் நடைபெறாமல் பணி நியமன ஆணை வழங்குவதற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மழையால் போட்டி 43 ஓவராகக் குறைப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று நடைபெறும் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டியில், தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 38 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பின் ஆட்டம் தொடர்ந்தது. 43 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்க அணி, 5 விக்கெட் இழந்து, 281 ரன் குவித்திருந்தது. இதை அடுத்து 43 ஓவரில் 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் செல்லும்.