Home Blog Page 6195

ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்படாது!

கோயமுத்தூர்: வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகள் இயக்கப்பட மாட்டாது என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். வாளையாறு சோதனைச் சாவடி பிரச்சினையில் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு-கேரளா லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு, கோவை லாரி உரிமையாளர் சங்கம் ஆகியவை சார்பில் கோவையை அடுத்த வாளையாறு சோதனைச் சாவடி குறித்த ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் பீம் வத்வா பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கேரளாவில் உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் சோதனை என்ற பெயரில் குறைந்தது 20 மணி நேரம் வரை லாரிகளை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதைக் கண்டித்து கடந்த 22-7-2013 அன்று கேரளாவுக்கு லாரிகளை இயக்காமல் காலவரையற்ற போராட்டத்தை நடத்தினோம். அப்போது அந்த மாநில முதல்-மந்திரி உம்மன் சாண்டி எங்களை அழைத்து பாலக்காட்டில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நாங்கள் வாளையாறு சோதனை சாவடியில் வெளிப்படையாக சரக்குகளை கண்டறிய ஸ்கேன் மற்றும் கேமராக்கள் பொருத்த வேண்டும், இரும்பு, ஸ்டீல் மற்றும் காய்கறி போன்ற சரக்குகளை எளிதாக சோதனை செய்ய சிறப்பு வசதி செய்ய வேண்டும், பல கிலோ மீட்டர் தூரம் லாரிகளை ஓட்டி வரும் லாரி ஓட்டுநர்களுக்கு கழிப்பறை, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உம்மன் சாண்டி உறுதியளித்தார். நாங்களும் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. எனவே வரும் ஏப்.1-ஆம் தேதி முதல் கேரளாவுக்கு லாரிகளை இயக்குவதில்லை என்று முடிவு செய்து உள்ளோம்.. என்று கூறினார்.

என்கவுண்டர்களின் நேரடி ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை

புது தில்லி: பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்தும் என்கவுன்டர்களை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிரப்பி செய்தி வெளியிட தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, குஜராத் கடல் வழியாக வந்த பயங்கரவாதிகள் 10 பேர், மும்பையின் முக்கிய பகுதிகளில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 600 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தி, 9 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இந்த என்கவுன்டர் சம்பவம் இரண்டு நாட்களுக்கு மேலாக எல்லா டி.வி. சானல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. நாடு முழுவதும் இதனைப் பார்த்த மக்கள் மனதில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது. மும்பையின், தாஜ்மகால் பேலஸ், சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகிய இடங்களில் பிணமாக கிடந்தவர்களின் ரத்தம் உறைய வைத்த காட்சிகளை டி.வி.சானல்கள் நேடியாக ஒளிபரப்பி நாட்டையே உலுக்கியது. இதுபோன்ற நேரடி ஒளிபரப்புகள் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு பிடித்து உயிருடன் பிடிக்க உதவிகரமாக அமைந்ததாக அப்போது கூறப்பட்டாலும் ராணுவ அமைச்சகம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இது போன்ற லைவ் ரிப்போர்ட்டுகளை டி.வி.சானல்கள் ஒளிபரப்ப கட்டுப்பாட்டு விதிப்பது குறித்து ஆலோசித்தது. இதையடுத்து நேரடி ஒளிபரப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதன் பேரில், தகவல் மற்றும் ஒளிரப்புத்துறை புதிய சட்டதிருத்தம் கொண்டுவந்தது. இது குறித்து மத்திய தகவல் ஒளிரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய பாதுகாப்புப்படையினர், ராணுவத்தினர் என்கவுன்டர் நடத்து பணியில் ஈடுபட்டால். அதனை டி.வி.சானல்கள் லைவ் ரிப்போர்ட் என்ற பெயரில், நேரடியாக ஒளிபரப்ப கூடாது. 1994-ம் ஆண்டு கேபிள் டி.வி. நெட்வொர்க் சட்டத்தின் படி புதிய சட்டவிதிகளை அனைத்து கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்… என்று கூறப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு ஏப்ரல் முதல் வாரம் வெளியாக வாய்ப்பு!

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை கடந்த 17ம் தேதி நிறைவடைந்தது, இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் மீதான தீர்ப்பு அனேகமாக மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எழுதி வரும் நீதிபதி குமாரசாமி, வழக்கு தொடர்புடைய ஆவணங்களை தணிக்கையாளர்கள் உதவியுடன் மதிப்பிட்டு வருகிறார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரின் சொத்துப் பட்டியலை தணிக்கையாளர்கள் குழு முழுதுமாக ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. தணிக்கையாளர் குழுவின் அறிக்கைக்காக நீதிபதி குமாரசாமி காத்திருப்பதாகவும், இதற்காக 5 பேர் கொண்ட குழு அவருக்கு உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் அரசுத் தரப்பு வாதம் நடைபெற்ற போது, 125க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ’ எனவே இந்தத் தீர்ப்பில் அந்தக் குழு மூலமாக தீர்ப்பு தயாராகி வருகிறதாம். இந்த வார இறுதியில் முதற்கட்ட தீர்ப்பு தயாரிப்பு நிறைவு பெற்று விடும் என்றும், தணிக்கையாளர்களின் அறிக்கை கிடைத்த பிறகு, ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க காரணகர்த்தா லீ குவான் யூ: கருணாநிதி

singapore-karunanidhi-lee சென்னை: தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணகர்த்தாவும் லீ குவான் யூ என்று கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்ட செய்தி… சிங்கப்பூர் நாட்டின் முதல் பிரதமராக 1959ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட லீ குவான் யூ 31 ஆண்டுகள் தொடர்ந்து அந்த நாட்டின் முடி சூடா மன்னராக விளங்கி, நவீன சிங்கப்பூருக்கான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திய பெருமகன் ஆவார். வெறும் துறைமுக நகரமாக இருந்த சிங்கப்பூர் இவரது ஆட்சிக் காலத்திலே தான் உலகமே பிரமித்திடும் வகையில் மிகப் பெரும் வர்த்தக நகரமாக மாறியது. ஆங்கில அரசிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கும், மலேசியா விலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக இருப்பதற்கும் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் தான் லீ குவான் யூ அவர்கள். உண்மையில் சுதந்திரச் சிங்கப்பூரின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவரே லீ குவான் யூ அவர்கள் தான். சிங்கப்பூரில் தமிழர்கள், சீனர்கள், மலேசியர்கள் ஆகிய மூன்று தேசிய இனங்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் பாசத்தையும், பேராதரவையும் பெற்றவர் இவர். தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணகர்த்தாவும் லீ குவான் யூ அவர்களே தான். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றிருந்தபோது, பிரதமர் லீ குவான் யூ, தன்னுடைய அமைச்சர் பெருமக்களோடு உற்சாகமான வரவேற்பளித்ததோடு, அறிஞர் அண்ணா அவர்களின் பேருரையைக் கேட்டு ஆனந்தமடைந்த நிகழ்வு என் நெஞ்சில் இன்றும் நிலைத்திருக்கிறது. ஈழத் தமிழர்கள்பால் பேரன்பு கொண்டிருந்த லீ குவான் யூ அவர்கள் ஈழத் தமிழர்கள் மிகப் பெரும் உழைப்பாளிகள்; அவர்கள் தமது போராட்டத்தில் நிச்சயம் வெற்றியடைவார்கள் என்று மனம் திறந்து குறிப்பிட்டதை உலகத் தமிழர்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள். சிங்கப்பூர் வரலாற்றில் மிகப் பெரிய நாயகனாக வாழ்ந்து, சிங்கப்பூர் மக்களின் தந்தையாகத் திகழ்ந்த லீ குவான் யூ அவர்களின் மறைவினால் வாடும் சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக அவருடைய குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் வாழும் அவருடைய நண்பர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை; ஒரே நேரத்தில் 10, +2 தேர்வுகளைத் தவிர்க்க ராமதாஸ் யோசனை

PMK founder S Ramadoss சென்னை: ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப் படுவதால், பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாகவும், இதனை மாற்றி முன்பு போல் அமைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதன்பின்னர் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவது தான் வழக்கம். ஆனால், நடப்பாண்டில் புதுமை படைப்பதாக நினைத்துக் கொண்டு 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை தமிழக அரசின் தேர்வுத்துறை ஒரே நேரத்தில் நடத்தி வருகிறது. இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நடப்பாண்டில் தமிழகம் மற்றும் புதுவையில் +2 பொதுத் தேர்வுகளை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் எழுதுகின்றனர். இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுவதற்கான கட்டமைப்பு வசதிகளையும், தளவாடங்களையும் ஏற்பாடு செய்வது எளிதான ஒன்றல்ல. மேலும், இத்தேர்வுகளை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், பறக்கும் படையினர் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் பெரும் பணியாகும். இந்த ஏற்பாடுகளை மிகச்சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவடைந்த பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்தும் வழக்கம் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகளில் பொதுவாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவார்கள். போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில், பட்டதாரி ஆசிரியர்களும் இப்பணிக்கு அழைக்கப்படுவர். இவர்களில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள அனைவரும் அதன்பின் நடைபெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என்பதால் பொதுத் தேர்வுகளும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெறும். இந்த நேரத்தில் மற்ற வகுப்புகளும் தடையின்றி நடைபெறும். ஆனால், இம்முறை இரு தேர்வுகளும் ஒரே காலகட்டத்தில் நடத்தப்படுவது மட்டுமின்றி, 6 நாள் தேர்வு மட்டுமே முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கப்பட்டு விட்டது. இதுவரை 20 பாடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்து விட்டதால், அப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்று விட்டனர். இன்னொரு பக்கம் கடந்த 19ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளும் தொடங்கி விட்டதால் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனுபவம் இல்லாத ஆசிரியர்களும் பொதுத் தேர்வுக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடத் தேர்வு முடிவடைந்ததும் அதன் விடைத்தாள்களை பிரித்து அனுப்பும் பணிக்கும், திருத்தும் பணிக்கும் அப்பாடத்திற்கான ஆசிரியர்கள் அனுப்பப்படுவதால், அவர்களுக்குப் பதிலாக கண்காணிப்பு பணியில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதைப் பயன்படுத்திக் கொண்டு தான் ஓசூரில் தேர்வு கண்காணிப்பாளர் பட்டியலில் இல்லாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதும், அவர்கள் வினாத்தாள்களை வாட்ஸ் அப் (ஸ்மார்ட் செல்பேசி) மூலம் அனுப்பி மோசடியில் ஈடுபட்டதும் நடந்தது. இது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றும் அனைத்து பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வுப் பணிக்கும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பப்பட்டு விட்டதால் அப்பள்ளிகளில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் இம்மாணவர்கள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி இன்று வரை பள்ளிக்கு வருவதும் பாடம் கற்காமல் திரும்பிச் செல்வதுமாக உள்ளனர். ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இதே நிலை தான் தொடரும். ஒரு கல்வியாண்டில் 37 நாட்கள் (26 வேலை நாட்கள்) 4 வகுப்புகளின் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் இருப்பது மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், இரு பொதுத் தேர்வுகளின் முடிவுகளையும் ஒன்றாக வெளியிட்டு ஆட்சியாளர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக தேர்வுத்துறை இயக்குனரும், வேறு சில அதிகாரிகளும் நடத்தும் துக்ளக் தர்பார் காரணமாக 35 லட்சம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதுடன், மோசடிகளும் அரங்கேறியுள்ளன. இதற்கெல்லாம் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இனி வரும் ஆண்டுகளில் கடந்த கால நடைமுறையே கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். – என்று கூறியுள்ளார்.

உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்துக்கு ஊழல் நோக்கமே முதல் காரணம் : ராமதாஸ்

சென்னை; உடன்குடி மின் திட்ட ஒப்பந்த ரத்துக்கு ஊழல் நோக்கம்தான் முதல் காரணம் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், உடன்குடியில் 1320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்நிலையம் அமைப்பதற்காக பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களைத் தெரிவிக்கக் கோரி ஒப்பந்தப்புள்ளி தாக்கல் செய்த நிறுவனங்களில் ஒன்றான மத்திய தெற்கு சீன மின்சக்தி வடிவமைப்பு நிறுவனம் (Central Southern China Electric Power Design Institute – CSEPDI) தலைமையிலான கூட்டியக்கம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இடம் பெற்றுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாகின்றன. உடன்குடி அனல் மின்நிலையத்திற்கான மொத்த மதிப்பு ரூ.8,400 கோடி ஆகும். வழக்கமாக மின் திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதற்கான நிதியை அரசே ஏற்பாடு செய்து தரும். ஆனால், உடன்குடி திட்டத்திற்கான ஒப்பந்தம் திட்டச் செலவுகளுக்கான நிதியில் குறைந்தது 75 விழுக்காட்டை ஒப்பந்தக்காரர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்க்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெற மொத்தம் 4 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், அவற்றில் 2 நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள சீன நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளியும், பாரத மிகு மின் நிறுவனத்தின் (பெல்) ஒப்பந்தப்புள்ளியும் ஏற்கப்பட்டு கடந்த 18.10.2014 அன்று திறக்கப்பட்டன. உடன்குடி மின் திட்டத்தை ரூ.8025 கோடியில் செயல்படுத்தித் தருவதாக சீன நிறுவனம் அதன் ஒப்பந்தப்புள்ளியில் தெரிவித்திருந்தது. ஆனால், இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் அதைவிட ரூ.137 கோடி கூடுதலாக வழங்கும்படி கோரியிருந்தது. மற்ற அம்சங்களிலும் சீன நிறுவனம் தான் சாதகமான மதிப்பீடுகளைத் கூறியிருந்தது. உதாரணமாக திட்ட மதிப்பீட்டில் 75 விழுக்காட்டை ஒப்பந்ததாரர்கள் தங்களது சொந்த முயற்சியில் கடனாக பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சீன நிறுவனம் 85% கடனை பெற்றுத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தது; ஆனால், பெல் நிறுவனம் 75% கடனை மட்டுமே பெற்றுத் தர முன் வந்திருந்தது. இதனால் இத்திட்டத்தை செயல்படுவதற்காக பெல் நிறுவனத்திற்கு அரசுத்தரப்பு முதலீடாக தர வேண்டியதை விட சீன நிறுவனத்திற்கு ரூ.1400 கோடி குறைவாக வழங்கினால் போதுமானது. அதேபோல் 7.2% வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக சீன நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில், பெல் நிறுவனம் 12.25% வட்டிக்கு தான் கடன் பெற்றுத்தர முடியும் என்று கூறியிருந்தது. சீன நிறுவனத்திற்கு சாதகமாக இவ்வளவு அம்சங்கள் இருக்கும் நிலையில், அந்த நிறுவனத்திற்குத் தான் மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பெல் நிறுவனத்திற்குத் தான் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட வேண்டும் என்பதில் தமிழக ஆட்சியாளர்கள் உறுதியாக இருந்தனர். இதற்கு திரை மறைவில் பல காரணங்கள் உள்ளன. பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை விட தங்களுக்கு கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும் என்பது தான் ஆட்சியாளர்களின் கணக்கு ஆகும். இருப்பினும், சீன நிறுவனம் குறைந்த செலவில் மின் நிலையம் அமைத்துத் தருவதாக கூறியிருந்த நிலையில் அதை ஒதுக்கிவிட்டு பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்குவது சாத்தியமில்லை. அதுவும், எண்ணூர் அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை குறைந்த விலை குறிப்பிட்டிருந்த தங்களுக்குத் தராமல், பெல் நிறுவனத்திற்கு அளித்ததை எதிர்த்து சீன நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படவுள்ள நிலையில், அவ்வாறு செய்தால் அது தமிழக அரசுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே தான் இந்த முறை சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்காமல் செய்து விட்டால் அடுத்த முறை பெல் நிறுவனத்திற்கு ஏற்றவாறு நிபந்தனைகளை மாற்றி, அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. உடன்குடி மின்திட்டத்திற்காக இரு நிறுவனங்களும் தாக்கல் செய்த ஒப்பந்தப்புள்ளிகளில் தொழில்நுட்ப குறைபாடு இருந்தது தான் அவை ரத்து செய்யப்படுவதற்கு காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. ஏனெனில், எண்ணூர் மின் திட்டத்திற்கும், உடன்குடி மின் திட்டத்திற்கும் ஒரே வடிவத்தில் தான் ஒப்பந்தப்புள்ளிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன; ஒரே வடிவத்தில் தான் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவ்வாறு இருக்கும் போது எண்ணூரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் உடன்குடியில் நிராகரிக்கப்படுவதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு 5 மாதங்கள் வரை யாருக்கு ஒப்பந்தம் என்பது பற்றி தமிழக அரசு முடிவெடுக்கவில்லை. அத்துடன், ஒப்பந்தப் புள்ளி செல்லுபடியாகும் காலத்தை 31.03.2015 வரை நீட்டித்துத் தரும்படி சீன நிறுவனத்தை பல முறை தமிழக அரசு கோரியிருக்கிறது. செல்லுபடியாகாத ஒப்பந்தப்புள்ளியாக இருந்தால் காலக்கெடுவை நீட்டிக்கும் படி சீன நிறுவனத்தை அரசு கோரியிருக்குமா? என்ற மக்களின் வினாவிற்கு தமிழக அரசு தான் பதிலளிக்க வேண்டும். பெல் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்க வேண்டும்; அப்போது தான் தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற எண்ணத்தில் தான் இந்த ஒப்பந்தப்புள்ளிகளை அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. இது தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டப்பிரிவுக்கு எதிரானது. தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாகத் தான் டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு கூறுவது உண்மை என்றால், உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை ஆணையம் அமைத்து அதை நிரூபிக்க முன்வர வேண்டும். – என்று கூறியுள்ளார்.

ஞாபக சக்தி அதிகரிக்க !

ஞாபக சக்தி அதிகரிக்க !  ஞாபக சக்தி பெருக தினமும் பப்பாளி, மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.  வெந்நீரில் தேனைக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.  மிளகை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து தேனில் தூவி சாப்பிட்டு வந்தால் மறந்து போகுதல் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.  பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மூளை பலம் பெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.  பசலைக்கீரை சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.  பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இலை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி கூடும்.  செம்பருத்திப் பூவில் உள்ள மகரந்தக் காம்பை நீக்கிவிட்டு சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.  முளைக்கீரையுடன் வல்லாரைக் கீரை சேர்த்து பருப்புடன் சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.  துளசி இலையை தினசரி சாப்பிட ஞாபக சக்தி அதிகரிக்கும்.  தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் ஞாபகசக்தி பெருகும்.10518990_716738545061387_303629078961556945_n

ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதி

chandra-babu-naidu ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகராக அமராவதி என்ற பெயர் இருக்கும் என்று, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். தற்போது, ஹைதராபாத் நகரமே தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக உள்ளது. இது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். இந்நிலையில், கிருஷ்ணா நதியின் படுகையில், புதிய தலைநகரை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் பெயரைச் சூட்ட வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்தது. ஆனால், அதை மறுத்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத் தலைநகரின் பெயராக அமராவதி என்பது இருக்கும் என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணா நதிக்கரையின் ஓரத்தில் குண்டூர் மாவட்டம் தூளூரு பகுதியில் உள்ள 29 மண்டலங்கள் புதிய தலைநகருக்கான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

புதிய தலைநகருக்காக இதுவரை 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் அரசு மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. இதில், 8,000 ஏக்கரில் புதிய தலைநகருக்கான கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.

ஆந்திர புதிய தலைநகர் எந்தவொரு குறிப்பிட்ட நகரின் மாதிரியாக இல்லாமல், அனைத்து சிறந்த நகரங்களின் கூட்டுக் கலவையாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட் டுள்ளது.

ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்புக்கு மலேசியாவில் உள்ள புத்ராஜாயா நகர், கட்டிடங்களுக்கு நவி மும்பை, ஆற்றின் முகப்பு பகுதிக்கு லண்டனில் உள்ள தேம்ஸ், நியூயார்க்கில் உள்ள ஸ்கைகிராப்பர் கட்டிடங்கள், சீனாவைப் போன்ற நகரக் கட்டமைப்பு அல்லது சிங்கப்பூர், துபாய் போன்ற துறைமுகம் சார்ந்த மேம்பாடு போன்ற அனைத்து நகரங்களின் சிறப்புகளையும் உள்ளடக்கிய நகரமாக புதிய தலைநகர் அமைய வேண்டும் என ஆந்திர அரசு விரும்பு கிறது.

சிங்கப்பூர் நிறுவனங்கள் புதிய தலைநகருக்கான மாஸ்டர் பிளானை வரும் ஜூன் மாதம் வழங்க உள்ளன.

மழை குறுகீடு: தென்னாப்பிரிக்க நியூஸிலாந்து ஆட்டம் பாதிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. அந்த அணீ 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது டிவிலியர்ஸ் 60 ரன்னுடனும், டு பிளெஸிஸ் 82 ரன்னும் எடுத்திருந்தனர்.

மீனவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் பேச்சுவார்த்தை ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உடனே விடுவிக்கப்படாவிட்டால், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு பேச்சுவார்த்தை துவங்கும். இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பிரதமரிடம் தமிழக அரசின் சார்பில் கடிதம் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை அரசுப் பிரதிநிதிகளும், மீனவர்களும் திங்கள்கிழமை காலை சென்னை வந்தனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. மீனவர்களை விடுவித்து சுமூகமான சூழலில் பேச்சினை நடத்த வேண்டும் என தமிழகத்தின் சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீனவர்கள் அனைவரும் திங்கள்கிழமை மாலை விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பின்னணியில் இந்திய-இலங்கை மீனவர்களுக்கு இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இலங்கைத் தரப்பில் மீன்வளத் துறை செயலாளர் நிமல் ஹெட்ரிராச்சி, இயக்குநர் ஜெனரல் எம்.சி.எல். பெர்ணாண்டோ, இயக்குநர் டி.எஸ்.நந்தாசேனா உள்ளிட்ட 10 பேர் அடங்கிய அதிகாரிகளைக் கொண்ட குழு பார்வையாளர்களாகவும், டி.சதாசிவம், ஜஸ்டின் ஜோய்சா, ஜி.வி.எம்.ஜெரால்டு, என்.பொன்னம்பலம், பி.செந்தில் நாதன், ஜெ.பிரான்ஸிஸ் ஆகியோர் அடங்கிய 10 மீனவர்களைக் கொண்ட குழுவும் சென்னையில் தங்கியுள்ளன. தமிழகத்தின் சார்பில் 13 மீனவர்கள் பங்கேற்கின்றனர்.