Home Blog Page 6196

54 மீனவர்கள் கைது; மீனவர் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஜி.கே.வாசன்

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்நேரத்தில் மீனவர் பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இப் பிரச்னை சுமுகமாகத் தீர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் – தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் உடனடி நடவடிக்கையாக இருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. இந்தியப் பிரதமர் இலங்கை சென்று வந்த பிறகும் இதற்கு தீர்வு கிட்டப்படும் என்று எதிர்பார்த்ததற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் தமிழத்தைச் சேர்ந்த 54 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் மீனவர்களின் வருமானத்தில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறது. மீனவர்கள் வாழ்வாதாரம் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை மத்திய அரசுக்கு, தமிழக அரசு எடுத்துரைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசை கண்டிப்பதோடு, ஒரு தீர்க்கமான நல்ல முடிவு தமிழக மீனவர்களுக்கு கிடைக்க வழி வகுக்க வேண்டும். ஏற்கனவே 2 முறை மீனவப் பிரதிநிதிகளோடு நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு 3 ஆவது முறையாக நடக்க இருந்த பேச்சு வார்த்தை இன்று 24-03-2015 செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. எனவே இன்று நடைபெறும் மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெறுவதற்கு ஏதுவாக, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களது படகுகளையும் உடனடியாக இன்றைக்குள் விடுவிக்க வேண்டும். மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே நடக்கின்ற பேச்சு வார்த்தையும் நல்ல முறையில் நடந்து அனைத்து மீனவர்கள் வாழ்விலும் ஒளி தீபம் ஏற்றிட வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை அரசால் பிரச்சனைகள் இன்றி தொடர ஒரு நிரந்தர, சுமூக, நல்ல முடிவுகள் எட்டப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கொடைக்கானலில் கடையடைப்புப் போராட்டம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. வனச் சரணாலயம் அமையவிருப்பதைக் கண்டித்து கொடைக்கானல் பகுதியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, கொடைக்கானல் பகுதி வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் இந்தக் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி கைது

சென்னை: வேலை வாங்கித் தருவதாக ரூ.33 லட்சம் அளவுக்கு ஏமாற்றிய போலி டாக்டர் தம்பதி சென்னையில் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த காமராஜ், சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியராக இருந்தவர். இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்… சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் அஜீத் என்ற மாணவனுக்கு நான் வீட்டுக்கு சென்று டியூசன் சொல்லிக் கொடுப்பேன். மாணவன் அஜீத்தின் தந்தை பெயர் ஆனந்தகுமார்(வயது 46). தாயார் பெயர் நிர்மலா(42). ஆனந்தகுமாரும், நிர்மலாவும் தங்களை பெரிய டாக்டர்கள் என்று என்னிடம் தெரிவித்தனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெரிய டாக்டர்களாக பணியாற்றுவதாக அவர்கள் தெரிவித்தனர். சென்னை போலீஸ் கமிஷனரும், மாநகராட்சி கமிஷனரும் தங்களது நண்பர்கள் என்று சொன்னார்கள். மாநகராட்சி கமிஷனரின் தாயாருக்கு தாங்கள்தான் குடும்ப டாக்டர்கள் என்றும் கதை விட்டனர். சென்னையில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் நிறைய பேர் எங்களுக்கு தெரியும் என்றும் நாடகமாடினார்கள். தனது செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு சென்னை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் வேலை அல்லது மாநகராட்சி தலைமை அலுவலகம் உள்ள ரிப்பன் மாளிகையில் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக ஆனந்தகுமார் கூறினார். மேலும் பலருக்கும் மாநராட்சி பள்ளிகளிலும், மாநகராட்சி அலுவலகங்களிலும் வேலை பெற்றுத் தருவதாக ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் ஆசை காட்டினார்கள். அதை உண்மை என்று நம்பி, எனக்கும், எனது தம்பி, தங்கைக்கும் அவர்களிடம் வேலை கேட்டு, ரூ.6½ லட்சம் பணம் கொடுத்தேன். எங்களுக்கு வேலைக்கான அரசாணையும் வழங்கினார்கள். அதை வைத்து ரிப்பன் மாளிகைக்கு சென்று கேட்டபோது, ஆனந்தகுமார் கொடுத்த வேலைக்கான அரசாணை போலி என்பது தெரிய வந்தது. மேலும் ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், டாக்டர் படிப்பை பாதியில் விட்டவர்கள் என்றும், தங்களை டாக்டர்கள் என்று ஏமாற்றி நிறைய பேரிடம் இதுபோல் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர், என்பதும் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், போலீஸ் கமிஷனருக்கும் நண்பர்கள் என்று சொன்னதும் கட்டுக்கதை ஆகும். இந்த போலி டாக்டர் தம்பதி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். – என்று தெரிவித்திருந்தார். காமராஜ் அளித்த இந்தப் புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதை அடுத்து நடைபெற்ற விசாரணையில் காமராஜைப் போல நிறைய பேரிடம் ஆனந்தகுமார், நிர்மலா தம்பதி மோசடி லீலைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இவர்களிடம் ஏமாந்த மேலும் 10 பேர் மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் ரூ.33 லட்சம் அளவுக்கு இருவரும் ஏமாற்றியிருப்பது கண்டறியப்பட்டது. இவ்வாறு மேலும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இருவரும் கோடிக்கணக்கில் பணமோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனந்தகுமாரும், அவரது மனைவி நிர்மலாவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் தம்பதியான ஆனந்தகுமார், நிர்மலா இருவரும் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்கள். டாக்டர் என்று கூறி, மோசடி செய்து பணம் குவித்துள்ளனர். இவர்களிடம் ஏமாந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்களாக இருந்தால் தேர்வு எழுத புத்தகத்தையே கொடுத்திருப்போம்: லாலு பிரசாத்

பாட்னா: நாங்களாக இருந்தால் தேர்வில் பிட் என்ன…? மாணவர்களுக்கு புத்தகத்தையே கொடுத்திருப்போம் என்று கூறியுள்ளார் லாலு பிரசாத் யாதவ். பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தற்போது அதிரடியாகக் கூறி மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். பீகாரில் பொதுத் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க அவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும் சேர்ந்து உதவிய விவகாரம் பெரிய அளவில் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, ஆட்சிக்கு வந்தால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின் போது புத்தகத்தைப் பார்த்து எழுதும் முறையை அமல்படுத்துவோம் என அறிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவ்வின் பேச்சு பீகாரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில், ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதல்வராக உள்ள இங்கே கடந்த வாரம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது வைஷாலி உட்பட, சில மாவட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள், காப்பி அடிப்பதற்காக புத்தகத்தைக் கிழித்தும் பிட்களை எறிந்தும் உதவி செய்தனர். உயரமான கட்டடத்தில் மாணவர்கள் தேர்வு எழுதியபோது, அதன் ஜன்னல்களில் துணிச்சலாக ஏறி, பலரும், பிட் பேப்பர்களை தூக்கிப் போட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அறிக்கை தரும்படி, பீகார் அரசை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றமும் இதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பக்சார் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, மாநிலத்தில் எனது அரசு இருந்திருந்தால், தேர்வின்போது பார்த்து எழுத மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டிருக்கும். புத்தகத்தைப் படித்தவர்களால்தான், அதைப் பார்த்து தேர்வை எழுத முடியும். புத்தகத்தைப் படிக்காதவர்கள், தேர்வு முடிந்த பிறகும், புத்தகத்தில் விடைகளைத் தேடிக் கொண்டுதான் இருப்பார்கள்” என்றார். அதே நேரம், லாலுபிரசாத் யாதவின் கருத்தை பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ஆதரித்துள்ளார். “அமெரிக்காவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் தேர்வின்போது புத்தகத்தைப் பார்த்து எழுதும் முறை உள்ளது. இதே வழக்கம், பிற நாடுகளிலும் உள்ளன. புத்தகத்தைப் படித்த மாணவர்களால்தான், விடைகளை தேடிக் கண்டுபிடித்து எழுத முடியும் என்ற கருத்து அந்நாடுகளில் உள்ளது’ என்று சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.

ஈரோடு அடுக்கு மாடிக் குடியிருப்பில் தீ

ஈரோடு: ஈரோடு காந்திநகரில் உள்ள ஒரு புதிய அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அபிஷேக் என்பவருக்கு சொந்தமான அந்தக் குடியிருப்பில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கையில் தமிழர் நிலங்கள் முதல்கட்டமாக ஒப்படைப்பு

கொழும்பு: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், தமிழர்களிடமிருந்து ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிப்பதில் முதல் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 425 ஏக்கர் நிலத்தை அதிபர் மைத்ரீபால சிறீசேன நேற்று தமிழர்களிடம் ஒப்படைத்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் வழங்கினார். அப்போது அவர், எனது ஆட்சியில் இனம், மத அடிப்படையில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், போரில் அழிந்த வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

கரடி தாக்கி பெண் பலி; 3 பேர் காயம்: கோத்தகிரியில் அதிர்ச்சி

உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கரடி தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது கணவர் உள்பட இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டத்தில் ரேலியா அணை பீட் பகுதியில் இருப்புகல், தொத்தமுக்கு கிராமத்திலுள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் ஹாலன் என்பவரின் மனைவி மாதி (50). இவர், திங்கள்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தேயிலைத் தோட்டத்திற்குள் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென மாதியின் மீது பாய்ந்து தாக்கியது. இதில், மாதியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அவரது கணவர் ஹாலன், உறவினர் குமார் ஆகியோர் கரடியை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது கரடி, ஹாலன், குமார் ஆகியோரையும் தாக்கியுள்ளது. இதில், அவர்களின் முகம், கண், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள், தீப்பந்தத்தை கொளுத்தி கரடியை விரட்டினர். கரடி அங்கிருந்து ஓடும்போது மாதியை இழுத்துக் கொண்டே ஓடியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கோத்தகிரி வனத் துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஹாலன், குமார் ஆகியோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீஸார், வனத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர் மிலானியஸ், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் கரடி இழுத்துச் சென்ற மாதியை தேயிலை தோட்டப் பகுதியில் தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின்னர், உயிரிழந்த நிலையில் மாதியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக மாதியின் உடல், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆபத்தான நிலையிலுள்ள ஹாலன், குமார் ஆகியோருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களாகவே இங்கு கரடி தொல்லை இருந்து வருவதாகவும், இதுகுறித்து வனத்துறைக்கு புகார் கொடுத்த போதும் அவர்கள் கரடியை பிடிக்க கூண்டு இல்லை என்றும், கூண்டு வந்ததும் கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெத்தனமாக பதிலளித்ததாகவும், வனத்துறையினரின் இந்த அலட்சியப் போக்கு குறித்து இங்கு வந்துள்ள அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றும் மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த மாதியின் மகன் தினகரனை சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் சங்கர், அவரிடம் நிவாரணத் தொகையாக ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும், காயமடைந்த ஹாலன், குமார் ஆகியோருக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும் என்றார்.

மது விற்ற வாலிபர் கைது

நெல்லை:செங்கோட்டை அருகே மதுப் பாட்டில்விற்ப்பனை செய்தவர் கைது நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ளது புளியரை இவ்வூர் தமிழக கேரளா எல்லை பகுதி மட்டுமல்ல தேசீய நெடுஞ்சலை என்பதால் எராளமான வாகனங்கள் இவ்வழியே கேரளாவுக்கு செல்வதால் நீதிமன்ற உத்தரவுப்படி இங்கிருந்த டாஸ்மாக் கடை சில ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது.அதன் பின் செங்கோட்டையிலிருந்து இப்பகுதிக்கு மதுப்பாட்டில்களை வாங்கிவந்து சிலர் விற்பனை செய்வதாக புளியரை போலீசாருக்கு கிடைத்தது.அதனைத் தொடர்ந்து சப்-இன்பெக்டர் சிவநாதன் தலைமையில் போலீசார் ரோந்து போகும் போது தெற்குமேடு பகுதியை சார்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன்(32)என்பவர் மதுப் பாட்டில் விற்ப்பனை செய்து கொண்டிருந்தப் போது போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்தனர்.அவர்டமிருந்து 40மதுப் பாட்டில் களையும்போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு மோடி அஞ்சலி

பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாட்டிற்காக தங்களை தியாகம் செய்த தினமான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். “இந்த சிறந்த தேச பக்தர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். பஞ்சாபில் இன்று, நாங்கள் ஹூசைனிவாலாவில் பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோருக்கு மலர் அஞ்சலி செலுத்தி, தங்க கோயிலுக்கும் ஜாலியன்வாலா பாகிற்கும் செல்வோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.