புது தில்லி: காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போல தனது மரணமும் இருக்கும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே புதுப் புயலைக் கிளப்பியுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் லோக்பால் மசோதா நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தீவிரமாக போராடி வந்தார். ஹசாரேவின் போராட்டத்துக்கு அடிபணிந்த மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது. தற்போது நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிராக, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார் ஹசாரே. இந்நிலையில், பஞ்சாப்பில் பயணம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே, செய்தியாளர்களிடம் பேசுகையில்… தனக்கு கனடாவில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அதை வைத்துப் பார்க்கும் போது காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போல் தனது மரணமும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்..
சினிமாவுக்கு முழுக்கா?: நடிகை லட்சுமி மேனன் பதில்
சென்னை: தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார் நடிகை லட்சுமி மேனன். மேல்படிப்புக்காக அவர் சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, மேல்படிப்புக்காக பெங்களூரு செல்வதால் நான் சினிமாவுக்கு முழுக்கு போடுவேன் என சிலர் சொல்கிறார்கள். எதிர்காலம் நமது கையில் இல்லை. அது பற்றி நான் யோசிக்கவும் இல்லை. பள்ளிப் படிப்பின்போதே நடிப்பிலும் பின்னணி பாடுவதிலும் கவனமாக இருந்தேன். இனியும் அப்படித்தான் இருப்பேன். பாடிக்கொண்டே நடிப்பேன். நடித்துக் கொண்டே படிப்பேன். அதனால் நான் சினிமாவிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. ‘ கொம்பன்’ படம் வரும் 2ஆம் தேதி வெளியாகிறது. தொடர்ந்து படங்களுக்கு கதைகள் கேட்க வேண்டியுள்ளது. அடுத்த மாதம் கதைகள் கேட்டு நடிக்க வேண்டிய படங்களைத் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.
பண மோசடி: நடிகை ஷில்பா ஷெட்டி மீது வழக்கு பதிவு
பண மோசடி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை அவர் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்தப் பணம் திருப்பி தரப்படும் என்றும், அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கூறியபடி பணம் வழங்கப்படவில்லையாம். இந்நிலையில், எம்.கே. மீடியா நிறுவனம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சரனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
“இளைய ராஜா-மஹா பெரியவா அனுபவம்.”
“இளைய ராஜா-மஹா பெரியவா அனுபவம்.” நேர்காணல்: தேனி கண்ணன். அந்திமழை ஜனவரி 2014 இதழ் பல ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள்.. அந்த அனுபவம்.. ஸ்ரீரங்கம் கோவில் கட்டும் சமயத்தில் கோபுரத்தின் ஒரு பகுதியைக் கட்டித்தர ஒப்புக்கொண்ட மந்த்ராலயம் அந்த பணியிலிருந்து விலகிக் கொண்டுவிட்டது. அதனால் அப்போது ஜீயராக இருந்தவர் தேசிகர் என்பவர் மூலம் பெரியவாளுக்கு திருமுகம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். பெரியவாள் அதைப் பார்த்துவிட்டு மௌனமாக இருந்து தரையில் கிராமபோன் தட்டை வரைந்து காட்டியிருக்கிறார். அங்கிருந்தவர்கள் ஒவ்வொரு சினிமாக்காரங்க பெயராகச் சொல்லி யிருக்கிறார்கள். யாரோ ஒருத்தர் என் பெயரைச் சொல்ல, அதுதான் என்பதுபோல பெரியவர் கையை ஆட்டியிருக்கிறார். இந்தத் தகவலை நண்பர் ஒருவர் மூலம் நான் கேள்விப்பட்டேன். அந்த நண்பர் பிரசாத் ஸ்டூடியோ வந்து ‘இதுபோல ஸ்ரீரங்கம் கோயில் கட்ட பெரியவர் அனுக்கிரகம் பண்ணியிருக்கா… 22 லட்சம் ஆகும். நீங்க ஆறாவது நிலை மட்டும் கட்டினால் போதும் அதுக்கு 8 லட்சம்தான் செலவாகும்’ என்று சொன்னார். நான் 22 லட்சத்தையே தருகிறேன். பெரியவாளே சொல்லிவிட்டதால இது அவர் பாரமே தவிர என் பாரம் அல்ல என்று சொல்லி அனுப்பினேன். இதன் பிறகு பெரியவாளை சந்திக்க ஆர்வம் வந்தது. நானும் ஓவியர் சில்பியும் புறப்பட்டோம். அப்போது சதாரா என்ற இடத்தில் அவர் முகாமிட்டிருந்தார். அங்கே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த மஹாகாவ் என்ற கிராமத்தில் இருந்தார். அங்கு ஒரு தோட்டத்தில் மாட்டுக்கொட்டகையில் ஜமுக்காளம் விரிச்சு உட்கார்ந்திருந்தார் பெரியவாள். அது மதிய நேரம். அங்கிருந்தவர்கள் என்னை அவரிடம் அழைத்துப்போனார்கள். என்னைப் பார்த்ததும் யாரு என்பது போல் சைகை செய்தார். என்னைப் பற்றிச் சொல்லவும் கையை உயர்த்தி ஆசிர்வதித்தார். அவரளவுக்கு ஒளிபொருந்திய கண்களை அதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இது வரைக்கும் பார்க்கவில்லை. நான் கைகூப்பினேன். கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்தது. அவர் கையில் இருந்த மாம்பழத்தைப் பிரசாதமாக எனக்குக் கொடுத்தார். அன்று இரவு பெரியவாள் வேறு ஒரு கிராமத்துக்குப் போவதாக இருந்தது. எனக்காகவோ என்னவோ அவர் போகவில்லை. அன்றைக்கு பௌர்ணமி இரவு. அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்திருந்தார். வானத்தில் மேகங்கள் இல்லாமல் நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரிந்தன. பெரியவாளின் சீடர்கள், ‘இளையராஜா பாடவிரும்புகிறார்’ என்று என் அனுமதி இல்லாமலேயே கூறிவிட்டனர். அவரும் சரி என்று தலையாட்டினார். சாம கான வினோதினி என்கிற செம்பை வைத்திய நாத பாகவதரின் பாடலைப் பாடினேன். ‘சாம கான.. என்று தொடங்கும்போது என்னைக் கூர்ந்து பார்த்தார். அந்தப் பார்வையால் உணர்ச்சி வயப்பட்டு அழுதபடியே பாடி முடித்தேன். பிறகு வானத்தில் இருந்த இருபத்தியேழு நட்சத்திரங்களை அடையாள காட்டி விளக்கினார். அந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள்.
சச்சின் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை: ரூ.6 லட்சத்துக்கு ஏலம்
ஜோத்புர்: சச்சின் டெண்டுல்கர் கடைசி டெஸ்டில் பயன்படுத்திய உடை ரூ.6 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்கு முன்னதாக், அவர் கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அது அவரது 200-வது டெஸ்ட் போட்டியாகும். அவருக்கு பிரிவு உபசாரமாக நடைபெற்ற அந்த டெஸ்க் போட்டியில் அவர் பயன்படுத்திய சிறப்பு வாய்ந்த உடை சனிக்கிழமை இரவு ஜோத்பூரில் ஏலம் விடப்பட்டது. அந்த உடையை ரூ.6 லட்சத்துக்கு, ஜோத்பூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஷிவ் ராஜ்சிங் என்பவர் வாங்கினார். இதேபோல் மேலும் பல நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை அறக்கட்டளைக்கு ஒன்றுக்கு வழங்கப்பட்டது.
ரோஹித், ஜடேஜாவுக்குப் பின் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து தோனி கருத்து!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதலில் ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோருக்கு அடித்த படியாக், இப்போது, விராட் கோலியின் ஃபார்ம் குறித்தும் இந்திய கேட்பன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் சதம் அடித்த விராட் கோலி, அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரது தடுமாற்றம் குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறிய போது… விராட் கோலியின் பேட்டிங் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது அவர் நிறைய ரன்கள் குவித்துள்ளார். அதற்காக அவர் களம் இறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்க வேண்டும் என்று நினைப்பது இயலாத செயல். டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை வைத்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போதைய உலகக் கோப்பைத் தொடரில் அவர் அவுட்டான ஆட்டங்களில் மோசமான ஷாட்டுகளை அவர் தேர்வு செய்ததாக நான் கருதவில்லை. மிகச் சரியான் விளாசல் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் விராட் கோலி. பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிப்பார்கள். அதேபோல் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன் என்றார் தோனி.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: புது வரிகள் ஏதுமில்லை
சென்னை: வரிகள் எதுவும் புதிதாக விதிக்கப்படாத சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மேயர் சைதை துரைசாமி 2015–16ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் புது வரிகள் விதிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் குறித்து சைதை துரைசாமி கூறியதாவது:– கடந்த பட்ஜெட்டில் தொழில் வரி ரூ.250 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிதி ஆண்டிலும் தொழில் வரி வருவாய் அதே அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சியின் வருவாய் இனங்களில் முக்கிய பங்கு வகிப்பது சொத்து வரி. கடந்த நிதி ஆண்டில் ரூ.600 கோடி சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிதி ஆண்டிலும் அதே அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் முத்திரை தாள் மீதான கூடுதல் வரி வருவாய் இந்த ஆண்டு ரூ.200 கோடியாக இருக்கும். கேளிக்கை வரி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.25 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலங்கள் கட்டுமான பணிகள், விரிவாக்க பணிகளுக்கு ரூ.42 கோடி. அரசு வரி தொகுப்பில் இருந்து ஒதுக்கப்படும் வருவாய் ரூ.600 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில் உரிமம், கட்டிட உரிமம், அங்காடி உரிமம், வாகன நிறுத்த கட்டணம் போன்ற பிற வருவாய் இனங்களின் முலம் ரூ.716.46 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். சென்னை மாநகராட்சியில் திறந்த வெளி இடங்களில் புதிய பூங்காக்கள், விளையாட்டுத் திடல் அமைத்தல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரசிடம் மானியம் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகள், சாலை பராமரிப்பு பணிகள், மழை நீர் வடிகால் பணிகள், புதிய பூங்காக்கள் உருவாக்கும் பணிகள் ஆகியவற்றுக்காக மொத்தம் ரூ.1232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவகர்லால் நேரு மத்திய நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்காக ரூ.30 கோடியும், உலக வங்கி நிதி உதவியுடன் நடைபெறும் விரிவாக்கம் செய்யப்பட்ட மழை நீர் வடிகால் திட்டத்துக்கு ரூ.300 கோடியும், இதர பணிகளுக்கு ரூ.20 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமித்தது. உபகரணங்கள் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு ரூ.7 கோடி. மருத்துவ பரிசோதனை கூட உபகரணங்கள், கொசு புகை எந்திரங்கள் போன்ற சுகாதார மேம்பாட்டுக்கு ரூ.5.50 கோடி. மெரினா கடற்கரையை ஒட்டிய சாலை பகுதியில் மேம்பாட்டு பணிகள் செய்யவும், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், உலக தரம் வாய்ந்த சாலைகள் அமைத்தல், நடைதொடர் மேம்பாலம் அமைத்தல் போன்ற சிறப்பு திட்டங்களுக்கு ரூ.90 கோடி. மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் புதிய மின் விளக்குகள் அமைக்கவும், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தவும் ரூ.150 கோடி.
- என்றார் சைதை துரைசாமி.
“தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…!
“தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…! காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பி.ராமகிருஷ்ணனின் அனுபவம் (குமுதம் பக்தி ஸ்பெஷல்) சின்னப் பெண் குழந்தை ஒருத்திக்கு அவ ஆசைப்பட்டுக் கேட்ட ஒரு பொருளைத் தந்த சம்பவம் நெகிழ்ச்சியானது. ஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும். நடுவுல எதுக்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது. வழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டிதன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, “ஊஹூம்!, முடியாது… இப்பவே!”ன்னு சொல்லி அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க. குழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டிசமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, “அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!”னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு. பாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள். குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை. அந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர். செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட கூப்பிட்டார். எல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க. பாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார். அதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார். இப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி. ஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது. வாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார். எல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப்பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது. இது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க. மகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். “அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா ? மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா ?” என்று கேட்டார். திருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க. “நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்துகிட்டு இருந்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா. தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…! அதனால கவலையேபடாதேம்மா…!” அமைதியாகச் சொன்னார் மகா பெரியவர். அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், அவர் எத்துணை பெரிய மகான்!
மரணித்து 530 ஆண்டுகளுக்குப் பின் மன்னர் உடல் அடக்கம்
மரணம் அடைந்து 530 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து மன்னர் ஒருவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் மன்னர் மூன்றாம் ரிச்சர்டு என்பவர், 1485-ம் ஆண்டு, பாஸ்வொர்த் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம் அப்போது முறைப்படி நடக்கவில்லை. இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன் அவரது உடல், கார்கள் நிறுத்துமிடம் ஒன்றின் கீழே கண்டெடுக்கப்பட்டது. இது அவரது உடல்தானா என்பது அவரது வம்சத்தில் வந்த ஒருவரது மரபணுவுடன் ஒப்பிட்டு உறுதி செய்யப்பட்டது. இப்போது 530 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது உடல் முறைப்படி, அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக மன்னரின் உடல் ஓக் மரத்தில் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து, நாளை ஞாயிற்றுக்கிழமை லீசெஸ்டர்ஷயர் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக லீசெஸ்டர்ஷயர் தேவாலயத்துக்கு கொண்டு வந்து வைக்கப்படும். ஆங்கிலிக்கன் திருச்சபையை சேர்ந்த காண்டர்பரி ஆர்ச்பிஷப் தலைமையில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தி, அரச மரியாதையுடன் மன்னர் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இங்கிலாந்து ராணி குடும்பத்தின் சார்பில், அவரது இளையமகன் எட்வர்டின் மனைவி கலந்து கொள்கிறார்.
கிரிக்கெட் மோகம் ஒழித்து தனித்திறன் விளையாட்டை வளர்ப்போம்: சீமான்
சென்னை; நாம் தமிழர் கட்சியின் சார்பில் தம் மரபுவழிப் பாரம்பரிய விளையாட்டை வளர்க்கும் பொருட்டு ‘தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விளையாட்டுப் பாசறை’ தொடங்கப் பட்டுள்ளது. இதை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்எம் சிஏ மைதானத்தில் மாபெரும் கபடிப் போட்டிகள் நடைபெறுகின்றன.சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து கபடி அணிகள் மோதுகின்றன. வெற்றி பெற்ற அணிக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பரிசுகளையும் வெற்றிக் கோப்பைகளையும் வழங்குகிறார். இது குறித்து சீமான் தெரிவித்த போது…. திடீரென்று இந்தப் பாசறை தொடங்கப் பட்டுள்ளதன் நோக்கம் என்ன? தேசிய தமிழ் விடுதலை மீட்புக்கான நீட்சியில் மொழி,இனம், மண், கலை ,பொருளாதாரம், வேளாண்மை,சமூகம். நீர்வளம், ,நிலவளம்,, காட்டுவளம், மலைவளம்,கனிமவளம்,கல்வி உரிமை, வழிபாட்டுஉரிமை, பெண்ணுரிமை, அரசியல் உரிமை,தொழில் உரிமை, போலவே நம் பாரம்பரியம் சார்ந்த விளையாட்டையும் மீட்டெடுத்து வளர்க்க வேண்டி இருக்கிறது. ஒரு விவசாயி செடியைப் பிடுங்கும் போது எந்த வேரும் அறுந்து விடாமல் கவனமாகப் பிடுங்குவதைப் போல தேசிய இன மீட்பு விடுதலை அரசியலில் இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுத்து வளர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.அதற்கான முன்னெடுப்பு முயற்சிதான் இந்த விளையாட்டுப் பாசறை. நாம் தமிழர் கட்சியில் ஒவ்வொரு படைப்பிரிவாக உருவாக்கி வளர்த்தெடுத்து வருகிறோம். இளைஞருக்கானது, மகளிருக்கானது, மாணவர்களுக்கு ,வழக்கறிஞர்களுக்கு என்று படைப்பிரிவுகள் இருப்பதைப் போல விளையாட்டுக்கும் பாசறை உருவாக்கி இருக்கிறோம். இந்த பாசறையை அய்யா சி.பா ஆதித்தனார் பெயரைக் குறியீடாக வைத்து அவர் பெயரில் தொடங்கியிருக்கிறோம் ஆதித்தனார்அவர்கள் தமிழர் விளையாட்டு வளர நீண்டகாலம் பாடு பட்டார். விளையாட்டு அழியக் கூடாது என்று அமைப்பு நடத்தி வளர்த்தவர் அவர். அவரது நோக்கம் உயர்ந்தது புனிதமானது. எனவே அதற்கு அய்யா சி.பா. ஆதித்தனார் பெயரை வைத்திருக்கிறோம். .அவர் பெயரில் தொடங்குகிறோம் ‘உடலினை உறுதிசெய் அறிவினை வளர்த்திடு. கொள்கை வகுத்திடு. கூடிச் செயல் செய்யப் பழகு என்கிற கொள்கை முழக்கத்தோடு அழிந்த நம் விளையாட்டை வார்த்து வளர்த்து எடுக்கப் போகிறோம். உடல் நலம் உடற்பயிற்சி பற்றி முன்னோடிகள் பலரும் பலவற்றைக் கூறியிருக்கிறார்கள். ‘உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்’ என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறியிருக்கிறார். ‘உனது உடல்நலம் 3 கிலோமீட்டர் தொலைவில் விற்கப்படுகிறது. நடந்தே சென்று வாங்கி வா’ என்று தேசத்தந்தை காந்தியடிகள் கூறி இருக்கிறார். ‘மனித உடல் நுட்பமான கருவிகள் கொண்ட தொழிற்சாலை. நல்ல பகுத்தறிவு வாதி அதைப் பேணிக் காப்பான் ‘என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் ‘உங்கள் முதல் குளியல் வியர்வையாக இருக்கட்டும்’ என்று கூறியிருக்கிறார் ‘உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்’ என்று நம் முப்பாட்டன் திரு மூலர் கூறியிருக்கிறார். இவ்வளவு முன்னோடிகள் கூறி இருக்கிறார்கள் இப்படி நம் முன்னோர்களின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்வாங்கிக் கொண்டுதான் பாசறையின் பாதை பயணம் வடிவமைக்ககப் பட்டுள்ளது. மத்திய அமைச்சர் மதிப்பிற்குரிய மேனகா காந்தி ஜல்லிக்கட்டு வெளிநாட்டிலிருந்து வந்தது என்கிறார். ஆனால் துடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட் அந்நிய நாட்டு விளையாட்டுதானே.? அது பற்றி எதுவும் கூறுவதில்லையே ஏன்? கிரிக்கெட்டும் சினிமாவும் இரண்டு மதங்களாகிவிட்டன. என்கிறார்கள். கிரிக்கெட் நம் மண் விளையாட்டு இல்லையே? சொல்லப் போனால் நம் மண் சார்ந்த கபடி விளையாட்டைக்கூட வட இந்தியாவில் விளையாடி வருகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் கபடியை சிறுசிறு மாற்றங்களுடன்.நவீனப்படுத்தி விளையாடி வருகிறார்கள். . தமிழரின் பாரம்பரிய விளையாட்டு அழியக்கூடாது. அழிந்து போன விளையாட்டை ,மறக்கப்பட்ட விளையாட்டை மீட்டெடுப்பது இதன் நோக்கம். இதில் எங்களுடன் பல் வேறு உடற்பயிற்சிக் கல்லூரிகளின் மாணவர்களும் ஆசிரியர்களும் துணை நிற்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க இதறகான பரப்புரை, பயிற்சிகள். போட்டிகள் நடக்கவுள்ளன. அதற்கு அவர்களும் நாங்களும் ஒன்றிணைந்து செயல் படுவோம். நம் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கும். துடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட் உயர்தட்டு மக்களின் விளையாட்டாகவே அறியப் படுகிறது. ஓர் உண்மையைச் சொல்லவேண்டும் கிரிக்கெட் விளையாட்டில் புகழ்பெற்ற நாடுகள் தனித்திறன் விளையாட்டில் மிகவும் பின்தங்கி இருக்கின்றன.கிரிக்கெட்டை கைவிட்ட நாடுகள் தனித்திறன் விளையாட்டில்சிறந்து விளங்கு கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, போன்ற கிரிக்கெட் மோகம் இல்லாத நாடுகளில் தனித்திறன் விளையாட்டு வளர்ந்திருக்கிறது. குழு விளையாட்டிலும் நாம் பின்தங்கி உள்ளோம் கையுந்து பந்து, கால்பந்து போட்டிகளிலும் மேலே செல்ல முடியவில்லை. ஒலிம்பிக் ஆசிய போட்டிகளிலும் வெல்ல முடியவில்லை. கிரிக்கெட்டுக்கு ஊடகங்கள் தரும் வெளிச்சமும் அதன் மூலம் கிடைக்கும் புகழ் இதன் தாக்கத்துக்கான காரணங்கள்.கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் ஒட்டப்பந்தய வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. இது ஒரு பெரிய குறைதான். எனவே தமிழ் இளைஞர்களின் கிரிக்கெட் மோகம், மாயையிலிருந்து அவர்களை மீட்டு நம் விளையாட்டில் ஆர்வம் கொள்ளச் செய்யவேண்டும். முதலில் நம் பாரம்பரிய விளையாட்டு பற்றிய புரிதலை ‘ஆர்வத்தை, ஈடுபாட்டை ஏற்படுத்துவது. இளைஞர்களையும் மாணவர்களையும் மாயையில் மூழ்கடிக்கிற கிரிக்கெட்டிலிருந்து மீட்கவே கோடைக்காலத்தில் இப்பாசறை யைத் தொடங்கியிருக்கிறோம்.அதனால்தான் கிரிக்கெட் காலத்தில் இளைஞர்களைக் கவனம் செலுத்த விடாமல் பாசறை நடத்துகிறோம். கபடியை முதலில் எடுத்துக் கொள்கிறோம். சிலம்பம், ஜல்லிக்கட்டு, கிளித்தட்டு என இது தொடரும்.கிளித்தட்டு விளையாட்டை கோகோவுக்கு இணையாக உளர்க்க முடியும். களரி நமது கலைதான். கேரளாவில் எடுத்துக் காத்துவருகிறார்கள் .அழிந்த நமது எல்லா விளையாட்டையும் உறுதியாக மீட்டெடுப்போம். கிரிக்கெட் மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களை தனித்திறன். விளையாட்டுகளான சிலம்பம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடைதாண்டிஓடுதல், வேகஓடுதல்.தூரஓடுதல், கையுந்து பந்து, வட்டுஎறிதல்,ஈட்டிஎறிதல் போன்றவற்றில் ஈடுபாடு கொள்ள வைப்போம் .தடகள,தனித்திறன் விளையாட்டினை ஊக்கம் கொடுத்து ஆர்வம் கொண்டவர்களாக மாற்றுவோம். தமிழ்நாடு முழுக்க பயணித்து நுட்பமான விளையாட்டு வீரர்களை இனங்கண்டு தேர்வு செய்து அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்போம்.

