
‘மனதின் குரல் (133ஆவது பகுதி)’
ஒலிபரப்பு நாள் : 26.04.2026
தமிழில் / குரல்: ஆர். சுதர்ஸன்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலின் இந்தப் பகுதியில் உங்கள் அனைவரோடும் இணைவது எனக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. ஒருபுறம் தேர்தல் பரபரப்பு மேலோங்கி இருந்தாலும், உங்கள் கடிதங்கள்-செய்திகள் வாயிலாக தேசத்தின், தேசத்தின் மக்களின் சாதனைகள் குறித்து பரஸ்பரம் சந்தோஷங்களையும் பரிமாறிக் கொள்ள முடிந்தது. இந்த முறை மனதின் குரலின் தொடக்கமே இப்படிப்பட்ட ஒரு பெரிய சாதனை குறித்துத் தான் இருக்கப் போகிறது.
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
சுதேசி ஈனுலை
நண்பர்களே, பாரதம் எப்போதுமே விஞ்ஞானத்தை தேசத்தின் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்து வந்திருக்கிறது. இந்த எண்ணப்பாடு கூடவே, நம்முடைய விஞ்ஞானிகள், சிவில் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய முயற்சிகள் காரணமாகவே, இந்த செயல்திட்டம் தேசத்தின் நிர்மாணத்தில் பெரும் பங்களிப்பு அளித்து வருகின்றது. இதன் காரணமாக நமது தொழில்துறை வளர்ச்சி, எரிசக்தித் துறை, உடல்நலத் துறை ஆகியவற்றுக்கு பெரும் ஆதாயம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயம் தொடங்கி நவீன புதுமைகள் கண்டுபிடிப்பாளர்கள் வரை, பாரதத்தின் சிவில் அணுசக்தித் திட்டம் அனைவருக்கும் மிகவும் உதவி புரிந்திருக்கிறது. நண்பர்களே, சில நாட்கள் முன்புதான், நமது அணுசக்தி விஞ்ஞானிகள் மேலும் ஒரு பெரிய சாதனையைப் படைத்து பாரதத்தின் கௌரவத்தை உயர்த்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்திருக்கும் Fast Breeder Reactor – வேக ஈனுலையானது criticality அதாவது முதலாவது செயல்பாட்டை அடைந்து விட்டது. அதாவது இந்த செயல்பாட்டுநிலை என்பது என்னவென்றால், ஈனுலையானது முதன்முறையாக self sustaining nuclear chain reaction – தன்னிலையான அணுக்கருப்பிளவு சங்கிலித் தொடர் வினையை வெற்றிகரமாக எட்டிவிட்டது என்று பொருள். இந்தக் கட்டத்தின் பொருள் என்னவென்றால், ஈனுலை செயல்பாட்டுக் கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதாகும். பாரதத்தின் அணுசக்திப் பயணத்திலே இது ஒரு வரலாற்றுப்பூர்வமான மைல்கல் நிகழ்ச்சியாகும். மேலும் இதில் பெரிய விஷயம் என்னவென்றால், அணுசக்தி ஈனுலை முழுமையான வகையிலே சுதேசித் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தான்.
நண்பர்களே, இதை ஈனுலை என்று ஏன் கூறுகிறோம் தெரியுமா? இதன் பின்புலத்தில் ஒரு காரணம் உண்டு. இது எப்படிப்பட்ட முறை என்றால், எரிசக்தி உற்பத்தியோடு கூடவே எதிர்காலத்திற்கான எரிபொருளையும் இது தானே தயாரித்துக் கொள்கிறது. நண்பர்களே, மார்ச் மாதம் 2024 காலகட்டம் எனக்கு நன்கு நினைவிருக்கிறது, அப்போது நான் கல்பாக்கத்தில் இருக்கும் உலையின் core loading – உள்ளகத்தை ஏற்றுவதைக் காண முடிந்தது. பாரதத்தின் அணுசக்தித் திட்டத்திலே தங்களுடைய விலைமதிப்பில்லா பங்களிப்பை அளித்த அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நாட்டுமக்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பாகவும் எளிமையாகவும் ஆக்குவதிலே அவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இதன் வாயிலாக வளர்ச்சியடைந்த பாரதம் காணும் நமது உறுதிப்பாட்டிற்கும் கூட ஒரு புதிய சக்தி கிடைக்கும்.
கைகொடுக்கும் காற்றின் சக்தி
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரலில் இன்று நாம் மேலும் ஒரு சக்தி பற்றி பேச இருக்கிறோம், இது புலப்படாதது என்றாலும் இது இல்லாது போனால் நமது வாழ்க்கை ஒரு கணப்போது கூட இயங்காது. இந்தச் சக்தி தான் பாரதத்தை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது. இது தான் நமது காற்றுசக்தி. நமது பண்டைய நூல்களிலே,
वायुर्वा इति व्यष्टि:, वायुरवै समष्टि:|
வாயுர்வா இதி வ்யஷ்டி:, வாயுரவை சமஷ்டி:
அதாவது, காற்று என்பது ஒரு தத்துவம் மட்டுமல்ல, அது வாழ்க்கையின் சக்தியாகும், இது முழுமைக்குமான சக்தி.
நண்பர்களே, இன்று இந்தக் காற்றுசக்தி தான் பாரதத்தின் முன்னேற்றத்தின் புதிய கதையை எழுதிக் கொண்டிருக்கிறது. காற்றின் சக்தியில் பெரியதொரு சாதனையை நாடு தற்போதுதான் படைத்திருக்கிறது. இப்போது பாரதத்தின் காற்றுசக்தி உற்பத்தித்திறன் 56 கிகாவாட்டுக்கும் அதிகமானதாக ஆகிவிட்டது. கடந்த ஓராண்டிலே, சுமார் 6 கிகாவாட் அளவுக்கு புதிய திறன் அதிகரிக்கப்பட்டது. காற்றுசக்தித் துறையிலே பாரதம் விரைவாக முன்னேறி வருகிறது, உலகெலாம் நம்மை ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நண்பர்களே, இன்று பாரதம், காற்றுசக்தித் திறனில் உலகின் நான்காவது இடத்திலே இருக்கிறது. இது நம்முடைய பொறியாளர்களின் உழைப்பின் பலன், இது நமது இளைஞர்களின் உழைப்பின் பலன், இது நாட்டுமக்களின் ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டின் விளைவு.
நண்பர்களே, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ராஜஸ்தானம் என தேசத்தின் பல மாநிலங்கள் இந்தத்துறையில் தங்களுடைய அடையாளத்தைப் பதித்திருக்கிறார்கள். குஜராத்தின் கட்ச், பாடன், பனாஸ்காண்டா என முன்பெல்லாம் வெற்றுப் பாலைவனமாகக் காட்சிதரும் பகுதிகளில் எல்லாம் இன்று பெரிய புதுப்பிக்கவல்ல எரிசக்திப் பூங்காக்கள் உருவாகி வருகின்றன. இதனால் இளைஞர்களுக்கு ஆதாயங்கள் ஏற்படுகின்றன, புதிய சந்தர்ப்பங்கள் உருவாகின்றன, புதிய திறன்கள் மலர்கின்றன, வேலைக்கான புதிய வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன.
நண்பர்களே, பாரதத்தின் வளர்ச்சிக்காக சூரிய மற்றும் காற்றுசக்தி மிகவும் அவசியமானவை. இவை சுற்றுச்சூழல் தொடர்பான விஷயம் மட்டுமல்ல, இவை நமது எதிர்காலத்தின் பாதுகாப்போடு தொடர்புடையவையும் கூட. இவற்றிலே நம்மனைவரின் பங்களிப்பும் அடங்கியிருக்கிறது. நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும், நாம் தூய்மையான ஆற்றலை கைக்கொள்ள வேண்டும். தேசத்தின் அனைத்து நிலைகளிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் அவசியமானவை. ஏனென்றால் இவற்றால் மட்டுமே பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
நம் நாட்டின் பௌத்த பாரம்பரியம்
நண்பர்களே, மே மாதத் தொடக்கம் ஒரு புனிதமான வாய்ப்போடு நம்மை அணுகுகிறது. சில நாட்களிலே நாம் புத்த பூர்ணிமையைக் கொண்டாடுவோம். நான் உங்களனைவருக்கும் என்னுடைய முதன்மையான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். பகவான் கௌதம புத்தரின் வாழ்க்கைச் செய்தியானது இன்றும்கூட அதே அளவு முக்கியமானதாக இருக்கிறது. அமைதி என்பது நமக்கு உள்ளிருந்து தான் தொடங்குகிறது என்று அவர் நமக்குக் கற்பித்திருக்கிறார். மேலும், தன்னைத்தான் எப்படி வெல்வது என்பதையும் அவர் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இன்று உலகிலே நிலவும் அழுத்தங்கள்-போராட்டங்களுக்கு இடையே புத்தரின் கருத்துக்கள் மேலும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக ஆகியிருக்கின்றன.
நண்பர்களே, தென்னமெரிக்காவின் சிலியில் இருக்கும் ஓர் அமைப்பு பகவான் புத்தரின் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்று வருகிறது. லத்தாக்கிலே பிறந்த ட்ரப்போன் ஓட்ஜர் ரின்போசே – Drubpon Otzer Rinpoche அவர்களுடைய வழிகாட்டுதலில் இந்தப் பணி நடந்து வருகிறது. இந்த அமைப்பு தியானம் மற்றும் கருணையை, மக்களின் வாழ்க்கையோடு இணைத்து வருகிறது. கோசிகுஆஜ் பள்ளத்தாக்கிலே உருவாக்கப்பட்டிருக்கும் தூபியானது, மக்களுக்கு அமைதியின் அனுபவத்தை அளிக்கிறது. உண்மையிலேயே இது பெருமிதமாக இருக்கிறது. பாரதத்தின் பண்டைய வழிமுறை, உலகெங்கிலும் பரவியிருக்கிறது, தொலைவான இடங்களில் இருக்கும் மக்களையும் இது இணைக்கிறது.
நண்பர்களே, பௌத்தப் பாரம்பரியம் இயற்கையோடு இணைவதையும் நமக்குக் கற்பிக்கிறது. பகவான் புத்தருக்கு ஞானம் ஒரு மரத்தடியிலே பிறந்தது. இயற்கை நமது வாழ்க்கையின் இணைபிரியா அங்கமாகும். தேசத்திலும் கூட இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. கர்நாடகத்தின் கர்மா மடாலயம் இதற்கான ஒரு அருமையான எடுத்துக்காட்டாகும். இந்த மடாலயம் ஒரு உயிர்ப்புடைய வனப்பகுதி, இது 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் 700க்கும் மேற்பட்ட நாட்டுமரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நண்பர்களே, புத்தரின் செய்தியானது கடந்தகாலத்தோடு மட்டுமே தொடர்புடையது கிடையாது. அது இன்றும்கூட நடைமுறைக்கு உவப்பானது, எதிர்காலத்திற்கு அவசியமானது. புத்த பூர்ணிமை என்ற சந்தர்ப்பம் நமக்கு உள்ளெழுச்சியை அளிக்கிறது. நாம் நமது வாழ்க்கையிலே அமைதியை அதிகப்படுத்த வேண்டும், கருணையை நம்வசப்படுத்த வேண்டும், நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வு
என் மனம்நிறை நாட்டுமக்களே, நம்முடைய தேசத்திலே ஜனவரி மாதம் 23ஆம் தேதி அதாவது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் தொடங்கி, ஜனவரி 30ஆம் தேதி அதாவது காந்தியடிகள் காலமான நாள் வரை குடியரசு விழா கொண்டாடப்பட்டு வருவதை நீங்களனைவரும் நன்கறிவீர்கள். இந்த விழாவின் முக்கியமான பகுதி தான் Beating Retreat. இன்று நான் உங்களிடத்திலே இந்த Beating Retreat – படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்வு குறித்துத் தான் விவாதிக்க இருக்கிறேன் ஏனென்றால் இதன் பின்னணியில் ஒரு சிறப்பான காரணம் உண்டு.
நண்பர்களே, இந்த விழாவிலே பல்வேறு வாத்தியக்குழுக்கள், பல்வேறு இசைப் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதை நீங்கள் கவனித்திருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாகவே இவற்றிலே இந்திய இசையின் கலப்பு அதிகரித்திருக்கிறது, மேலும் இவை நாட்டுமக்களுக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. படைகள் பாசறைக்குத் திரும்பும் இந்த ஆண்டின் Beating Retreat நிகழ்ச்சி மிகவும் நினைவில் கொள்ளத்தக்கதாக இருந்தது. விமானப்படை, தரைப்படை, கடற்படை மற்றும் மத்திய ஆயுதப்படையினரின் வாத்தியக்குழுக்கள் மிகவும் சிறப்பாக இசைத்தார்கள்.
நண்பர்களே, அருமையான இசையோடு கூடவே, விறுவிறுப்பான அணிவகுப்புகளுடன் நடந்த இந்த நிகழ்ச்சி, அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. விமானப்படையின் வாத்தியக்குழு, சிந்தூர் அணிவகுப்பை அமைத்திருந்தது. கடற்படை மீன் யந்திரம் போன்ற அணிவகுப்பை வகுத்திருந்தது. அதேநேரத்தில், தரைப்படையின் வாத்தியக்குழுவின் இசை வெளிப்பாட்டிலே வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் மற்றும் கிரிக்கெட்டில் பாரதத்தின் வெற்றி காட்சிப்படுத்தப்பட்டது.
நண்பர்களே, Beating Retreat நிறைவடைந்த பிறகு, இந்த உழைப்பு முழுவதும், இந்தச் சாதனைகள் எல்லாம் மெல்லமெல்ல கரைந்து காணாமல் போய் விடுகிறது. ஆனால் இப்போது இது தொடர்பாக மிக அருமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. Beating Retreatன் இசை முதன்முறையாக வேவ்ஸ் ஓடிடியில் இருக்கிறது. வரவிருக்கும் காலங்களிலே இது மற்ற தளங்களிலும் கூட தரவேற்றப்படும், நீங்கள் கண்டிப்பாக இதைக் கேட்டு மகிழுங்கள். நீங்கள் உங்கள் இராணுவத்தையும் அவர்களின் பாரம்பரியங்களையும் தெரிந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்வீர்கள்.
குஜராத்தில் ஃப்ளேமிங்கோ நகரம்
நண்பர்களே, கடந்த சில ஆண்டுகளிலே தேசத்தின் பல்வேறு பாகங்களிலே இயற்கைப் பாதுகாப்பு தொடர்பான உத்வேகமளிக்கும் கதைகள் வெளிப்பட்டிருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் எல்லாம் நமக்கு நம்பிக்கை ஊட்டும் அதே வேளையில் பெருமிதமூட்டவும் செய்கின்றன. சில உதாரணங்களை நான் மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவற்றைக் கேட்டு உங்கள் மனம் குதூகலிக்கும். முதல் விஷயம் கட்ச் பகுதியின் ரண் பற்றியது. மழை நின்று போன பிறகு இங்கே இருக்கும் நிலம் உயிர் பெற்று விடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான ஃப்ளேமிங்கோ பறவைகள் இங்கே வருகை புரிகின்றன. இந்தப் பகுதி முழுவதுமே ரோஜா நிறம் பெற்று விடுகிறது ஆகையால் இதை ஃப்ளேமிங்கோ நகரம் என்றே அழைக்கிறார்கள். இந்தப் பறவைகள் இங்கேயே கூடு கட்டுகின்றன, தங்களுடைய குஞ்சுகளை வளர்க்கின்றன. கட்ச் பகுதி மக்கள் இவற்றை லாகாஜி கே பாராதீ, அதாவது லாகாஜியுடைய கலியாண ஊர்வலத்தார் என்று அழைப்பார்கள். இப்போது லாகாஜியுடைய இந்தக் கல்யாண ஊர்வலத்தார், கட்ச் பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அழகான அடையாளமாக ஆகிவிட்டனர்.
யானைத் தோழர்கள்
நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சி மனிதனுக்கும் வன விலங்குகளுக்கும் இடையிலான ஒத்தாசை பற்றியது. இது உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தது. இங்கே தாராயி, அதாவது அடிவாரப் பகுதிகளில் அறுவடைக்காலத்தில் யானைகளின் கூட்டம் கிராமத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கும். இதனால் மோதல் ஏற்படக்கூடிய அச்சம் அதிகரிக்கிறது. ஆனால் இப்போதோ, உத்தர பிரதேசத்திலும் கூட கஜ் மித்ர அதாவது யானைத் தோழன் போன்ற முயற்சிகள் தொடங்கி விட்டன. கிராமத்தவர்கள் குழுவமைத்து யானைகளின் மீது கவனத்தைச் செலுத்துகிறார்கள். அவர்கள் குறித்த காலத்தில் மக்களை எச்சரிக்கை செய்கிறார்கள். இதனால் மோதல் குறைந்து வருவதோடு, மக்களிடம் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
மீண்டும் தென்படும் கலைமான்
நண்பர்களே, மத்திய பிரதேசத்திலிருந்தும் கூட ஒரு அருமையான விஷயம் வந்திருக்கிறது. சத்திஸ்கட்டில் blackbuck அதாவது கலைமான் மீண்டும் தென்படத் தொடங்கியிருக்கிறது. ஒரு காலத்தில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது, ஆனால் தொடர் முயற்சிகளின் விளைவாக எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இன்று இவை மீண்டும் திறந்தவெளிகளில் ஓடித்திரிவதைக் காண முடிகிறது. நமது இழந்த மரபின் மீட்சி இது. இதே போன்ற நம்பிக்கை Great Indian bustard கானமயில் பாதுகாப்பிலும் தென்படுகிறது.
இந்தப் பறவை நமது பாலைவனப் பகுதிகளின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு காலத்தில் இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது. எந்த அளவுக்கு என்றால் இந்தப் பறவை வழக்கொழிந்து போகும் அபாயம் ஏற்பட்டு விட்டது. ஆனால் இப்போது இவை பாதுகாக்கப்பட பெரிய இயக்கங்கள் நடந்து வருகின்றன. விஞ்ஞான முறைகள் கையாளப்பட்டு, இனப்பெருக்க மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன, இப்போது புதிய உயிர்களின் தொடக்கம் கண்ணுக்குத் தெரிகிறது.
நண்பர்களே, இயற்கையும் மனிதனும் வேறுவேறு அல்ல. நாம் பரஸ்பர நண்பர்கள். நாம் இயற்கையைப் புரிந்து கொண்டால், அதற்கு மதிப்பளித்தால், அதோடு இணைந்து பயணித்தால், மாற்றம் கண்ணுக்குத் தெரியும். இன்று இந்த மாற்றம் தான் அனைத்து இடங்களிலும் புதிய நம்பிக்கையாகத் துளிர்த்துக் காட்சியளிக்கிறது.
மூங்கில் துறையின் வெற்றி
எனதருமை நாட்டுமக்களே, வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். மனதின் குரலில் கூட, நாம் அடிக்கடி வடகிழக்குப்பகுதி மக்களின் சாதனைகள் பற்றி விவாதித்திருக்கிறோம். இன்று இப்படிப்பட்ட மேலும் ஒரு சாதனை பற்றித்தான் நான் உங்களோடு விவாதிக்க இருக்கிறேன், அது தான் மூங்கில் துறையில் வடகிழக்கின் வெற்றி.
நண்பர்களே, எந்தப் பொருள் ஒருகாலத்தில் சுமையாகப் பார்க்கப்பட்டதோ, அது இன்று வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் புதுமைகளுக்கு புதிய வேகத்தை அளித்து வருகிறது. நமது தாய்மார்கள், சகோதரிகள் இதனால் அதிகம் பலனடைந்தவர்கள். மூங்கில் தொடர்பான நமது அணுகுமுறை மாறியதிலிருந்து எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது உங்களுக்கு ஆச்சரியமேற்படுத்தலாம்.
.நண்பர்களே, ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டப்படி, மூங்கில் மரமாக கருதப்பட்டதால், இதோடு தொடர்புடைய விதிமுறைகள் மிகவும் கடுமையானவையாக இருந்தன. எந்த இடத்துக்கும் மூங்கிலைக் கொண்டு செல்வது கடினமாக இருந்தது. இந்த நிலையில் தான் இங்கே இருப்போர் மூங்கிலோடு தொடர்புடைய வேலைகளிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார்கள். நண்பர்களே, 2017ஆம் ஆண்டிலே சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு நாங்கள் மூங்கிலை மரம் என்ற வகைப்படுத்தலிலிருந்து வெளியேற்றினோம். இதன் விளைவினை அனைவரும் கண்கூடாகக் காணலாம். இன்று ஒட்டுமொத்த வடகிழக்கிலும் மூங்கில்உற்பத்தித்துறை தழைத்து வருகிறது. மக்கள் தொடர்ந்து புதுமைகள் படைத்தலில் ஈடுபட்டு, இவற்றில் மதிப்புக்கூட்டலையும் செய்து வருகிறார்கள்.
நண்பர்களே, திரிபுராவின் கோமதி மாவட்டத்தின் பிஜாய் சூத்ரதார், தெற்கு திரிபுராவின் பிரதீப் சக்ரவர்த்தி ஆகியோர் புதிய சட்டங்களை தங்களுக்கான ஒரு பெரிய சந்தர்ப்பமாகப் பார்த்தார்கள். பிறகு இவர்கள் தங்களுடைய வேலையை தொழில்நுட்பத்தோடு இணைத்தார்கள். இன்று இவர்கள் முன்பை விடச் சிறப்பாகவும் அதிக அளவிலும் மூங்கில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகாலந்தின் தீமாபூர் மற்றும் அருகிலே இருக்கும் பகுதிகளைச் சேர்ந்த சுயவுதவிக் குழுக்கள், மூங்கில் தொடர்பான உணவுப் பொருட்களில் மதிப்புக்கூட்டலைச் செய்திருக்கிறார்கள். அங்கே கோரோலோ கிரியேட்டிவ் கிராஃப்ட் போன்ற குழுக்களும் இருக்கின்றன, இவை மூங்கிலால் செய்யப்பட்ட சாமான்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
நண்பர்களே, மிசோராமின் மாமித் மாவட்டத்தில் இருக்கும் குழுக்கள், மூங்கிலின் திசு வளர்ப்பு மற்றும் பசுமைக்குடில் மேலாண்மை தொடர்பான பணிகளை ஆற்றி வருகின்றன. சிக்கிமின் கேங்க்டாக்கிற்கு அருகே இருக்கும் Lagastal Bamboo Enterprise குழுவைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன். இவர்கள் மூங்கிலிலிருந்து கைவினைப் பொருட்கள், அகர்பத்திக் குச்சிகள், மேஜை-நாற்காலிகள் மற்றும் வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் ஆகியவற்றைத் தயாரிக்கிறார்கள்.
நண்பர்களே, நான் இங்கே ஒரு சில எடுத்துக்காட்டுக்களை மட்டுமே கூறியிருக்கிறேன். தேசத்திலே மூங்கில் துறையின் வெற்றியின் பட்டியல் மிகவும் நீண்டது. வடகிழக்கைச் சேர்ந்த மூங்கில் பொருட்கள் ஏதாவது ஒன்றை நீங்கள் அனைவரும் வாங்குங்கள் என்று உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இதைப் பரிசுப் பொருளாக அளிக்கலாம். உங்களுடைய இந்த முயற்சி காரணமாக மூங்கில் பொருட்களை உருவாக்குவதில் வியர்வை சிந்துவோரின் நம்பிக்கை அதிகரிக்கும்.
டிஜிட்டல் வரலாற்று ஆவணக் காப்பகம்
என் உளம்நிறை நாட்டுமக்களே, வேகமாக மாறிவரும் இந்தக் காலத்தில் தொழில்நுட்பம் நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கமாக ஆகி விட்டது. இன்று நாம் நமது கடந்தகாலத்தை, தற்காலத்தோடு இணைப்பதிலும் தொழில்நுட்பத்தின் அற்புதத்தைக் கண்டுவருகிறோம். இந்தத் திசையில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஒரு முன்னேற்றம், கல்வியோடு தொடர்புடையோருக்கும், வரலாற்றில் பிடிப்பு இருப்போருக்கும் களிப்பளித்திருக்கிறது.
நண்பர்களே, சில நாட்கள் முன்பாக இந்திய தேசிய ஆவணக்காப்பகம் ஒரு சிறப்பான இணைய வாயிலை ஏற்படுத்தி அதிலே அலாதியான தரவுகளைப் பகிர்ந்திருக்கிறது. இந்த அமைப்பானது 20 கோடிக்கும் அதிகமான விலைமதிப்பற்ற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறது. இவற்றிலே சில மிகவும் சுவாரசியமானவை. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கில்கித் கையெழுத்துப்படிகள், பூர்ஜமர இலைகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இங்கே 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சுவாரசியமான புத்தகமான ஸ்ரீ பூவலயத்தையும் கூட நீங்கள் காணலாம். எண்களை ஆதாரமாகக் கொண்ட இந்தப் புத்தகம் கட்டங்கள் வடிவில் இருக்கிறது. இராணி லக்ஷ்மிபாயோடு தொடர்புடைய சில முக்கியமான கடிதங்களையும் நீங்கள் பார்க்க முடியும்.
இவற்றிலே 1857ஆம் ஆண்டு அவர் செய்த சில முடிவுகள் பற்றியும் தெரிந்து கொள்ள இயலும், இவை அவருடைய பராக்கிரமத்தை எடுத்துக் காட்டுவன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைக் கொண்டாடுவோருக்கு அவருடைய வாழ்க்கை, ஆஸாத் ஹிந்த் ஃபௌஜ், அவருடைய உரைகளோடு தொடர்புடைய பல ஆவணங்கள் இருக்கின்றன. அதே போல பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களோடு தொடர்புடைய பல ஆவணங்களையும் நீங்கள் பார்க்கலாம். இவற்றிலே பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் நிறுவுதல், ஹிந்தி இலக்கிய மாநாட்டோடு தொடர்புடைய முக்கியமான தகவல்கள் இருக்கின்றன. மேலும் நம்முடைய அரசியல் நிர்ணய சபையோடு தொடர்புடைய பல விசேஷமான ஆவணங்களும் இருக்கின்றன. நீங்கள் அனைவரும் www.abhilekh-patal.in என்ற இணைய வாயிலைக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். இது உங்களுக்கு நம்முடைய வரலாறு தொடர்பான அற்புதமான அனுபவத்தை அளிக்கும்.
சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் சாதித்த இந்தியப் பெண்கள்
நண்பர்களே, சற்றே கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் உலகத்திலேயே மிகவும் திறமைமிக்கவர்களுக்கு மத்தியில் இருக்கிறீர்கள், உங்களிடத்திலே மிகவும் கடினமான கணிதக் கேள்வி ஒன்று இருக்கிறது. இதற்குத் தீர்வு காண உங்களுக்கான நேரம் வெறும் 4 ½ மணி நேரம் தான். அதாவது நேரம் குறைவு, போட்டி சர்வதேச அளவிலானது, மிகவும் கடினமானது. இப்படிப்பட்ட நிலையிலே படபடப்பு ஏற்படுவது இயல்பானது தான். ஆனால் இந்தச் சூழ்நிலைகளில் நமது பெண்கள் அருமையாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்த மாதத் தொடக்கத்திலே ஃப்ரான்ஸ் நாட்டின் போர்தோ நகரிலே ஐரோப்பிய பெண்களுக்கான கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கணிதத்திலே மிகுதியான ஆர்வம் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கான பெரிய போட்டி இது. இது உலகின் மிகவும் மதிப்பான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஒலிம்பியாட் போட்டியிலே நமது பெண்கள் இதுவரையிலான மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்த திறமைகள்மிகு அணி எனக்குப் பெருமிதம் அளிக்கிறது. இதிலே மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயா முந்தடா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சஞ்ஜனா சாக்கோ, சென்னையின் ஷிவானி பரத் குமார், கோல்கத்தாவின் ஷ்ரிமோயி பேரா ஆகியோர் அடங்குவர். நம்முடைய அணி உலகிலே ஆறாவது இடத்தைப் பிடித்தது. ஷ்ரேயா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார், சஞ்ஜனா வெள்ளிப்பதக்கமும், ஷிவானி வெண்கலப்பதக்கமும் வென்றார்கள்.
நண்பர்களே, இந்த ஒலிம்பியாட் போட்டிக்காக பாரதத்தில் தேர்வு வழிமுறை இருக்கிறதே, அதுவே மிகவும் கடினமானது. இது ஒரு பல்லடுக்குத் தேர்வு முறை. இதிலே பிராந்திய, மாநில மற்றும் தேசிய அளவிலான கடினமான சவால்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது. இதற்குப் பிறகு மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் மாணவர்கள் ஒரு மாத காலம் வரை கணிதப் பயிற்சி முகாமிலே பயிற்சி பெறுகிறார்கள். இந்த முகாம் Tata Institute of Fundamental Research மற்றும் Homi Bhabha Center for Science Education அமைப்புகளிலே ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாமின் நிறைவில் அணிக்கான தேர்வுச் சோதனை நடத்தப்படுகிறது. இதிலே செயல்பாட்டின் அடிப்படையில் மட்டுமே பாரத அணி தேர்வு செய்யப்படுகிறது.
நண்பர்களே, ஒவ்வோர் ஆண்டும் நாடெங்கிலும் இருந்தும் சுமார் 6 இலட்சம் மாணவர்கள் இந்த கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கெடுக்கிறார்கள். காலப்போக்கில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, அதாவது தேசத்தின் பெண்களுக்கு இடையே ஒலிம்பியாட் போட்டிகளின் கலாச்சாரம் விரைவாக பிரபலமாகி வருகிறது. இந்த புத்திசாலிக் குழந்தைகளுக்குத் துணையாக இருக்கும் அவர்களுடைய பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.
டிஜிட்டல் முறையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
எனதருமை நாட்டுமக்களே, நம்முடைய தேசத்திலே இப்போது ஒரு மிக முக்கியமான இயக்கம் நடந்து வருகிறது, இதைப் பற்றி ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது. அதுதான் மக்கட்தொகை கணக்கெடுப்பு என்ற இயக்கம், இது உலகின் மிகவும் பெரிய கணக்கெடுப்பு. நண்பர்களே, உங்களில் பலரும் முன்னர் இது போன்ற செயல்முறையைக் கடந்து வந்திருப்பீர்கள், இந்த முறை கணக்கெடுப்பு தொடர்பான அனுபவம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கப் போகிறது. 2027க்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு டிஜிட்டல் மயமாகி விட்டது. அனைத்துத் தகவல்களும் நேரடியாக டிஜிட்டல் வழியாகப் பதிவு செய்யப்படும். வீடுதோறும் செல்லும் பணியாளர்களிடம் மொபைல் செயலி இருக்கும். அவர்கள் உங்களிடம் உரையாடி அதிலே தகவல்களைப் பதிவு செய்து கொள்வார்கள்.
நண்பர்களே, இந்த முறை கணக்கெடுப்பில் உங்களுடைய பங்கெடுப்பு எளிதாக்கப்பட்டிருக்கிறது. நீங்களே கூட உங்களைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய முடியும். பணியாளர்கள் வருவதற்கு 15 நாட்கள் முன்பாக இதற்கான வசதிகள் தொடங்கப்படும். நீங்கள் உங்களுக்கு சௌகரியமான நேரத்தில், தகவல்களை நிரப்பலாம். நீங்கள் செயல்பாட்டை நிறைவு செய்யும் போது, உங்களுக்கு ஒரு சிறப்பான அடையாள எண் கிடைக்கும். இந்த அடையாள எண் உங்களுடைய செல்பேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெறும். பிறகு பணியாளர்கள் உங்கள் இல்லம் வரும் போது, நீங்கள் இந்த அடையாள எண்ணைக் காட்டி தகவல்களை நிறைவு செய்து கொள்ளலாம். ஆகையால் மீண்டும் தகவல்களை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நேரமும் மிச்சம், செயல்பாடும் சுலபம்.
நண்பர்களே, எந்த மாநிலங்களில் முதல்கட்ட சுயக் கணக்கெடுப்பு நிறைவெய்திவிட்டதோ, அங்கே கணக்கெடுப்புப் பணியாளர்கள் வாயிலாக வீடுகளின் பட்டியலிடும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடியே 20 இலட்சம் குடும்பங்களின் வீடுகளைப் பட்டியலிடும் பணி நிறைவடைந்துவிட்டது. நண்பர்களே, தேசத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது வெறும் அரசுப்பணி மட்டுமல்ல. இது நம்மனைவரின் பொறுப்பும் ஆகும். உங்களின் பங்களிப்பு இதிலே மிகவும் அவசியமாகும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, இரகசியமாக வைத்திருக்கப்பட்டு, டிஜிட்டல் பாதுகாப்போடு பராமரிக்கப்படும். வாருங்கள், நாமனைவரும் இணைந்து இந்தச் செயல்பாட்டிலே பங்கெடுப்போம். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ஐ வெற்றி பெறச் செய்வோம்.
பாரதத்தின் பாலாடைக்கட்டிக்கு சர்வதேச விருதுகள்!
நண்பர்களே, நமது தேசத்திலே உணவுப் பாரம்பரியம் என்பது சுவையோடு மட்டும் நின்று போகும் ஒன்றல்ல. இதே பாரம்பரியத்தில் ஒரு சுவாரசியமான பகுதிதான் பாரதத்தின் Cheese, அதாவது பாலாடைக்கட்டி. சில நாட்கள் முன்பாக ஒரு ட்வீட் வாயிலாக நான் ஒரு தகவலைப் பகிர்ந்திருந்தேன். ப்ரேசில் நாட்டிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சர்வதேச பாலாடைக்கட்டி போட்டியிலே பாரத நாட்டின் பாலாடைக்கட்டியின் இரண்டு ப்ராண்டுகளுக்கு புகழ்மிக்க விருதுகள் கிடைத்தன. இந்தச் சாதனை பற்றிய விவாதம் சமூக ஊடகத்திலே பரவிக் காணப்பட்டது. பாலாடைக்கட்டியின் பல வகைகள் பற்றியும் பேச வேண்டும் என்று பலர் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.
யாக் மாட்டின் பாலில் புகழ்பெற்ற பாலாடைக்கட்டி!
நண்பர்களே, பாரதத்தின் பால்வளத்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் துறையிலே மதிப்புக்கூட்டல் காரணமாக நமது பாரம்பரியமான சுவைக்கு புதியதொரு அடையாளம் கிடைத்திருக்கிறது. இன்று பாரத நாட்டு பாலாடைக்கட்டி உலகெங்கிலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. காலை உணவாகட்டும், மதிய உணவாகட்டும், இரவு உணவாகட்டும், உலகின் உணவுத் தட்டுக்களில் பாரத நாட்டின் சுவை சென்றடைந்திருக்கிறது. ஜம்மு கஷ்மீரின் கலாரி பாலாடைக்கட்டியையே எடுத்துக் கொள்வோமே. இது கஷ்மீரின் மோஜரேலா என்று அழைக்கப்படுகிறது. குஜ்ஜர்-பகர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தலைமுறை தலைமுறையாக இதைத் தயாரித்து உண்டு வந்திருக்கிறார்கள். அதே போல சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் லத்தாக்கிலே ச்சுர்ப்பீ மிகவும் பிரசித்தி பெற்றது. மலைகளின் தூய்மையையும், அழகையும் இதன் சுவையிலே உணர முடியும். இந்தப் பாலாடைக்கட்டியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது யாக் மாட்டின் பாலைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
உலகச் சந்தையில் பாரத பாலாடைக்கட்டி
நண்பர்களே, மகாராஷ்டிரம் மற்றும் குஜாராத்திலே, டோப்லி நு பனீர், இதை சுர்தீ பாலாடைக்கட்டி என்று அழைப்பார்கள். இவற்றுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கிறது. நான் இங்கே சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன் ஆனால் நமது தேசத்திலே சுவை மிகவும் பரந்து விரிந்துபட்டது. இன்று இந்தப் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைத்து வருகிறது. பல பாரத நாட்டு நிறுவனங்கள் இந்தத் துறையில் முதலீடு செய்து வருகிறார்கள். நவீன தொழில்நுட்பம் வருகிறது, சிறப்பான பேக்கேஜிங் செய்யப்படுகிறது, நமது உற்பத்தி உலகத்தரத்தோடு முன்னேறி வருகிறது. இதன் விளைவாக, பாரத நாட்டுப் பாலாடைக்கட்டி இப்போது தேசத்தின் எல்லைகளைத் தாண்டி உலகச் சந்தைகளிலும், உணவு விடுதிகளிலும் சென்று எட்டி வருகிறது. இன்று நாம் உள்ளூரிலிருந்து உலகளாவிய நிலை வரை பேசுகிறோம், அதிலே பாரதநாட்டுப் பாலாடைக்கட்டி என்ற எடுத்துக்காட்டு, நமக்கு முன்செல்லும் பாதையை எடுத்துக்காட்டுகிறது. பாரத நாட்டின் சுவை, பாரத நாட்டின் பாரம்பரியம், பாரத நாட்டின் தரம், உலகத்தோருக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும், பாரத நாட்டோடு புதியதொரு இணைப்பை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
ரவீந்திர சங்கீத்தின் தாக்கம்
எனதருமை நாட்டுமக்களே, இந்த மாதம் தேசத்தின் பல பாகங்களில் புதுவருடத்தோடு கூடவே பல பண்டிகைகள்-விழாக்கள் கொண்டாடப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு மே மாதம் 9ஆம் தேதியன்று போச்சீஷே போய்ஷாக் சந்தர்ப்பத்திலே குருதேவர் டகோரின் பிறந்த நாளை நாம் கொண்டாட இருக்கிறோம். குருதேவர் பன்முகத் திறமைகள் கொண்ட ஒரு ஆளுமை ஆவார். அவர் ஒரு பெரும் கவிஞர், சிந்தனாவாதியும் கூட. அவர்பல புகழ்மிக்க அமைப்புக்களுக்கு வடிவம் கொடுத்தவர். நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் அதே வேளையில், கிராமங்களுக்கு வளம் சேர்க்கும் தொழில்களின் ஆதரவாளராக இருந்தவர் குருதேவ் டகோர். அவருடைய ரவீந்திர சங்கீத்தின் தாக்கம் இன்றும் கூட உலகெங்கிலும் நம்மால் காண முடியும். சாந்தி நிகேதனத்திற்கு நான் மேற்கொண்ட பயணங்கள் என்னால் மறக்க முடியாதவை. இந்த அமைப்பை அவர் முழு அர்ப்பணிப்பு உணர்வோடு உருவாக்கி மெருகூட்டினார். அவருக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய பணிவான நினைவாஞ்சலிகள்.
கோடைக்காலத்தில் கவனம் தேவை
நண்பர்களே, மே மாதம் 1857 என்பது முதல் சுதந்திரப் போரின் நினைவலைகளைக் கொண்டுவந்து சேர்க்கிறது. மக்களிடம் தேசபக்தி உணர்வைத் தட்டி எழுப்பிய, பாரத அன்னையின் அனைத்து வீரப் புதல்வர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன். இந்தவேளை பள்ளி மாணவர்களின் விடுமுறைக்காலமும் கூட. அவர்கள் தங்கள் விடுமுறையை நன்றாகக் களிக்கட்டும், புதியதாக ஒன்றைக் கற்கும் முயற்சியை மேற்கொள்ளட்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கோடைக்காலத்தில் நீங்கள் அனைவரும் உங்களுடைய உடல் நலத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
சில புதிய விஷயங்களோடும், நாட்டுமக்களின் சில புதிய சாதனைகளோடும் அடுத்த மாதம் உங்களை நான் மீண்டும் சந்திக்கிறேன். பலப்பல நன்றிகள்.



