புது தில்லி: காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போல தனது மரணமும் இருக்கும் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே புதுப் புயலைக் கிளப்பியுள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் லோக்பால் மசோதா நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தீவிரமாக போராடி வந்தார். ஹசாரேவின் போராட்டத்துக்கு அடிபணிந்த மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றியது. தற்போது நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிராக, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார் ஹசாரே. இந்நிலையில், பஞ்சாப்பில் பயணம் மேற்கொண்டுள்ள அன்னா ஹசாரே, செய்தியாளர்களிடம் பேசுகையில்… தனக்கு கனடாவில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அதை வைத்துப் பார்க்கும் போது காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றது போல் தனது மரணமும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்..
