
பிரதமரின் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) புத்தகத்தை வாங்காமல் புறக்கணித்தது ஏன்? – என்று, கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, நூலக புத்தக கொள்முதல் முறைகேடு வழக்கின் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. மேலும், கோவை பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில், அகல் விளக்கு பதிப்பகத்திற்கு யார் பரிந்துரை செய்தது என கேள்வி எழுப்பியது.
கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை செயலர் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்களைக் கொள்முதல் செய்யப் பரிந்துரை செய்தது யார்? பிரதமரின் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) புத்தகத்தை வாங்காமல் புறக்கணித்தது ஏன்? உள்பட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது உயர் நீதிமன்றம்.
நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதில் வெளிப்படையான கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றக் கோரி பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தேன். அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் கோவை பெரியார் அறிவுலக நூலகம், திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய மண்டல நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, நீதிமன்ற உத்தரவை மீறிய பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிக்கல்வித்துறை அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த நவம்பர் 6 முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அகல் விளக்கு பதிப்பகம், எழுத்தாளர் பெருமாள் முருகன், சதீஷ்குமார், பிரேம்குமார் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன; வரும் திங்கள் கிழமைக்குள் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு விடும்; விரிவான அறிக்கை தாக்கல் செய்ய 4 நாட்கள் அவகாசம் தேவை – என்று கூறினார்.
காணொளி வாயிலாக ஆஜரான பொது நூலகத்துறை இயக்குநரிடம் நீதிபதிகள், அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்களைக் கொள்முதல் செய்ய யார் பரிந்துரை செய்தது? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு இயக்குநர், “112 உறுப்பினர்களைக் கொண்ட 4 நிலைக் குழுக்களே புத்தகங்களைப் பரிந்துரைக்கின்றன. கோவை பெரியார் அறிவுலகத்திற்கு மட்டும் அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து 1,700 புத்தகங்கள் வாங்கப்பட்டு ரூ.17 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “இந்த 4 குழுக்களையும் கடந்து அகல் விளக்கு பதிப்பக நூல்கள் நுழைக்கப்பட்டதா? குழு பரிந்துரைத்த பிரதமரின் ‘மனதின் குரல்’ தொடர்பான புத்தகத்தை வாங்காமல் புறக்கணித்துவிட்டு, அகல் விளக்கு புத்தகங்களை வாங்கியது ஏன்? தவறு செய்த ஒரு நபரைக்கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்த வழக்கில் காணொளி மூலம் ஆஜரான கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி, “ஒரே பதிப்பகத்திடமிருந்து 17 லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்குவது மிக அதிகம். தென்காசி மாவட்டத்தில் மட்டும் 27 லட்சம் ரூபாய்க்கு அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது; இதற்காக 112 வல்லுநர் குழுவினர் மீது பழியைப் போடுவது ஏற்புடையதல்ல. ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலி புத்தகங்களை உருவாக்கியுள்ளனர். இந்த 4 குழுக்களில் எங்கு முறைகேடு நடந்தது என்பதை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிய நான் நீதிமன்றத்திற்கு உதவத் தயார்” என்று குறிப்பிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த முறைகேடு குறித்துத் தமிழ்நாடு அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Posts by Dhinasari Reporter:
- Review of Ramayana movie; Dushyanth Sridhar answering some of the questions raised!
- தென்காசி: டிஜிட்டல் கைது என பயமுறுத்தி ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது!
- அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!
- சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரங்களைக் கண்காணிக்க நீதிமன்றம் குழு அமைப்பு!
- ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் நியமனத்தில் அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை!



