பண மோசடி விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை அவர் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்தப் பணம் திருப்பி தரப்படும் என்றும், அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. மீடியாவுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கூறியபடி பணம் வழங்கப்படவில்லையாம். இந்நிலையில், எம்.கே. மீடியா நிறுவனம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, எம்.கே. மீடியா நிறுவனம் சார்பில் கொல்கத்தா ஷேக்ஸ்பியர் சரனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
