Home Blog Page 6198

செல்ஃபி மோகம்: படம் எடுத்த பாம்பை படம் பிடித்த புது மாப்பிள்ளை பரிதாப மரணம்

தாராபுரம்: செல்ஃபி மோகத்தில், தன் மீது ஊர்ந்து ஏறிய பாம்பைப் படம்பிடித்து நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய புது மாப்பிள்ளை விஷம் ஏறி பரிதாபமாக மரணம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரகுமார் (27). இவரது மனைவி செல்வி(23). இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில், வேலைக்குச் சென்று வீடு திரும்பிய சந்திரகுமார், இரவில் மது அருந்திவிட்டு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்திருந்தார். அப்போது, தனது செல்போனில் விளையாடத் தொடங்கினார். வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு படங்களை அனுப்பினார். அப்போது அவரது வீட்டின் அருகே வந்த பாம்பு ஒன்று, திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரகுமார் மீது ஊர்ந்தது. இரவில் ஏதோ ஊர்ந்தது போல் இருந்ததால், திடீரென விழித்த சந்திரகுமார், பாம்பு படமெடுத்தபடி நின்றதைக் கண்டார். தன் மடியில் ஊர்ந்த பாம்பை கையில் பிடித்து தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் ‘எனது வீர தீரச் செயலை பாருங்கள்’ என்று நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் படத்தை அனுப்பி வைத்தார். அந்நேரம் பாம்பு சந்திரகுமாரை பல இடங்களில் கொத்தியுள்ளது. விஷம் உடலில் பரவவே வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்த சந்திரகுமாரை அவரது மனைவி கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சந்திரகுமாரை சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

28ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்பில்லை: இந்திய கம்யூனிஸ்ட்

சென்னை: விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள மார்ச். 28 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகப் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை என்று முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை அமைக்காமல் உள்நோக்கத்தோடு கால தாமதப்படுத்தி வருகிறது. இந் நிலையில் கர்னாடக அரசு மேக தாட்டு, ராசி மணல் ஆகிய இடங்களில் காவரியின் குறுக்கே அணைகள் கட்டி தண்ணீரை தேக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் (2015&16) நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சட்ட மீறலாகும். தொடர்ந்து சட்ட மீறலில் ஈடுபட்டு வரும் கர்னாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்ப காலத்திலிருந்து இடைவிடாது தொடர்ந்து போராடி வருகிறது. 1972 ஆம் ஆண்டிலேயே மக்களவையில் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்ட நடுவர் மன்ற அமைக்க வேண்டியதன் அவசியத்தை நாகப்பட்டினம் தொகுதி உறுப்பினர் மா.காத்த முத்து மூலம் வலியுறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக 1989ஆம் ஆண்டில் தஞ்சாவூர் முதல் வேதாரண்யம் வரையிலுமாக 110 கிலோ மீட்டர் மாபெரும் மனித சங்கலி போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 48 மணி நேரம் சாலை&ரயில் மறியல் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதை போல் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் காவிரி நதிநீர் கோரிக்கைக்காக அதனதன் நிலையிலிருந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தமுறையில் வரும் 28.03.2015 அன்று காவிரி பாசன மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்தை சென்னையில் கூடிய அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் அறிவித்துள்ளன. இம் மாதம் 25 முதல் 29 முடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது தேசிய மாநாடு புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதனையட்டி 29.03.2015 அன்று பேரணி&பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் முழு அடைப்பு போராட்டத்தில் நேரடியாக பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லை. வருகிற 09.04.2015 அன்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்து காவிரி பாசன மாவட்டங்களில் நடத்தும் சாலை&ரயில் மறியல் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரித்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.- என்று கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலின்போது திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட், மக்கள் விரோத பட்ஜெட் என கூறி கூட்டத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி இன்று தாக்கல் செய்தார். மாநகராட்சியின் மொத்த வரவு 2 ஆயிரத்து 392 கோடி ரூபாய் எனவும் மாநகராட்சியின் செலவுத் தொகை 2 ஆயிரத்து 41 கோடி ரூபாயாக உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் சாலைகள் அமைக்க ஆயிரத்து 232 கோடி ரூபாயும், மெரினாவில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க 90 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல்களை தடுப்பது, குடிநீர் பிரச்னையை தீர்ப்பது என்பன உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

கோடைக்கு ஏற்ப குடிநீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை: கோடைக்காலம் வந்துவிட்டதால், குடிநீர்ப் பந்தல்கள் அமைக்குமாறு கட்சினருக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்! மக்கள் நலப் பணிகளை தன்னலம் கருதாது ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்படுத்துவதில் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எப்பொழுதும் முன்னணியில் இருந்து வருவதை மக்கள் நன்கு அறிவர். அந்த வகையில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் தற்போது ஆற்ற வேண்டிய பணி ஒன்றினை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். அது தான் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் பணி. வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கிவிட்டதால், கழக உடன்பிறப்புகள் தாங்கள் வாழும் பகுதிகளில் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், மதியம் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

லீ குவான் யூ மரணம்: கருணாநிதி இரங்கல்

சென்னை: சிங்கப்பூர் நாட்டின் முதல் பிரதமராக 1959ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட லீ குவான் யூ 31 ஆண்டுகள் தொடர்ந்து அந்த நாட்டின் முடி சூடா மன்னராக விளங்கி, நவீன சிங்கப்பூருக்கான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திய பெருமகன் ஆவார் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவரது இரங்கல் குறிபில், வெறும் துறைமுக நகரமாக இருந்த சிங்கப்பூர் இவரது ஆட்சிக் காலத்திலே தான் உலகமே பிரமித்திடும் வகையில் மிகப் பெரும் வர்த்தக நகரமாக மாறியது. ஆங்கில அரசிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கும், மலேசியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக இருப்பதற்கும் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் தான் லீ குவான் யூ அவர்கள். உண்மையில் சுதந்திரச் சிங்கப்பூரின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவரே லீ குவான் யூ அவர்கள் தான். சிங்கப்பூரில் தமிழர்கள், சீனர்கள், மலேசியர்கள் ஆகிய மூன்று தேசிய இனங்களையும் ஒருங்கிணைத்து, அவர்களின் பாசத்தையும், பேராதரவையும் பெற்றவர் இவர். தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணகர்த்தாவும் லீ குவான் யூ அவர்களே தான். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றிருந்த போது, பிரதமர் லீ குவான் யூ, தன்னுடைய அமைச்சர் பெருமக்களோடு உற்சாகமான வரவேற்பளித்ததோடு, அறிஞர் அண்ணா அவர்களின் பேருரையைக் கேட்டு ஆனந்தமடைந்த நிகழ்வு என் நெஞ்சில் இன்றும் நிலைத்திருக்கிறது. ஈழத் தமிழர்கள்பால் பேரன்பு கொண்டிருந்த லீ குவான் யூ அவர்கள் ஈழத் தமிழர்கள் மிகப் பெரும் உழைப்பாளிகள்; அவர்கள் தமது போராட்டத்தில் நிச்சயம் வெற்றியடைவார்கள் என்று மனம் திறந்து குறிப்பிட்டதை உலகத் தமிழர்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள். சிங்கப்பூர் வரலாற்றில் மிகப் பெரிய நாயகனாக வாழ்ந்து, சிங்கப்பூர் மக்களின் தந்தையாகத் திகழ்ந்த லீ குவான் யூ அவர்களின் மறைவினால் வாடும் சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக அவருடைய குடும்பத்தினருக்கும், உலகெங்கிலும் வாழும் அவருடைய நண்பர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

மேகதாது அணை எதிர்த்து 28 ஆம் தேதி முழு அடைப்பு: திமுக ஆதரவு

சென்னை: வரும் 28 ஆம் தேதி விவசாயிகள் சங்கங்களின் சார்பில் நடத்தப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை; 8-3-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு, ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதனை 12 மாதங்களிலும் பகிர்ந்து வழங்க வேண்டுமென்று தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனைக் காதில் போட்டுக் கொள்ளாமல், அங்குள்ள அணைகள் நிரம்பியவுடன் உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு வழங்குகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையிலே தான் தற்போது தமிழகத்திற்கு உபரியாகத் தங்களிடம் உள்ள நீரை வழங்கி வந்த கர்நாடகா, அந்தத் தண்ணீரையும் தாங்களே தேக்கி வைத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், கர்நாடகாவிலே மேலும் இரண்டு அணைகளை மேகதாது என்ற இடத்தில் கட்ட முடிவு செய்து, அவற்றைக் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளிலே ஈடுபட்டு வருகிறார்கள்” என்பதைப் பற்றி விளக்கமாகத் தெரிவித்து, அதற்காக நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள் அந்த அணையை முற்றுகையிடச் சென்ற போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு, விவசாயிகள் அறிவித்த முற்றுகைப் போராட்டத்திற்கு தி.மு. கழகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் தெரிவித்திருந்தேன். கர்நாடகா அரசு தற்போது மேகதாதுவில் அணைகளைக் கட்ட மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி, நடுவர் மன்றத்தின் முடிவுக்கு முற்றிலும் எதிரானது என்பதுடன், இதுகுறித்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற போது, அந்தத் தீர்ப்புக்காகக் காத்திருக்காமல், குறுக்கு சால் ஓட்டுவதைப் போன்றதுமாகும். இதுபற்றி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், “கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்முறையீடு செய்வது அந்த மாநிலத்திற்கு எந்தப் பயனும் ஏற்படுத்தாது. தமிழக அரசு எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் மேகதாது அருகே அணைகள் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பு குறித்து கர்நாடகாவைச் சேர்ந்த யாரும் ஆதங்கப்பட வேண்டாம். இரு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவை சட்டத்தால் தடுக்க முடியாது” என்றெல்லாம் கூறிய போதும், தமிழக அரசின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின்வாழ்வாதாரத்iப் பாதுகாத்திட முதலமைச்சர் வாயே திறக்கவில்லை என்பதோடு, தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் இதுபற்றிக் கலந்தாலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதையும் பொருள்படுத்தவில்லை. மாறாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினால், கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று கருதிக் கொண்டு அதையே செய்து காலங்கழித்து வருகிறார்கள். ஒருவேளை இன்றைய முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களை யெல்லாம் அழைத்துக் கூட்டம் நடத்தினால், முன்னாள் முதல் அமைச்சர் என்ன சொல்வாரோ என்று பயந்து கொண்டிருக்கிறாரோ என்னவோ? ஏனென்றால் மத்திய அரசு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போதும், ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த போதும், தமிழக முதலமைச்சர், நிதியமைச்சர் என்ற முறையில் அரசின் சார்பில் எவ்விதக்கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் இந்தப் பிரச்சினையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அலட்சியமாக இருந்த போதிலும், காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பி.ஆர். பாண்டியனும், மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகளும் பெரு முயற்சி எடுத்து, தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளையும் நேரிலே அழைத்து 21-3-2015 அன்று சென்னையில் கூட்டிய கூட்டத்தில் வரும் 28ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு (பயத்) போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு அவர்கள் அழைப்பு விடுத்தும், அந்தக் கூட்டத்தை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள். கழகத்தின் சார்பில் செய்தித் தொடர்பாளர் தம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு, கழகத்தின் ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார். புதிய அணைகளைக் கட்டுவதற்காக மத்திய அரசு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியைக் கூடப் பெறாமல், அண்மையில் கர்நாடக அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் மேகதாது அணைகள் கட்டுவதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. இதையெல்லாம் கண்டிக்கும் நிலையில் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 28ஆம் தேதி முழு அடைப்பு நடத்தவும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து பிரதமரை நேரில் சந்தித்துக் கோரிக்கையை வலியுறுத்தவும், தமிழகஅரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை தமிழக அரசு விரைவுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வற்புறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதற்குப் பிறகாவது இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக ஆளுங்கட்சி விழித்துக் கொண்டு தமிழக விவசாயிகளின் தொடரும் துயரங்களைக் களைந்திட முன் வர வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்த முன்வந்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கும் என்பதை அறிவிக்கின்றேன். விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்திய கூட்டத்திற்கு வருகை தராத கட்சிகளும் 28ஆம் தேதி முழு அடைப்பில் கலந்துகொண்டு, தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் விவசாயிகளுக்குப் பின்பலமாக இருக்கிறது என்பதை மெய்ப்பித்துக் காட்ட முன்வர வேண்டும். ஆளுங்கட்சியோ, அல்லது வேறு ஏதாவது கட்சிகளோ அதற்கு முன்வரவில்லை என்றால் தமிழக விவசாயிகள் அவர்களை என்றென்றும் மன்னிக்க மாட்டார்கள். பெருந்தன்மையோடு தமிழக அரசே முன் வந்து, விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை ஆதரித்து தமிழகத்தில் 28-3-2015 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு வெற்றிகரமாக நடைபெறும், அரசுப் பேருந்துகள் இயங்காது, கடைகள், அலுவலகங்கள் எதுவும் திறக்காது என்றெல்லாம் அறிவிப்பது தான் முறையானதாக இருக்கும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களும், திரையரங்க உரிமையாளர்களும், அனைத்துத் தரப்பினரும் இந்தப் பிரச்சினையின் அத்தியாவசியத்தை உணர்ந்து முழு ஒத்துழைப்பளித்திட முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.

லாலு கட்சியின் அலுவலக வாடகை ரூ.333 மட்டுமே!

புது தில்லி: லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் தில்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்துக்கான வாடகை என்ன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கேட்டிருந்தார். இதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் அளித்த பதிலில் 2001-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதியில் இருந்து வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் ராஷ்டிரீய ஜனதா தள அலுவலகம் இயங்கி வருகிறது. 2 அறைகள் கொண்ட இந்த அலுவலகத்துக்கான மாத வாடகை ரூ.333 மட்டுமே செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராஷ்டிரீய ஜனதா தளம் 2008-ல்; தில்லியில், கட்சிக்கென தலைமையகமாக 3 மாடிகள் கொண்ட ராப்ரி பவனைக் கட்டியுள்ள போதும் வி.பி.ஹவுஸ் கட்டட அலுவலகத்தையே இப்போதும் பயன்படுத்தி வருகிறது. லாலு கட்சியின் அலுவலக வாடகை ரூ.333 மட்டுமே! புது தில்லி: லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி அலுவலகம் தலைநகர் தில்லியில் உள்ள வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்துக்கான வாடகை என்ன என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் கேட்டிருந்தார். இதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் அளித்த பதிலில் 2001-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதியில் இருந்து வி.பி. ஹவுஸ் கட்டடத்தில் ராஷ்டிரீய ஜனதா தள அலுவலகம் இயங்கி வருகிறது. 2 அறைகள் கொண்ட இந்த அலுவலகத்துக்கான மாத வாடகை ரூ.333 மட்டுமே செலுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராஷ்டிரீய ஜனதா தளம் 2008-ல்; தில்லியில், கட்சிக்கென தலைமையகமாக 3 மாடிகள் கொண்ட ராப்ரி பவனைக் கட்டியுள்ள போதும் வி.பி.ஹவுஸ் கட்டட அலுவலகத்தையே இப்போதும் பயன்படுத்தி வருகிறது.

சிங்கப்பூர் தந்தை லீ குவான் மறைவு தமிழர்க்கு ஈடு செய்ய முடியாத இழப்பு: ராமதாஸ்

சென்னை: சிங்கப்பூர் தந்தை லீ குவான் மறைவு தமிழர்க்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சிங்கப்பூரை உருவாக்கியவரும், தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை அந்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான லீ குவான் யூ காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்தவர்; அதற்குப் பிறகும் இவர் கை காட்டுபவர் தான் அந்நாட்டின் பிரதமராக முடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால், அவ்வளவு செல்வாக்கு இருந்தும் எளிமையின் சின்னமாக திகழ்ந்தவர். சிறிய நாடான சிங்கப்பூரை அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் உலகின் சந்தையாக மாற்றி மக்களின் வளமான வாழ்க்கைக்கு வழி வகுத்தவர். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பில் அக்கறை காட்டியவர். தமிழை சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்து மரியாதை செய்தவர். ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய இந்திய ஆட்சியாளர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை தீவிரவாத ஒழிப்பு என்று வர்ணித்த நிலையில், அது இனப்படுகொலை என்று துணிச்சலுடன் கூறிய தலைவர் லீ குவான் யூ மட்டுமே. அதுமட்டுமின்றி, ‘‘இலங்கை அதிபர் இராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி; அவரைத் திருத்த முடியாது. ஈழத் தமிழர்களை சிங்களத்தால் வீழ்த்தி விட முடியாது. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க முடியாது; அந்நாட்டு பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு’’ என பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர். பிறப்பால் தமிழர் இல்லாவிட்டாலும் தமிழர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த லீ&யின் மறைவு தமிழர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் சிங்கப்பூர் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மறைந்தாலும் அவரது புகழும், சாதனைகளும் என்றென்றும் வாழும்.

14 வயது சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த 32 வயது ஆட்டோ ஓட்டுநர் நண்பருடன் கைது

சேலம்: சேலம் மாவட்டத்தில் 14 வயதுச் சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த ஆட்டோ ஓட்டுநர், அவரது திருமணத்துக்கு உதவிய நண்பர் ஒருவருடன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மோகனுக்கு, சேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசிக்கும் காய்கறி வியாபாரம் செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மோகன் அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் மகளான 5 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த 14 வயதுச் சிறுமியை தனக்கு கல்யாணம் செய்து தருமாறு மோகன் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதித்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது மகளை அழைத்துக்கொண்டு அந்தப் பெண் சேலம் அருகில் உள்ள அதிகாரப்பட்டிக்கு சென்றார். அப்போது, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் மாப்பிள்ளை கோலத்தில் மோகனும், அவரது நண்பரும் இருந்துள்ளனர். அங்கே கோவிலில் வைத்து மோகனுக்கும் அந்தச் சிறுமிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் குறித்து இரு வீட்டாரின் தரப்பில் உறவினர்கள் எவருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். பின்னர் மோகன் அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு பெரிய வீராணம் பகுதிக்கு வந்து குடியேறினார். இந்நிலையில், சிறுமியை மோகன் திருமணம் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சேலத்தில் உள்ள அன்பு இல்ல நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர். அவர்களின் புகாரின் பேரில், சேலம் காவல் ஆணையர் அமல்ராஜ் இதுகுறித்து விசாரிக்க அம்மாபேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விசாரணையில் குழந்தை திருமணம் நடந்துள்ளது உறுதியானது. இதையடுத்து 14 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்துக்காக ஆட்டோ டிரைவர் மோகனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். இதை அறிந்து, சிறுமியின் தாயார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாட்டின் நலன் சார்ந்த போராட்டங்களுக்கு ஆதரவளிப்போம்: அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி கடிதம்

சென்னை: தேச நலன் சார்ந்த அன்னா ஹசாரேவின் போராட்டங்களுக்கு திமுகவின் ஆதரவு என்றும் உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்: நிலம் கையகச் சட்ட மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும்படி மார்ச் 14-ஆம் தேதி நீங்கள் (ஹசாரே) எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். 2013ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகச் சட்டத்தில் விவசாய நிலங்களைத் தனியார் திட்டங்களுக்கு வழங்க விவசாயிகளின் 80 சதவீத ஒப்புதல் தேவை என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிபந்தனை தற்போதைய சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை என்பது விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகும். 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்காக 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் ஆட்சேபத்துக்குரியது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள்களின் தேவையைச் சமாளிக்க விவசாய பொருள்களின் உற்பத்தியையும் பெருக்க வேண்டியது அவசியம். எனவே, விளை நிலங்களை மற்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையும் தற்போதைய சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இது தேச நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று பட்டியலிட்டு மொத்தம் 6 அம்சங்களைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த அம்சங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தீர்கள். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே கொடுமையானதாகும். விவசாயிகளுக்கு எதிரான நிபந்தனைகளுடன் கூடிய இந்தச் சட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே, திமுக எதிர்த்து வருகிறது. மார்ச் 20-ஆம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்தச் சட்டத்தை இறுதி வரை கடுமையாக எதிர்ப்போம். சமூக நலன்களுக்காகவும், தேச நலன்களுக்காவும் அமைதி வழியில் தாங்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுகவின் ஆதரவு என்றும் உண்டு -என்று அவர் கூறியுள்ளார்.