நாட்டின் நலன் சார்ந்த போராட்டங்களுக்கு ஆதரவளிப்போம்: அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி கடிதம்

சற்றுமுன்

சென்னை: தேச நலன் சார்ந்த அன்னா ஹசாரேவின் போராட்டங்களுக்கு திமுகவின் ஆதரவு என்றும் உண்டு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்: நிலம் கையகச் சட்ட மசோதாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும்படி மார்ச் 14-ஆம் தேதி நீங்கள் (ஹசாரே) எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். 2013ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகச் சட்டத்தில் விவசாய நிலங்களைத் தனியார் திட்டங்களுக்கு வழங்க விவசாயிகளின் 80 சதவீத ஒப்புதல் தேவை என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிபந்தனை தற்போதைய சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளின் ஒப்புதல் தேவையில்லை என்பது விவசாயிகளின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகும். 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த நோக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அதற்காக 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் ஆட்சேபத்துக்குரியது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள்களின் தேவையைச் சமாளிக்க விவசாய பொருள்களின் உற்பத்தியையும் பெருக்க வேண்டியது அவசியம். எனவே, விளை நிலங்களை மற்ற திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையும் தற்போதைய சட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இது தேச நலனுக்கு முற்றிலும் எதிரானது என்று பட்டியலிட்டு மொத்தம் 6 அம்சங்களைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த அம்சங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தீர்கள். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே கொடுமையானதாகும். விவசாயிகளுக்கு எதிரான நிபந்தனைகளுடன் கூடிய இந்தச் சட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே, திமுக எதிர்த்து வருகிறது. மார்ச் 20-ஆம் தேதி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்தச் சட்டத்தை இறுதி வரை கடுமையாக எதிர்ப்போம். சமூக நலன்களுக்காகவும், தேச நலன்களுக்காவும் அமைதி வழியில் தாங்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுகவின் ஆதரவு என்றும் உண்டு -என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.