Home Blog Page 6199

விவசாயிகளே… நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன்: மனதின் குரல் உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

modi-man ki batt 22.3.15 அன்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சி – பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ ஹிந்தி உரையின் தமிழாக்கம் : (சென்னை வானொலியில் ஒலிபரப்பானது) எனது அருமை விவசாய சகோதர சகோதரிகளே!! உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்! நாட்டின் நெடுந் தொலைவுகளில் இருக்கும் என் விவசாய சகோதர சகோதரிகளுடன் பேசக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பது என் பேறாகவே நான் கருதுகிறேன். விவசாயிகளோடு நான் பேசும் போது, ஒரு வகையில் நான் கிராமத்துடனேயே பேசும் உணர்வு ஏற்படுகிறது, விவசாயப் பணியாளர்களோடு பேசுவதாக உணர்கிறேன், இந்த விளை நிலங்களில் பணி புரியும் தாய்மார்கள், சகோதரிகளோடு பேசுவதாக நினைக்கிறேன். அந்த வகையில் பார்க்கும் போது, நான் இது வரை வெளிப்படுத்திய என் மனதின் குரல்-உணர்வுகளைக் காட்டிலும் இது மிகவும் வித்தியாசமான ஒன்றாக எனக்குப் படுகிறது. விவசாயிகளோடு என் மனதின் குரலை நான் பரிமாறிக் கொள்ள நினைத்த போது, மிகத் தொலை தூரங்களில் இருக்கும் கிராமங்களில் வசிப்பவர்கள், என்னிடத்தில் இத்தனை கேள்விகள் கேட்பார்கள், இத்தனை அதிக தகவல்களை அளிப்பார்கள், என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை; இது எனக்கு அதிக ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. நீங்கள் எத்தனை விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்! நீங்கள் எத்தனை ஆக்கபூர்வமாக சிந்திக்கிறீர்கள்! யாராவது உங்கள் குரல்களுக்கு காது கொடுக்க மாட்டார்களா என்று நீங்கள் ஆவலோடு காத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது!! முதலில் நான் உங்களுக்கு என் வணக்கத்தை தெரித்துக் கொள்கிறேன். உங்கள் கடிதங்களைப் படித்த பின்னர் அதில் நான் உங்கள் வலிகளை, துயரங்களைப் பார்த்தேன், இந்த அளவுக்கு சகித்துக் கொண்ட நீங்கள், எந்த விதமான கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. உங்கள் கருத்துக்கள் எனக்கு அதிர்ச்சியை அளித்திருக்கின்றன. ஆகையால் நான் இந்த மனதின் குரலை கல்விப் பயிற்சிக்கு அளிக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவே எடுத்துக் கொள்கிறேன். எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, நீங்கள் எழுப்பியுள்ள அனைத்து விஷயங்களைப் பற்றியும், அனைத்துக் வினாக்களைப் பற்றியும், நீங்கள் முன் வைத்திருக்கும் அனைத்து பரிமாணங்களைப் பற்றியும், முழுமையான வகையில் நான் அரசில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவேன், இதயபூர்வமான அணுகுமுறையைக் கொண்டு வருவேன், எனது கிராமங்கள், எனது ஏழை மக்கள், என் விவசாய சகோதரர்கள் ஆகியோரை இந்த நலிந்த நிலையில் வைத்திருக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் சகோதரர்களே! விவசாயிகள் விவசாயம் தொடர்பான பிரச்சனைகளை முன் வைத்திருக்கிறார்கள்; ஆனால் இவை தவிர, அவர்கள் வேறு பல விஷயங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறார்கள். கிராமங்களில் நிலவும் அராஜக நிலை, வன்முறையாளர்களால் அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள் ஆகியவை பற்றியும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இயற்கை சீற்றங்கள் ஏற்படுத்தும் நாசம் ஒரு புறம் இருந்தாலும், அக்கம் பக்கத்தில் இருக்கும் சின்னச் சின்ன வியாபாரிகளால் ஏற்படும் தொல்லைகளைக் கூட அவர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. கிராமத்தில் மாசடைந்த நீரைப் பருக வேண்டி இருப்பது குறித்து சிலர் தகவல் அளித்திருக்கிறார்கள்; கிராமங்களில் தங்கள் கால்நடைகளைப் பராமரிக்க வாய்ப்பு இல்லாமல் இருப்பதைப் பற்றி சிலர் தெரிவித்திருக்கிறார்கள்; வேறு சிலரோ, கால்நடைகள் இறந்து விட்டால், அவற்றை முறையாக அகற்றக் கூட வழியில்லாமல் இருப்பதால், நோய்கள் பரவக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக கவலைப்பட்டார்கள். அதாவது எந்த அளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக ஆட்சியாளர்களுக்கு ஒரு கடுமையான செய்தி அளிக்கப்படுகிறது. இந்த சின்னச் சின்ன விஷயங்களைக் கூட நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது தான் நமக்கு ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது. இதையெல்லாம் படிக்கும் போது, சில வேளைகளில் எனக்கு அவமானமாக கூட இருந்தது. நாம் என்ன செய்திருக்கிறோம்? ஏன் இப்படி செய்திருக்கிறோம் என்பதற்கான விடை என்னிடத்தில் இல்லை. ஆனால் ஒன்று, நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் என் மனதைத் தொட்டு விட்டன என்பது என்னவோ உண்மை. கண்டிப்பாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, உண்மையான முயற்சிகளை மேற்கொள்வேன். அனைத்துக் கோணங்களிலிருந்தும் நான் அரசில் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன், புரிதலை உருவாக்குவேன், துரிதமாக செயல்பட வைப்பேன், இதுவே எனது முயற்சியாக இருக்கும் என்பதை நான் உறுதி அளிக்கிறேன். கடந்த ஆண்டு பருவமழை குறைவாக இருந்ததால், பிரச்சனைகள் இருந்தது என்பதை நான் அறிவேன். இந்த ஆண்டு பருவம் தவறிப் பெய்த மழை காரணமாகவும், ஆலங்கட்டி மழை காரணமாகவும், மஹாராஷ்ட்ர மாநிலத்துக்கு மேலே இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மிகவும் கடினமாக உழைத்து, சிறிய அளவில் விவசாயம் செய்பவர்கள், ஆண்டு முழுவதும் விவசாயத்தில் ஈடுபட்டு, தங்கள் வாழ்கையை நடத்துகிறார்கள், அவர்கள் அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். இந்த சோதனைக் காலத்தில் நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன். மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் மாநில அரசோடு இணைந்து, நிலைமையை மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகிறோம்; எனது அரசின் அமைச்சர்களும், மாநிலங்களில் நிலவும் நிலையைத் தெரிந்து கொள்ள ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த சங்கடத்தில் மூழ்கி இருக்கும் அனைத்து விவசாய சகோதரர்களுக்கு உறுதுணையாக செய்ய வேண்டியவை அனைத்தையும் நாம் இணைந்து செய்ய வேண்டும் என்று நான் மாநில அரசுகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களின் இந்த சங்கடம் நிறைந்த வேளையில், அரசு புரிதலோடு, உங்கள் தோளோடு தோள் நின்று துணை வரும்; முடிந்த மட்டில் உங்கள் எதிர்பார்ப்புக்கள் நிறைவு செய்யப்படும் என்று நான் நம்பிக்கை அளிக்கிறேன். கிராமங்களில் வாழ்பவர்களும், விவசாயிகளும் பல பிரச்சனைகளை எழுப்பி இருக்கிறார்கள். நீர் பாசனம் தொடர்பான கவலை கணிசமாக இருக்கிறது, கிராமங்களில் சாலை வசதி இல்லை என்பது குறித்து கோபம் இருக்கிறது, உரங்களின் விலையேற்றம் குறித்தும் விவசாயிகளின் கோபம் வெளிப்படுகிறது, மின்சாரப் பற்றாக்குறை தவிர, பிள்ளைகளின் கல்வி, எதிர்காலத்தில் அவர்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவை பற்றியும் அவர்கள் கவலை வெளிப்படுகிறது. கிராமங்களில் போதைப் பழக்கம் நிலவி வருவதைக் குறித்து தாய்மார்களும், சகோதரிகளும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சிலரின் கணவன்மார்களிடம் புகையிலை போடும் பழக்கம் இருப்பதைக் குறித்தும் தங்கள் வருத்தத்தை எனக்குத் தெரிவித்து இருக்கிறார்கள். உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அரசின் திட்டங்கள் பற்றி நாங்கள் அதிகம் கேள்விப் படுகிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை எங்களை வந்து சேர்வதில்லை என்று விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள். நாங்கள் இத்தனை உழைக்கிறோம், மக்களின் வயிறுகள் நிரம்புகின்றன, ஆனால் எங்கள் பைகள் என்னவோ நிரம்புவதில்லையே என்று விவசாயிகள் வருத்தப்படுகிறார்கள். எங்களுக்கு முழுப்பணமும் கிடைப்பதில்லை. பொருட்களை நாங்கள் விற்க எடுத்துக் கொண்டு செல்லும் போது, வாங்குபவர்கள் யாரும் இருப்பதில்லை; குறைந்த விலையில் விற்க வேண்டி இருக்கிறது. விளைச்சல் அதிகம் இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, நாங்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இப்படி விவசாயிகள் தங்கள் மனதின் குரல்களை என்னிடத்தில் ஒலித்திருக்கிறார்கள். மத்திய அரசின் அனைத்துத் துறைகள், மாநில அரசுகள் ஆகியவற்றையும் நான் அதிக ஆக்கபூர்வமான வழியில் செயல்பட வைப்பேன், துரிதமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட ஊக்குவிப்பேன் என்று என் எனது விவசாய நண்பர்களுக்கு உறுதி அளிக்கிறேன். உங்கள் மனோதைரியம் குறைவதாக எனக்குப் படுகிறது. 60 ஆண்டுகள் நீங்கள் காத்திருந்திருக்கிறீர்கள் எனும் போது, இது இயல்பான ஒன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. உங்களின் ஏராளமான கடிதங்களில், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நடப்பு நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அதன் தாக்கம் அதிகம் காணப் படுகிறது. என்ன மாதிரியான தவறான கருத்துக்கள் பரப்பப் பட்டிருக்கின்றன என்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. நீங்கள் கேட்டிருக்கும் சின்னச் சின்ன கேள்விகளுக்குக் கூட விடை அளிப்பதன் மூலம் உண்மை என்ன என்பதை உங்களுக்குத் தெரிவிப்பேன். நிலத்தைக் கையகப்படுத்தும் மசோதா சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பாக சட்டமாக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? நாடு சுதந்திரமடைந்து 60, 65 ஆண்டுகள் கழித்தும் கூட, இந்தச் சட்டம் தான் நிலுவையில் இருந்து வந்திருக்கிறது. இன்று யாரெல்லாம் விவசாயிகளின் நம்பிக்கையாக தங்களை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்களோ, அவர்களும் கூட இதே சட்டத்தின் மூலமாகவே நாட்டை நிர்வாகம் செய்தார்கள், ஆட்சி புரிந்தார்கள், விவசாயிகளின் இன்றைய நிலைமைக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை. எங்களுக்கும் இந்தக் கருத்து இருந்தது. நாங்கள் எதிரணியில் இருந்த போதும் இதை ஏற்றோம். 2013இல் அவசரக் கோலம், அள்ளித்தெளித்த கோலமாக இந்த மசோதா அறிமுகப் படுத்தப்பட்டது. நாங்களும் அந்த காலகட்டத்தில், ஒத்துழைப்பு அளித்தோம். விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என்னும் போது, யார் தான் ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள்? ஆனால் அது சட்டமாக்கப்பட்ட பிறகு, சில விஷயங்கள் எங்கள் கவனத்துக்கு வந்தது. இதன் மூலமாக விவசாயிகள் ஏமாற்றப்படுவார்கள் என்று எங்களுக்குத் தோன்றியது, விவசாயிகளை ஏமாற விடக் கூடாது என்று நாங்கள் தீர்மானித்தோம். எங்கள் அரசு அமைந்த போது, இந்த சட்டத்தை மாற்ற வேண்டும், சட்டத்தில் மேம்பாடுகளை ஏற்படுத்த வேண்டும், சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றெல்லாம் மாநில அரசுகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மற்றொரு புறத்திலோ, சட்டமாக்கப்பட்ட ஓராண்டுக்குப் பிறகும் கூட, எந்த மாநில அரசும் இதை அமல்படுத்த தயாராக இல்லை என்ற நிலை. அமல் படுத்தியவர்களும் என்ன செய்தார்கள், எடுத்துக்காட்டாக மஹாராஷ்ட்ர, ஹரியாணா மாநிலங்களில் காங்கிரஸ் அரசு இருந்தது, இன்று விவசாயிகளின் தோழன் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் இந்தச் சட்டத்தை அமல் செய்த போது, விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய ஈவுத் தொகையை பாதியாகக் குறைத்து விட்டார்கள். இதுவா விவசாயிகளுக்கு செய்யப்படும் நியாயம்? இவை அனைத்தையும் கவனித்த பின்னர், இந்தச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம் என்று எங்களுக்குப் பட்டது. அவசர கோலத்தில் செய்யப்பட்டவைகளில் குறைபாடுகள் இருக்கலாம், நோக்கத்தில் குற்றம் வேண்டுமானால் இல்லாமல் போகலாம், ஆனாலும் கூட குறைபாடுகளைக் களையத் தானே வேண்டும்? கடந்த ஆட்சியினரின் நோக்கம் சரியா, சரி இல்லையா என்பது பற்றி நாங்கள் அவர்கள் மீது எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை, எங்களது ஒரே நோக்கம், விவசாயிகளுக்கும் சரி, விவசாயிகளின் பிள்ளைகளுக்கும் சரி நல்லது நடக்க வேண்டும் என்பது தான், கிராமங்களுக்கும் நல்லது நடக்க வேண்டும்; ஆகையால் சட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவை சரி செய்யப்பட வேண்டும். எங்களின் நேர்மையான முயற்சி, இந்தக் குற்றங்களைக் களைய வேண்டும் என்பது தான். இப்போது நான் மிகப் பெரிய குறையைச் சொல்லவா? விவசாயிகளின் தோழனாக வலம் வந்து வாய் கிழியப் பேசுபவர்கள் இந்தக் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கத் தயாராக இல்லை, இது உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கலாம். இரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, சுரங்கத் தொழில் துறை போன்றவற்றுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்த இந்தியாவில் மட்டுமே 13 வகையான சட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? கடந்த ஆட்சி ஏற்படுத்திய சட்டத்தில் இந்த 13 துறைகளுக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதாவது, அதிக அளவு நிலம் தேவைப்படும் இந்த 13 துறைகளை இந்த சட்டத்துக்கு வெளியே வைத்ததன் நோக்கம் இது தான் –  நிலம் கையகப்படுத்தும் போது, விவசாயிகளுக்கு கிடைக்கும் ஈவுத் தொகை, முந்தைய சட்டத்தில் கொடுக்கப்பட்ட அளவுக்கே கொடுக்கப்படும்.  எங்கே சொல்லுங்கள்! இது குறைபாடா இல்லையா? தவறா இல்லையா? நாங்கள் இதை சரி செய்தோம். இரயில்வே துறைக்காகட்டும், நெடுஞ்சாலைத் துறைக்காகட்டும், நிலம் கையகப்படுத்தப்படும் போது, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஈவுத் தொகை 4 பங்கு வரை இருக்க வேண்டும் என்ற திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்தோம். இந்த திருத்தம் விவசாயிகளுக்கு எதிரானது என்று யாராவது கூற முடியுமா? ஆகையால் தான் நாங்கள் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டி இருந்தது. நாங்கள் அவசரச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை என்றால், விவசாயிகளின் நிலங்கள் பழைய சட்டத்தின் படியே கையகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சகாயமான ஈவுத் தொகை ஏதும் கிடைக்காமல் போகும். இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதும், அரசில் இருந்த பலரே கூட, இதற்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இந்தச் சட்டத்தை அப்போது இயற்றியவர்கள், இது சட்டமாக்கப்பட்ட பின்னர் இது விவசாயிகளுக்கு எதிரானது, கிராமங்களுக்கு எதிரானது, நாட்டுக்கும் இதனால் நன்மை கிடையாது, இது அதிகாரிகள் சுரண்ட ஏதுவாக, அவர்கள் உல்லாசமாக இருக்க, தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தவுமே துணை புரியும் என்று சிலர் கோபமடைந்து கூறினார்கள். இவை அனைத்தும் உண்மையானால், சீர்திருத்தம் செய்யப்பட வேண்டுமா இல்லையா? ஆகையால் நாங்கள் குறைபாடுகளைக் களைந்து, விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறோம். முதலாவதாக, விவசாயிகளுக்கு அதிகபட்ச நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்த 13 வகையான நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை, இந்தப் புதிய சட்டத்திற்குள் கொண்டு வந்தோம். இதன் மூலம் விவசாயிகளுக்கு முழுமையான ஈவுத் தொகை கிடைக்கும், அவர்களின் அனைத்து உரிமைகளுக்கும் வழி வகை செய்யப்படும்  மோதி கொண்டு வரும் இந்தச் சட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு குறைவான ஈவுத் தொகையே கிடைக்கும் என்ற ஒரு புரட்டு பரப்பப்பட்டு வருகிறது. எனது அருமை விவசாயி சகோதர சகோதரிகளே, அது போன்ற ஒரு பாவச் செயல் பற்றி என்னால் சிந்திக்க கூட பார்க்க முடியாது. 2013இல் கடந்த ஆட்சியாளர்கள் இயற்றிய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஈவுத் தொகையை நாங்கள் குறைக்கவில்லை, மாறாக, அதை 4 பங்கு வரை ஆக்க பரிந்துரைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல, பழைய சட்டத்தில் இல்லாத இந்த 13 துறைகளையும் கூட இணைத்திருக்கிறோம். மேலும் நகரமயமாக்கத் திட்டத்துக்கு தேவைப்படும் நிலத்தின் 20 சதவீத அளவு, நிலத்தின் சொந்தக்காரருக்கு அளிக்கப்படும். இதன் மூலமாக அவருக்கு பொருளாதார ரீதியாக நிரந்தர இலாபம் கிடைக்கும். இதையும் கூட நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்படும். விவசாயத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் மேலும் இதில் சேர்த்திருக்கும் புதிய விஷயம் என்னவென்றால், மாவட்ட ஆட்சியர், யாருக்கு வேலை கிடைக்கும், எதில் கிடைக்கும், எங்கு வேலை கிடைக்கும் என்றெல்லாம் அரசுக்கு எழுத்து பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்ற புதிய ஷரத்தை இணைப்பதன் வாயிலாக, அரசின் பொறுப்பை நிலைநிறுத்தி இருக்கிறோம். எனது விவசாய சகோதர சகோதரிகளே, அடிப்படையில் அரசு நிலங்களே பயன்படுத்தப்பட வேண்டும். அடுத்த கட்டமாக தரிசு நிலங்கள் பயன் படுத்தப்பட வேண்டும், இறுதியாகவே, மிகவும் தேவைப்பட்டாலே ஒழிய, விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆகையால் தரிசு நிலங்கள் எங்கிருக்கின்றன என்பது தொடர்பான ஆய்வை உடனடியாக மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறோம். இதனால் அது முதன்மை இடத்தை வகிக்கும். நமது விவசாய சகோதரர்கள் வேறு ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள். அவசியத்துக்கு அதிகமான நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்பது தான் அது. இப்போது எந்த அளவுக்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க ஆய்வு செய்யப்படும், அதன் பின்னரே முடிவு செய்யப்பட்டு, தேவைக்கு அதிகமாக நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்பதை இந்த புதிய சட்டத்தின் மூலமாக உங்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். சில வேளைகளில், எப்போது என்ன நடக்குமோ என்ற கவலையே கூட விவசாயிகளை அரித்து, சங்கடத்தை ஏற்படுத்துகிறது. Social Impact Assessment, அதாவது சமுதாயத் தாக்கம் பற்றிய கணிப்பு என்ற பெயரால் நடவடிக்கைகள், விசாரணைகள் ஆகியவை பல ஆண்டுகள் தொடரும் நிலையில், எந்த விவசாயியாவது சுயமாக முடிவு எடுக்க முடியுமா என்று நீங்களே சொல்லுங்கள்? தீர்ப்பு வந்து விட்டால் என்ன செய்ய என்பது பற்றி, நடவு செய்யும் வேளையில் விவசாயிக்கு கவலை ஏற்படும்; இதிலேயே அவருடைய 2, 3 ஆண்டுகள் கழிந்து போகும். அதிகார மட்டத்தில் தேவையற்ற கால தாமதம் காரணமாக விஷயம் சிக்கிக் கொண்டிருக்கும். நடவடிக்கை நீண்டு கொண்டே போகும், மேலும் மேலும் சிக்கல்கள் அதிகரிக்கும், பாவம் நமது விவசாய சகோதரன், அதிகாரிகளின் கால்களைப் பிடித்து, ஐயா, இப்படி எழுதுங்கள், அப்படி எழுத வேண்டாம் என்று மன்றாடக் கூடிய மோசமான நிலை ஏற்படும். இது தான் நடக்கும். நான் என்னுடைய விவசாயிகளை இது போன்று அதிகாரிகள் பிடியில் மீண்டும் சிக்க வைப்பேனா? இது சரியான நிலை அல்ல என்று எனக்குப் படுகிறது. இது வரை செயல்பாடு நீண்டதாகவும், கடினமானதாகவும் இருந்தது, அதை நான் எளிமைப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். எனது விவசாய சகோதர சகோதரிகளே, 2013ல் சட்டம் இயற்றப்பட்டது, ஆனால் மாநிலங்கள் இதை ஏற்க மறுத்தன. விவசாயிகளின் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாநிலங்கள் இதை எதிர்த்தன. நான் மாநிலங்கள் கூறுவதற்கு செவி கொடுக்கவா, மறுக்கவா? நான் மாநிலங்கள் மீது நம்பிக்கை வைக்கவா, வைக்காதிருக்கவா? என்பதை நீங்களே கூறுங்கள். இத்தனை பெரிய நாடு, மாநிலங்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல் இயங்க முடியுமா? ஆகையால், மாநிலங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், அவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆகையால் முதலாவதாக, நான் மாநிலங்கள் மீது நம்பிக்கை கொள்ள விரும்புகிறேன். இரண்டாவதாக, சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை நாங்கள் களைய நினைக்கிறோம், அதை மேம்படுத்த விரும்புகிறோம், விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் செய்ய முற்படும் இதைத் தாண்டி, எந்த மாநிலமாவது இதை ஏற்கவில்லை என்றால், அவர்கள் முழு சுதந்திரத்தோடு செயல்படலாம். ஆகையால் தான், தற்போது பரப்பப்பட்டு வரும் தவறான கருத்துக்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்கள், விவசாயிகளை ஏழைகளாகவே வைத்திருக்கவும், நாட்டை முன்னேற விடாமல் தடுக்கவும் பின்னப்படும் சூழ்ச்சியின் ஒரு பகுதி தான், அதிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும், நாட்டையும் காக்க வேண்டும், விவசாயிகளையும் காக்க வேண்டும். உங்கள் பிள்ளைகள் எதிர்காலம் குறித்து உங்கள் திட்டம் என்ன என்று யாராவது ஒரு விவசாயியிடம் கேட்டுப் பாருங்கள், அவர் தன் 3 பிள்ளைகளில் ஒருவனை விவசாயம் செய்ய வைப்பேன், மற்றவர்களை வேறு தொழில் செய்ய அனுப்புவேன் என்பார். கிராமத்தில் வாழும் விவசாயியின் பிள்ளைகளுக்கும் கூட வேலை வேண்டும். அவர்களும் வேறு இடங்களுக்குச் சென்று வேலை தேட உதவியாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கிராமங்களின் நலனுக்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயிகளின் பிள்ளைகளின் நலனுக்காகவும் இருக்கும் விஷயங்களை நாம் ஏன் ஒன்றிணைக்கக் கூடாது என்று நாங்கள் யோசித்தோம். நாங்கள் ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்ற கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள். ஜெய் ஜவான் என்றால் நாட்டின் பாதுகாப்பு. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் இந்திய விவசாயி என்றுமே பின் தங்கியதில்லை. பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் நாட்டின் நிலத்தை விவசாயியிடமிருந்து பெறத் தேவை இருக்குமானால், அவர்களிடம் இதைக் கேட்டுப் பெற வேண்டும், அவர்களும் மனமுவந்து அளிப்பார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் இது தொடரபான விஷயங்களில் நிலத்தைக் கையகப்படுதுவதை இதில் இணைத்திருக்கிறோம். கிராமங்களில் சாலை வசதி தேவையா, தேவையில்லையா? வயல்களில் நீர் வழங்கப்பட கால்வாய் வெட்டப்பட வேண்டுமா,, இல்லையா? கிராமங்களில் இப்போதும் கூட குடியிருப்பே இல்லாத ஏழை மக்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு குடியிருப்பு ஏற்படுத்திக் கொடுக்க நிலம் தேவையா இல்லையா? என்பதை கிராமத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் கூறட்டுமே!! இது என்ன தொழிலதிபர்களுக்காகவா பயன்படுகிறது? இது என்ன சீமான்களுக்காகவா அளிக்கப்படுகிறது? உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். புதிய அவசரச் சட்டத்திலும் கூட, எந்த ஒரு தனியார் தொழிலதிபருக்காகவோ, தனியார் தொழிற்சாலைக்காகவோ, வியாபாரத்தில் ஈடுபடும் எந்த ஒரு தனியாருக்காகவோ, நிலம் கையகப்படுத்தும் வேளையில், 2013ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் இருக்கும் அனைத்து விதிமுறைகளின்படியே அமல் செய்யப்படும் என்பதை நான் உரத்த குரலெடுத்து ஒலிபரப்ப விரும்புகிறேன். 2013ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படியே, corporateகளுக்கான விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பின் ஏன் இந்தப் பொய்யும் புனசுருட்டும் பரப்பப்படுகின்றன? எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, உங்களுக்கு சட்டப்படி எந்த உரிமையும் கிடைக்காது, நீங்கள் நீதிமன்றம் செல்ல முடியாது, என்ற இன்னொரு பொய்யும் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இந்தியாவின் எந்த ஒரு அரசும் உங்கள் சட்டப்படியான உரிமையைப் பறிக்க முடியாது. பாபா சாஹேப் அம்பேட்கர் நமக்கு அளித்த அரசியல் அமைப்புச் சட்டப்படி நீங்கள் இந்தியாவின் எந்த ஒரு நீதி மன்றத்தின் கதவுகளையும் தட்ட முடியும். ஆனால் நாங்கள் ஒரு வசதியை உங்கள் இல்லத்துக்கே கொண்டு சேர்க்க முயற்சி செய்திருக்கிறோம். மாவட்ட அளவில் செயல்படும் ஒரு ஆணையத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். உங்கள் மாவட்ட விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பான அனைத்தும் மாவட்ட அளவிலேயே தீர்க்கப்பட்டு விடும்; அது உங்களுக்கு நிறைவை அளிக்கவில்லை என்றால், நீங்கள் மேல் மன்றங்களில் முறையீடு செய்யலாம். இப்படிப்பட்ட ஒரு அமைப்பை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். மேலும் ஒரு புரட்டு பரப்பப்பட்டு வருகிறது…….. நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர், 5 ஆண்டுகளில் அது திரும்ப விவசாயியிடம் சென்று சேரக் கூடிய வழிமுறை அகற்றப்பட்டு இருக்கிறது என்பது தான் அது. எனது விவசாய சகோதர சகோதரிகளே, உண்மை இதுவல்ல. திட்டம் ஏற்படுத்தப்படும் போதே, அது எத்தனை ஆண்டுகளில் நிறைவடையும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள், அப்படி திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியவில்லை என்றால், விவசாயி நினைத்தபடியே நடக்கும், கால வரையறைகளை நிர்ணயிக்கும் விதிமுறையை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். மாறாக இன்று என்ன நடக்கிறது? 40 ஆண்டுகளுக்கு முன்பாக நிலம் கையகப்படுத்தப் பட்டது, ஆனால் இன்று வரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எப்படி அனுமதிக்க முடியும்? அரசை ஒரு கால வரையறைக்குள் கொண்டு வர நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். சில திட்டங்களுக்கு 20 ஆண்டுக்காலம் பிடிக்கலாம். எடுத்துக்காட்டாக, 500 கி.மீ. நீளத்துக்கு ரயில்வே லைன் போடப்பட வேண்டுமானால், நேரம் பிடிக்கத் தானே செய்யும்? ஆகையால் முதலிலேயே இதை நிறைவு செய்ய இத்தனை காலம் பிடிக்கும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வகையில் நாங்கள் அரசின் தலையில் பொறுப்பைக் கட்டியிருக்கிறோம், அதாவது responsibilityயை fix செய்திருக்கிறோம். நான் வேறு ஒரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன், எனது விவசாய சகோதர சகோதரிகளே. ஏசி அறைகளில் அமர்ந்து கொண்டு சட்டம் இயற்றுபவர்கள் இருக்கிறார்கள் இல்லையா, அவர்களுக்கு கிராமத்து மக்களின் யதார்த்த நிலை பற்றி எந்த ஒரு விஷயமும் தெரியாது. அணை கட்டப்படும் போது, கையகப்படுத்தப்படும் நிலம், 100 ஆண்டுகளில் அதிகபட்சம் நீர் தேக்கி வைக்கப்படும் சாத்தியக்கூறு உள்ள இடமாக இருத்தல் வேண்டும் என்பது ஒரு விதி. 100 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டு தான் அணையில் நீர் நிரம்பக் கூடும், எஞ்சிய 99 ஆண்டுகளில் அணை நிறையாமல் இருக்கும். இருந்தாலும் கூட நிலம் அரசின் வசம் இருக்கும். சட்டரீதியாக நிலம் அரசிடம் இருக்கலாம், ஈவுப் பணம் கூட கொடுக்கப் பட்டிருக்கலாம், ஆனாலும் கூட விவசாயி அந்த இடத்தில் விவசாயம் செய்கிறான். 100 ஆண்டுகளில் ஒரு முறை அணை நிரம்பும் போது, அவன் அந்த ஆண்டு விலகி இருப்பான். ஆனால் 2013ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி, அவனால் விவசாயம் செய்ய முடியாது.  நிலம் நீருக்கடியில் மூழ்காமல் இருக்கும் காலங்களில் விவசாயி அந்த நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகையால், விவசாயியிடமிருந்து நிலத்தைப் பயிர் செய்ய விடாமல் பறிக்கக் கூடாது. இந்த வளைந்து கொடுக்கும் தன்மை அவசியமானது, இதன் மூலமாக, விவசாயிகள் தங்கள் நிலத்தைக் கொடுத்த பின்னும் கூட, அதிலிருந்து லாபம் அடைய முடிகிறது. நிலத்தை அளித்ததால், அவர்களுக்கு ஈவுத் தொகையும் கிடைக்கிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. இந்த வசதியைச் செய்வதும் முக்கியமானது. இது நடைமுறைக்கு ஏற்ற ஒரு செயல்பாடும் கூட. மேலும் ஒரு புரட்டு பரப்பப்படுகிறது….. நிலம் கையகப்படுத்துதலில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, அரசியல் காரணங்களுக்காக செய்யப்படும் பொய் பிரச்சார வலையில் விழாமல் இருங்கள். 2013இல் இயற்றப்பட்ட சட்டத்திலும் கூட, அரசு தனது திட்டங்களை அமலாக்க கையகப்படுத்த நினைக்கும் நிலங்களுக்கு ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆகையால் இது ஒப்புதலுக்கான அவசியம் என்ற பெயரில் நடத்தப்படும் ஒரு நாடகம் தான். அரசு பயன்பாட்டுக்காக ஒப்புதல் என்பது முன்பும் இருந்ததில்லை, இப்போதும் இருக்கவில்லை. ஆகையால், எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, முன்னர் சிறப்பாக இருந்தது எனவும், இப்போது இவர்கள் நாசம் செய்து விட்டார்கள் எனவும் செய்யப்படும் பொய் பிரச்சாரம் உங்கள் கண்ணைக் கட்டி பாழும் கிணற்றில் இறக்கும் துரதிர்ஷ்டவசமான ஒரு புரட்டுப் பிரச்சாரம். நான் இன்றும், இப்போதும் கூறுகிறேன்…. தனியார் தொழில்களுக்காக, corporateகளுக்காக, தனியார் தொழிற்சாலைகளுக்காக, ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருப்பில் இருக்கிறது, இருப்பில் இருக்கிறது, இருப்பில் இருக்கிறது. நான் மேலும் ஒரு தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலர் PPP model, அதாவது அரசு-தனியார் பங்களிப்பு மாதிரி பற்றி பேசுகிறார்கள். எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, எடுத்துக்காட்டாக, 100 கோடி ரூபாய்களுக்கு ஒரு சாலை அமைக்கப்பட வேண்டும். இந்த சாலையை எந்த தொழிலதிபராவது எடுத்துக் கொண்டா போய் விடுவார்? சாலைக்கு அரசு தானே முதலாளியாக இருக்கும்? நிலம் அரசுக்குத் தானே சொந்தமாக இருக்கும்? என்ன, சாலையை போடுபவர் தான் வேறு ஒருவர். இது ஏன் என்றால், அரசிடம் சாலையமைக்கத் தேவையான நிதியாதாரம் இருப்பதில்லை என்பதால் தான். கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும், மருத்துவமனை உருவாக்கப்பட வேண்டும், ஏழையின் பிள்ளைக்கு கல்வி வசதி அளிக்கப்பட வேண்டும் என்று அரசு விரும்புவதால், பணத்தை இதில் செலவு செய்கிறது,. சாலை அமைக்கும் பணியை தனியார் செய்யட்டும். ஆனால் அந்த தனியாரே கூட, தனக்கென சாலை அமைத்துக் கொள்வதில்லை, சாலையை தன் வீட்டுக்கு எடுத்துப் போவதுமில்லை, அரசுக்காகவே சாலையை அமைக்கிறார், அவர் சாலை அமைக்க முதலீடு மட்டுமே செய்கிறார். அரசின் திட்டங்களுக்காக, நிதி முதலீட்டை யாரோ ஒருவர் செய்கிறார், இதைத் தான் மக்கள் PPP model என்று கூறுகிறார்கள்; இந்தச் சொத்துக்கு சொந்தக்காரர் அரசு தான், அரசு என்றால், நீங்கள் அனைவரும் என்று தான் பொருள், நாட்டின் 125 கோடி மக்களுக்கும் இந்த உரிமை உண்டு என்று தான் பொருள். இதில் தான் ஒப்புதலுக்கான அவசியம் இல்லை என்று நாங்கள் தெரிவித்திருக்கிறோம். ஆகையால் இந்த PPP modelஐ முன்வைத்து செய்யப்படும் புரட்டுப் பிரச்சாரத்தின் பின்னணியில் இருக்கும் விஷமத்தை உங்கள் முன்பு வைப்பதை முக்கியமாக நான் கருதுகிறேன். சில வேளைகளில், ஒப்புதல் செயல்முறை ஒரு வகையில், யதேச்சாதிகாரத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் ஊக்குவிக்கிறது. நீங்களே சொல்லுங்கள், ஒரு கிராமம் இருக்கிறது, அந்த கிராமம் வரை சாலை போடப்பட்டு விட்டது. இதற்கு அடுத்து இருக்கும் வேறு ஒரு கிராமத்துக்கும் சாலை போடப்பட வேண்டும். 5 கி.மீ. தொலைவில் அந்த கிராமம் அமைந்திருக்கிறது. இந்த 2வது கிராமத்துக்கு போடப்படும் சாலைக்கான நிலம், முதல் கிராமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள், அடுத்த கிராமத்துக்கு சாலை போடப்பட, முதல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிலங்களை அளிப்பார்களா, ஒப்புதல் தருவார்களா? இந்த நிலையில் அடுத்து இருக்கும் கிராமம் செய்த பாவம் தான் என்ன? அவர்களுக்கும் சாலை கிடைக்க வேண்டுமா இல்லையா? இதே போல, அரசு கால்வாய் வெட்டுகிறது, இந்த கிராமத்துக்கு நீர் கிடைத்து விட்டது, கால்வாய் உருவாகி விட்டது. ஆனால் அடுத்த கிராமத்துக்கு கால்வாய் வெட்ட வேண்டும், நீர் கொண்டு சேர்க்க வேண்டும் என்றால், நிலம் என்னவோ, இந்த கிராமத்தில் அல்லவா இருக்கிறது? அப்போது முதல் கிராமத்தவர்கள், எங்களுக்கு நீர் கிடைத்து விட்டது நாங்கள் நிலம் தர மாட்டோம் என்று தானே சொல்லுவார்கள்? அடுத்து இருக்கும் கிராமத்துக்கு கால்வாய் வெட்டப் பட வேண்டுமா கூடாதா? எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, இது நடைமுறை விஷயம், இந்த நிலம் விவசாயிகளுக்குத் தேவையானது, தொழிலதிபர்களுக்காக அல்ல. இது கிராமத்தின் நலன் பொருட்டு, விவசாயியின் நலனுக்காக, விவசாயியின் பிள்ளைகளின் நலனுக்காக செய்யப்படுவது. இன்னொரு விஷயம் கூட பேசப்பட்டு வருகிறது….. இதை நான் முன்னமே கூட சொல்லி இருக்கிறேன். ஒவ்வொரு வீட்டிலும் விவசாயி, தனது ஒரு மகன் விவசாயம் செய்ய வேண்டும், மற்றவர்கள் பிற தொழில்களில் ஈடுபட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஏனென்றால், வீட்டை நிர்வாகம் செய்ய பல விதங்களில் முயற்சி செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று அவர் உணர்ந்திருக்கிறார். நாம் ஒரு சாலை அமைக்கிறோம், அந்த சாலைக்கு அருகே ஒரு industrial corridor, தொழில் வளாகத்துக்கு அரசு ஏற்பாடு செய்கிறது, தனியார் அல்ல, நான் மீண்டும் கூறுகிறேன், தனியார் அல்ல, நிதி முதலீடு செய்பவர்களும் அல்ல, சீமான்களும் அல்ல, அரசு தான் அமைக்கிறது. அப்படி 50 கி.மீ. அல்லது 100 கி.மீ. நீளத்துக்கு ஒரு அமைப்பை அரசு ஏற்படுத்தும் போது, போடப்படும் சாலையின் ஒரு கி.மீ. இடது புறத்திலும், ஒரு கி.மீ. வலது புறத்திலும் நிறுவப்படும் அமைப்பு வாயிலாக சுற்றி இருக்கும் 50-100 கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். நமது கிராமங்களின் விவசாயிகளின் பிள்ளைகள் தில்லி, மும்பை ஆகிய இடங்களின் குடிசைப் பகுதிகளில் வாழ்கை நடத்தும் அவலமான நிலைக்குத் தள்ளப்படுவதையா நாம் விரும்புகிறோம், சொல்லுங்கள் எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே. அவர்கள் கிராமத்திலிருந்து 20-25 கி.மீ. அருகிலேயே அவர்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் வாய்ப்பு அமைய வேண்டுமா இல்லையா, கூறுங்கள்? இந்த வளாகத்தை தனியார் அமைக்க மாட்டார்கள், அரசு தான் அமைக்கும், அரசே அமைத்து, அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வசதியை செய்து கொடுக்கும். ஆகையால், எதற்கு அரசு மட்டுமே முதலாளியோ, எது கிராமம், விவசாயிகள் ஆகியோரின் நலனுக்கு உகந்ததோ, எது விவசாயிகளின் வருங்கால சந்ததிகள்,  கிராமங்களின் ஏழைகள் ஆகியோரின் நலனுக்கானதோ, எது கிராமத்தின் விவசாயிக்கு மின்சாரம், தண்ணீர், ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுக்கத் தேவையானதோ, அந்த நலன்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் இருக்கும் குறைபாடுகளை நிவர்த்திக்க, உண்மையான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே கூட, இந்த நிலையிலும் ஏதும் குற்றம் குறைகள் இருந்தால், இப்போது கூட இதை சரி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நான் கூறியிருந்தேன். மக்களவையில் நாங்கள் இதை முன்வைத்த போது, சில விவசாயிகள் தலைவர்கள் கூறிய சில விஷயங்களையும் நாங்கள் இதில் இணைத்திருக்கிறோம். இப்போதும் கூட நாங்கள் இதைத் தான் சொல்கிறோம். நிலம் கையகப்படுத்தும் நடைமுறை, விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாகவே இருக்க வேண்டும். இது தான் எங்கள் உறுதிப் பாடு. நான் எனது விவசாய சகோதரர்களிடம் செய்து கொள்ளும் விண்ணப்பம், பரப்பப்படும் பொய்கள்-புனசுருட்டுக்களின் அடிப்படையில் நீங்கள் எந்த முடிவுக்கும் வர வேண்டாம். நமது விவசாயிகளை எப்படி சக்தி படைத்தவர்களாக ஆக்குவது, நமது கிராமங்களை எப்படி வல்லமை பொருந்தியவைகளாக மாற்றுவது, உழைக்கும் நமது விவசாய சகோதரனுக்கு தகுதியான வருமானத்துக்கு எப்படி வழி வகை செய்வது, அவனுக்கு நல்லதொரு சந்தையை எப்படி ஏற்படுத்திக் கொடுப்பது, விளைச்சலுக்கு தன் வியர்வை சிந்தும் இந்த விவசாய சகோதரனின் விளைச்சலை எப்படி சிறப்பாக சேமிக்க உதவுவது, இந்த விவசாயிக்கும், அவன் சார்ந்திருக்கும் கிராமத்துக்கும் உதவும் வகையில் சரியான முயற்சிகள் மேற்கொள்ப்பட வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம், சிந்தனை எல்லாம். எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, உங்கள் நிலத்தில் விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் soil health card, மண் நல அட்டை என்ற ஒரு முறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு உடல் சீர்கேடு ஏற்படும் போது, அவன் உடல் நலம் பெற பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இதே போல, பூமித் தாய்க்கும் ஏற்படுகிறது. நாங்கள் உங்கள் நிலத்தின் நலத்தின் மீதும் கருத்தைச் செலுத்துகிறோம். ஆகையால் நிலம் கையகப்படுத்தல் என்பது அல்ல, நிலம் அதிக வளம் மிக்கதாக இருக்க வேண்டும் என்பதும் எங்கள் வேலை தான். இதனால் தான் soil health card திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஒவ்வொரு விவசாயிக்கும் இதன் மூலம் பயன் ஏற்படவிருக்கிறது. உரங்கள் மீது வீணாக நீங்கள் செய்யும் செலவு மிச்சப்படும், உங்கள் அறுவடை பெருகும், உங்களுக்கு நீங்கள் செய்யும் அறுவடைக்கான முழுத் தொகையும் கிடைக்கும், இதற்காகக் கூட நல்ல சந்தைகள் ஏற்படுத்தப்பட வேண்டும், சிறப்பான சட்ட முறைகள் உருவாக்கப்பட வேண்டும், விவசாயிகள் மீது எந்தக் கொடுமையும் இழைக்கப்படக் கூடாது ஆகியவை தொடர்பாக எல்லாம் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, நான் கடந்த காலத்தில் குஜராத் மாநில முதல்வராக இருந்த போது, இந்தத் துறையில் நிறைய வேலை செய்திருக்கிறேன். எங்கள் குஜராத்தில் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானதாக இருந்தது. நாங்கள் தண்ணீர் வழங்கலில் முனைப்பு காட்டினோம், மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. குஜராத்தின் வளர்ச்சியில் விவசாயிகளின் பங்களிப்பு கணிசமானதாக உயர்ந்தது. இது கற்பனை கூட செய்ய முடியாததாக இருந்தது. முன்பெல்லாம் கிராமம் கிராமமாக காலியாகிக் கொண்டே வந்தது, மாற்றம் நிகழ்ந்தது, இதே மாற்றம் நாடு முழுவதிலும் ஏற்பட வேண்டும், அனைத்து விவசாயிகளும் மகிழ்வோடு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனதருமை விவசாய சகோதர சகோதரிகளே, இன்று உங்களுடன் பேசக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் இன்றைய கால கட்டத்தில், அவசரச் சட்டம் பற்றிய விவாதம் அதிகம் நடைபெற்று வருவதால், நான் அதிக நேரத்தை இது தொடர்பான விஷயங்களுக்கு எடுத்துக் கொண்டேன். ஆனால் எனதருமை விவசாயி சகோதர சகோதரிகளே, மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் நான் உங்களோடு பேச முயற்சி செய்கிறேன், வேறு பல விஷயங்கள் குறித்தும் நாம் உரையாற்றலாம். ஆனால் ஒரு விஷயத்தை நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன், நீங்கள் எனக்கு எழுதி அனுப்பிய கருத்துக்களின் அடிப்படையில் நான் ஒட்டு மொத்த அரசையும் முடுக்கி விடுவேன், அதில் ஈடுபடுத்துவேன். நீங்கள் மனதைத் திறந்து என்னிடத்தில் விஷயங்களைக் கொட்டியிருக்கிறீர்கள், இதற்கு என் மனமார்ந்த நன்றிகள்… உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருப்பதால் தானே என்னிடத்தில் பகிர்ந்து கொண்டீர்கள்? நான் எந்தக் காரணம் கொண்டும் இந்த நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்த அனுமதிக்க மாட்டேன். உங்கள் அன்பு தொடரட்டும், உங்கள் ஆசிகள் என்னுடனேயே வரட்டும், நீங்கள் உங்கள் நிழலில் உலகம் முழுவதையும் அரவணைக்கும் தந்தைக்கு ஒப்பானவர்கள்; யாரைப் பற்றியும் கெடுதலாக நினைக்க மாட்டீர்கள்; தன்னை அழித்துக் கொண்டாவது நாட்டுக்கு நன்மை புரியும் பாரம்பரியம் மிக்கவர்கள் நீங்கள். இத்தகைய விவசாயிக்கு கேடு விளையக் கூடாது என்பதில் இந்த அரசு விழிப்போடும் துடிப்போடும், முனைப்போடும் இருக்கிறது. இதை நான் அடித்துக் கூறுகிறேன். ஆனால் இன்றைய எனது மனதின் குரலைக் கேட்ட பின்னர் உங்கள் மனதில் மேலும் பல கருத்துக்கள் எழலாம். நீங்கள் கண்டிப்பாக எனக்கு அகில இந்திய வானொலி மூலம் உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் உங்களோடு உரையாற்றுகிறேன். அல்லது உங்கள் கடிதங்களின் அடிப்படையில், ஏதேனும் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டியிருந்தாலோ, முடுக்கி விட வேண்டியிருந்தாலோ, ஏதேனும் அநியாயம் நிகழ்ந்தால் அதை சீர் செய்யவோ நாங்கள் அரசு தரப்பில் முழு முயற்சியை மேற்கொள்வோம். நவராத்திரி புண்ணிய காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிங்கப்பூர் தந்தை லீ குவான் மறைவு- தமிழர்களுக்குப் பேரிழப்பு!: வைகோ இரங்கல்

சென்னை: சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் மறைந்தது தமிழர்களுக்குப் பேரிழப்பு என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு ஆசியாவில் சின்னஞ்சிறு தேசமான சிங்கப்பூரை உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும், ‘சிங்கப்பூரின் தந்தை’ என அழைக்கப்பட்டவருமான அந்நாட்டின் முதல் பிரதமர் லீகுவான் யூ மறைந்த செய்தி, அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. ஒரு நாட்டின் அதிபர் எப்படி மக்கள் சேவை புரிய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் லீகுவான். பிரதமர் பதவி வகித்தபோதும், அந்நாட்டின் முதல் ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற லீகுவான், அங்கு வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார். இலங்கை தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்களப் பேரினவாத அரசுக்கும் இனக்கொலை நடத்திய அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். இலங்கை தீவில் வாழும் ஈழத்தமிழர்கள், ஈழத்தின் பூர்வகுடிமக்கள் என்பதையும், சிங்கள இனவாதம் அவர்களை நசுக்கி அழிக்க முனைகிறது என்பதையும், நடைபெற்ற படுகொலைகள் தமிழ் இன அழிப்பின் வெளிப்பாடு என்பதையும் உலகத்துக்குச் சொன்னார். சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும், தமிழர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதனால்தான் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நேர்ந்தது என்றும் உலக நாடுகளில் வெளிப்படையாக சொன்ன ஒரே ஒரு அதிபர் லீகுவான் அவர்கள் மட்டும்தான். தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த அந்தக் குரல் அடங்கிவிட்டது! அவர் மறைந்துவிட்டார்! என்பது தாங்கமுடியாத துக்கத்தைத் தருகிறது. ஈழத்தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும், தாய்த் தமிழகம் உள்ளிட்ட தரணிவாழ் தமிழர்களும் நன்றி உணர்வோடு அந்த மாபெரும் தலைவர் லீகுவான் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் இந்த நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். லீகுவான் அவர்களின் புகழ் காலத்தால் அழியாது நிலைத்து இருக்கும்.

விபத்தில் போராடிய இளைஞர்: ஆபத்தில் உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை அந்த வழியே சென்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து உயிரைக் காத்தார். இந்த நிகழ்ச்சி அங்குள்ளவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். நேற்று ஞாயிறு மாலை 4 மணி அளவில் இலுப்பூர் பேராலயத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் மீண்டும் அவர் முதல்வராக வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக காரில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூரை அடுத்த மேட்டுச்சாலை என்ற இடத்தில் சாலையோரம் அரசு பஸ்சில் அடிபட்ட இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட டாக்டர் விஜயபாஸ்கர் தனது காரில் இருந்த முதலுதவிப் பெட்டியின் முலம் அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் உடன்வந்த பாதுகாப்பு வாகனத்தில் அந்த நபரை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கே இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு போராடிய அவரை சாவின் விளிம்பில் இருந்து மருத்துவர்கள் காப்பாற்றினர். நிகழ்ச்சி முடிந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற டாக்டர் விஜயபாஸ்கர் அந்த இளைஞர் குறித்து விசாரித்தார். அந்த இளைஞர் காரையூர் அருகே உள்ள நெறிஞ்சிக்குடியை சேர்ந்த அடைக்கலம் மகன் குமரேசன் என்று தெரிந்தது. அவரின் குடும்பத்தாருக்கு மருத்துவச் செலவுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை வழங்கி சிகிச்சை பெற்று வரும் குமரேசனுக்கு ஆறுதல் கூறினார். மகனின் உயிரைக் காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கரை அங்குள்ளோர் நெகிழ்ச்சியுடன் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

விவசாயிகள் கூட்டமைப்பு பந்த் தேதியை மாற்றுமாறு இந்து முன்னணி கோரிக்கை

rama-gopalan சென்னை: காவிரியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் செயலைக் கண்டித்தும், நதி நீர் குறித்து தீர்க்கப்படாம்ல் இருக்கும் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தவிருக்கும் பந்த் தேதியை மாற்ற வேண்டும் என்று இந்துமுன்னணி கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அதன் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில், காவிரி நதியின் மீது புதிய அணைக் கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகளின் கூட்டமைப்பு 28ஆம் தேதி தமிழக பந்த் அறிவித்திருக்கிறது. அன்று ராம நவமி வருவதால், அந்தத் தேதியை மாற்றி 29ஆம் தேதிக்கு மாற்றி அமைத்திட இந்து முன்னணிக் கேட்டுக்கொள்கிறது. அனைவரும் இதில் கலந்துகொள்ள இது ஏதுவாக இருக்கும். தமிழக விவசாய உற்பத்தியில் காவிரி நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. காவிரியில் நமது உரிமையை நிலைநிறுத்த நடைபெறும் இந்த கடையடைப்பை வரவேற்கிறோம். மாநில மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திட கடையடைப்பு நடத்தும் போது எல்லோருடைய ஆதரவைப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இந்த தேதியை மாற்றி அமைத்திட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. ராம நவமியை தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடுப்படுகிறது. இவை தவிர விசேஷமான கோயில்களுக்கு பக்தர்கள் சென்று வருவதும், விரதம் இருப்பதும் இந்த நாளின் சிறப்பானதாகும். இந்நிலையில் ராமநவமி அன்று கடையடைப்பும் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும்போது பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாவர்கள். எனவே, இது குறித்து விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் புரிந்துகொண்டு, தேதியை மாற்றி அறிவிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று நடைபெறுகிறது இந்திய – சீன எல்லைப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தை

புது தில்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது குறித்து, இந்திய – சீன நாட்டு அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தில்லியில் இன்று நடக்கிறது. நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு நடப்பதால் இதில் சுமூக தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு அருகில் உள்ள அக்சாய் சின் பகுதியை சீன ராணுவம் 1962ல் இருந்து ஆக்கிரமித்துள்ளது. அக்சாய் சின் வழியாக சீனாவின் சின்சியாங் மாகாணத்தையும், திபெத்தையும் இணைக்கும் வகையிலான சாலையையும் சீன அரசு அமைத்துள்ளது. மேலும் இந்த வழித்தடத்தின் மூலம் ஜம்மு – காஷ்மீர் எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவி வருகின்றனர். மேலும் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்குள்ளும் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவுவதும் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது திடீரென திரும்பப் பெறப் படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்துக்கு சென்றபோது, அதற்கே சீன அரசு கண்டனம் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக மற்றொரு வட கிழக்கு மாநிலமான சிக்கிமிலும் சீனாவின் அக்கிரமிப்பு இருந்து வருகிறது. நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு பிரதிநிதிகளும் இதுவரை 17 முறை பேச்சு நடத்தியுள்ளனர். ஆனாலும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது இப்பிரச்னையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டால் எல்லைப் பகுதி மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். தில்லியில் நடைபெறும்ம் இன்றைய பேச்சுவார்த்தையில் சீன அரசின் பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜியேச்சி கலந்து கொள்கிறார். இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

சிங்கப்பூரை கட்டமைத்த முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்

Lee-Kuan-Yew-Singapores-founder-and-first-prime-minister-dies-at-91 சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அதனைக் கட்டமைத்தவருமான லீ குவான் யூ தனது 91 ஆவது வயதில் மரணம் அடைந்தார். இதனை அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சிங்கப்பூரை நிறுவியவர் லீ குவான் யூ. ஆங்கிலேயர்களிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தவர். சிங்கப்பூர் குடியரசின் நிறுவனரான, சிங்கப்பூரின் தந்தையான இவர், 1959ல் இருந்து 1990 வரை ஆட்சி செய்து, சிங்கப்பூர் என்ற சிறிய தீவை உலகின் முன்னணி பொருளாதார, வர்த்தக மையமாக மாற்ற வைத்தவர். அண்மையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லீ குவான் யூ சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக, பிரதமர் லீ ஸியென் லூங் முன்னதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். லீ குவான் யூவுக்காக, நூற்றுக்கணக்கான மக்கள் மலர்களை வைத்து நாட்டின் முதலாவது பிரதமரின் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் லீ குவான் யூ சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 3.18 க்கு அவரது உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லீ குவான் யூவின் மறைவுக்கு சிங்கப்பூர் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மனித உரிமை கமிஷன் தலைவர் ஆகிறார் பி.சதாசிவம்

sadhasivan புதுதில்லி: கேரள மாநில ஆளுநராக உள்ள பி.சதாசிவம், தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம், பின்னர் கேரள மாநில ஆளுநராக தற்போது பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் மனித உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது இதன் தலைவராக இருந்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணன் வரும் மே.12ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதைத் தொடர்ந்து சதாசிவம், மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அவரது நியமனம் குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 80 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திரா பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் பலி என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கைபர்- திரா பழங்குடியின பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய பகுதி தாலிபன் பயங்கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. ராணுவத்தின் தாக்குதலுக்கு பயங்கரவாதிகளும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேரும் பலியாகினர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவத்தின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கைபர் மாகாணப் பகுதியை விட்டு பயங்கரவாதிகள் தப்பி ஓடி எல்லையில் தஞ்சம் அடைந்தனர்.

பீல்ட் மார்ஷல் ஆனார் சரத் பொன்சேகா

ex-army-chief-General-Sarath-Fonseka கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இலங்கை அதிபர் மைத்திரிபால சிரிசேனவினால் பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரே, இலங்கையின் முதலாவது பீல்ட் மார்ஷல் என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் இவரது பங்களிப்புக்காக, இவருக்கு இந்த அஸ்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சகாயத்துக்கு மிரட்டல்: விஜயகாந்த் கண்டனம்

vijayakanthசென்னை: கனிமவள கொள்ளையை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதற்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அண்மைக் காலமாக இந்தியா முழுவதும் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்ள தூண்ட படுவதாகச் செய்திகள் வருகின்றன.தமிழகத்தில் வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி, சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.கர்நாடகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவியின் தற்கொலையிலும் மர்மம் உள்ளது. இந்தக் கொலைகளுக்கு அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை.கனிமவள கொள்ளையை விசாரித்து வரும் சகாயத்துக்கும் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வந்த வண்ணம் உள்ளன.இதனை தேமுதிக வன்மையாகக் கண்டிக்கிறது. நேர்மையான அதிகாரிகள் அனைவருக்கும் தேமுதிக உறுதுணையாக இருக்கும். நேர்மையான அதிகாரிகளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.