திருச்சி: சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இளைஞரை அந்த வழியே சென்ற தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து உயிரைக் காத்தார். இந்த நிகழ்ச்சி அங்குள்ளவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். நேற்று ஞாயிறு மாலை 4 மணி அளவில் இலுப்பூர் பேராலயத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் மீண்டும் அவர் முதல்வராக வேண்டி நடைபெற்ற வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக காரில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூரை அடுத்த மேட்டுச்சாலை என்ற இடத்தில் சாலையோரம் அரசு பஸ்சில் அடிபட்ட இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட டாக்டர் விஜயபாஸ்கர் தனது காரில் இருந்த முதலுதவிப் பெட்டியின் முலம் அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் உடன்வந்த பாதுகாப்பு வாகனத்தில் அந்த நபரை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கே இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு போராடிய அவரை சாவின் விளிம்பில் இருந்து மருத்துவர்கள் காப்பாற்றினர். நிகழ்ச்சி முடிந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்ற டாக்டர் விஜயபாஸ்கர் அந்த இளைஞர் குறித்து விசாரித்தார். அந்த இளைஞர் காரையூர் அருகே உள்ள நெறிஞ்சிக்குடியை சேர்ந்த அடைக்கலம் மகன் குமரேசன் என்று தெரிந்தது. அவரின் குடும்பத்தாருக்கு மருத்துவச் செலவுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை வழங்கி சிகிச்சை பெற்று வரும் குமரேசனுக்கு ஆறுதல் கூறினார். மகனின் உயிரைக் காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கரை அங்குள்ளோர் நெகிழ்ச்சியுடன் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
விபத்தில் போராடிய இளைஞர்: ஆபத்தில் உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

