சிங்கப்பூர் தந்தை லீ குவான் மறைவு- தமிழர்களுக்குப் பேரிழப்பு!: வைகோ இரங்கல்

Published:

சென்னை: சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் மறைந்தது தமிழர்களுக்குப் பேரிழப்பு என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு ஆசியாவில் சின்னஞ்சிறு தேசமான சிங்கப்பூரை உலகமே ஏறிட்டுப் பார்க்கும் உன்னத நிலைக்கு உயர்த்தியவரும், ‘சிங்கப்பூரின் தந்தை’ என அழைக்கப்பட்டவருமான அந்நாட்டின் முதல் பிரதமர் லீகுவான் யூ மறைந்த செய்தி, அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. ஒரு நாட்டின் அதிபர் எப்படி மக்கள் சேவை புரிய வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் லீகுவான். பிரதமர் பதவி வகித்தபோதும், அந்நாட்டின் முதல் ஊழியன் என்ற உணர்வுடன் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி விண்முட்டும் புகழ்பெற்ற லீகுவான், அங்கு வாழும் தமிழர்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தார். இலங்கை தீவில் கொடுந்துயருக்கு ஆளாகிய ஈழத்தமிழர்களின் நியாயத்தை உணர்ந்து சிங்களப் பேரினவாத அரசுக்கும் இனக்கொலை நடத்திய அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்தார். இலங்கை தீவில் வாழும் ஈழத்தமிழர்கள், ஈழத்தின் பூர்வகுடிமக்கள் என்பதையும், சிங்கள இனவாதம் அவர்களை நசுக்கி அழிக்க முனைகிறது என்பதையும், நடைபெற்ற படுகொலைகள் தமிழ் இன அழிப்பின் வெளிப்பாடு என்பதையும் உலகத்துக்குச் சொன்னார். சிங்கள அரசு, ஈழத்தமிழர்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்றும், தமிழர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதனால்தான் இன அழிப்புக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் நேர்ந்தது என்றும் உலக நாடுகளில் வெளிப்படையாக சொன்ன ஒரே ஒரு அதிபர் லீகுவான் அவர்கள் மட்டும்தான். தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த அந்தக் குரல் அடங்கிவிட்டது! அவர் மறைந்துவிட்டார்! என்பது தாங்கமுடியாத துக்கத்தைத் தருகிறது. ஈழத்தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும், தாய்த் தமிழகம் உள்ளிட்ட தரணிவாழ் தமிழர்களும் நன்றி உணர்வோடு அந்த மாபெரும் தலைவர் லீகுவான் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் இந்த நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். லீகுவான் அவர்களின் புகழ் காலத்தால் அழியாது நிலைத்து இருக்கும்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img