Home Blog Page 6035

விடுப்பை நீட்டித்தார் ராகுல்: விரைவில் திரும்புவார் என்கிறது காங்கிரஸ்

rahul_gandhi புது தில்லி: நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது விடுப்பை மேலும் நீட்டித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் விரைவில் பணிகளுக்கு திரும்புவார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன், தில்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கே சென்றார், எங்கே தங்கியுள்ளார் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பியதாகவும், அதற்கு தடை ஏற்பட்டதால் அவர் கோபத்தில் வெளியேறியதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், அவரது விடுப்பு குறித்து காங்கிரஸ் கட்சியினரே, காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள் என்றெல்லாம் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியதால் சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ”ராகுல் காந்தி அரசியலை விட்டு போகவில்லை. அவர், புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்காக, சில ஆழ்மனப் பயிற்சிகளை கற்றுக் கொள்ள வெளிநாடு சென்றுள்ளார்” என்றனர். இந்நிலையில், கட்சியில் சில மாறுதல்கள் செய்ய தடங்கல் ஏற்பட்டதால், ராகுல் காந்தி கோபத்தில் வெளியேறியதாக வெளியான தகவலை சோனியா காந்தி மறுத்தார். இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று தில்லி திரும்புவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் தில்லி திரும்புவது குறித்தோ, அல்லது அவர் தில்லி வந்தடைந்ததாகவோ எந்தவித தகவலும் இல்லை. இதனிடையே ராகுல் காந்தி, தனது விடுப்பை மேலும் நீட்டித்துள்ளதாகவும், இந்த வார இறுதியில் அவர் தில்லி திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும்: திருமாவளவன்

thol_thirumavalavan சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- காங்கிரஸ் ஆட்சியின்போது நடைமுறையிலிருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற உழைக்கும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆண்டில் 100 நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தாலும், அது ஒரு பயனுள்ள திட்டமாகவே விளங்கியது. தற்போது பாஜக ஆட்சியில் அந்தத் திட்டத்தைப் படிப்படியாக முடக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. இதனால், இத்திட்டத்தின்கீழ் வேலை நடக்கும் பரப்பளவும் வெகுவாகக் குறைந்துள்ளது. தமிழகத்திலுள்ள 385 ஒன்றியங்களிலும் நடைபெற்ற இவ்வேலைகள் சுமார் 94 ஒன்றியங்களில் மட்டுமே நடைபெறுவதாகத் தெரிகிறது. இது எளிய மக்களுக்கெதிரான மாபெரும் மோசடியாகும். இந்தத் திட்டத்தை முடக்கும் முயற்சியைக் கைவிட்டு, 200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும். ஊதியத்தை நாளொன்றுக்கு 200 ரூபாயாக உயர்த்த வேண்டும். இதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 16 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மது இல்லா கிராமங்களுக்கு ரூ.1 லட்சம்: ஜார்கண்ட் முதல்வர்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மது இல்லா கிராமங்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என மாநில முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தொடரில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களின் கிராமப் பகுதிகளை மது இல்லா கிராமமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களின் முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களின் கிராமங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படு்ம் என அவர் தெரிவித்துள்ளார்.

செஷல்ஸ் தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார் அதிபர்

modi-james-alix-miவிக்டோரியா: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதன் முதல் கட்டமாக நேற்று அவர் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்றார். நேற்று மாலை தலைநகர் தில்லியில் இருந்து செஷல்ஸ் நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டார் மோடி. நேற்று நள்ளிரவு செஷல்ஸ் தீவுகளைச் சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் விக்டோரியாவில் உள்ள விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல் வரவேற்றார். செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் பேசும் பிரதமர் மோடி, பின்னர் அங்கே கடலோர ரேடார் கண்காணிப்பு கருவியையும் இயக்கி வைக்கிறார். அதன்பின் மார்ச் 11-12 இரு தினங்கள் மொரிஷீயஸில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள மோடி, இன்று பிற்பகல் மொரீஷியஸ் செல்கிறார். மொரீஷியஸில் தனது பயணத்தை மிகவும் சிறப்பான ஒரு தினமாக அறிவித்துள்ளார் மோடி. அங்கு சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் மோடி,  இந்த தினத்தை சிறப்பான நாளாக அறிவித்துள்ளார். 1930ம் வருடம் இதே மார்ச். 12ல்தான் தண்டி யாத்திரையை மகாத்மா காந்தி மேற்கொண்டார். அங்கு அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜக்நாத்துடன் பேசும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகிறார். பின்னர், கடலோர ரோந்துக் கப்பலை இயக்கி வைத்து, இந்திய நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து இலங்கை புறப்பட்டு செல்கிறார். மார்ச் 13-14 இரு தினங்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்கிறார் மோடி. அங்கு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு இந்தியா சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். தலைமன்னாரில், புதிய ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி மரத்தை பார்வையிடுகிறார். இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பிரதமர் மோடியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் சென்றுள்ளது.

“காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட்” : சர்ச்சையைக் கிளப்பினார் மார்க்கண்டேய கட்ஜு

katju   புது தில்லி: மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவரும், முன்னாள் தலைமை நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு, அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திவைப்பார். அது அவரது வழக்கம். அவரது சர்ச்சைக் கருத்துகளில் தற்போது இடம்பெற்றிருப்பவர் தேசத்தந்தை மகாத்மா காந்தி. அவர் கூறிய கருத்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘காந்தி-ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரைதான் அந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் கட்டுரையை எழுதிய சிறிது நேரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதனைத் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்தக் கட்டுரையில்,…. இந்தக் கட்டுரை எனக்கு கண்டனத்தைப் பெற்றுத் தரலாம். ஆனால், நாட்டு நலனுக்காக இதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மகாத்மா காந்தி, ஆங்கிலேயரின் ஏஜென்டாக இருந்து நாட்டுக்கு பெரும் தீங்கு இழைத்தார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தியா, பல்வேறு சாதி, மொழி, மதங்களைக் கொண்ட நாடு. இதை உணர்ந்த ஆங்கிலேயர்கள், பிரிவினைக் கொள்கையை பின்பற்றினர். காந்தியும் தன் பங்குக்கு பல ஆண்டுகளாக, அரசியலில் மதத்தைப் புகுத்தியதன் மூலம், ஆங்கிலேயரின் கொள்கைக்கு உரம் சேர்த்தார். அவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 1915-ம் ஆண்டில் இருந்து அவர் இறந்த 1948-ம் ஆண்டுவரை, அவர் தனது பேச்சிலும், எழுத்திலும் ‘ராமராஜ்யம், பசு பாதுகாப்பு, பிரம்மச்சர்யம், வர்ணாசிரமம்’ போன்ற இந்து மத தத்துவங்களை வலியுறுத்தி வந்தார். தன்னை ஒரு சனாதனி இந்து என்றும், வர்ணாசிரமத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றும் அவர் எழுதி வந்தார். அவரது கூட்டங்களில், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற இந்து பஜன் ஒலிக்கும். இவையெல்லாம், முஸ்லிம்களை ‘முஸ்லிம் லீக்’ போன்ற முஸ்லிம் அமைப்புகளை நாடச் செய்தன. இது, ஆங்கிலேயர் பின்பற்ற நினைத்த ‘பிரித்தாளும் கொள்கை’க்கு உதவிய செயல்கள்தானே? பகத்சிங் போன்றவர்கள், ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சி இயக்கம் தொடங்கினர். ஆனால், காந்தி, சத்யாகிரக பாதைக்கு விடுதலைப் போராட்டத்தைத் திருப்பினார். இதுவும், ஆங்கிலேயருக்கு உதவியது போன்றதுதான். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, கலவரத்தை கட்டுப்படுத்த காந்தி நவகாளி யாத்திரை சென்றார். அதனை பலரும் துணிச்சலான செயல் என புகழ்கிறார்கள். ஆனால், அவர்தான் அரசியலில் மதத்தை புகுத்தி, இந்தக் கலவரத்துக்கே வித்திட்டவர். முதலில் வீட்டைக் கொளுத்தி விட்டு, பிறகு தீயை அணைக்க முயற்சிப்பதுபோல் நாடகமாடினால் அது சரிதானா? என்று இந்தக் கட்டுரையில் அவர் கேட்டுள்ளார். 90% இந்தியர்கள் முட்டாள்கள், பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நாட்டின் குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன் என்றெல்லாம் கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் மார்க்கண்டேய கட்ஜு. தற்போது, காந்தி பிரிட்டிஷ் ஏஜென்டாக செயல்பட்டு நாட்டுக்கு கெடுதலை உண்டாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்திருந்த மக்களை ஒன்றிணைக்க காந்தியின் பஜனை நிகழ்ச்சிகளும், ரகுபதி ராகவ ராஜாராம் பாடல்களும்தான் உதவின என்பது இந்திய வரலாறு. காந்தியின் பசுவதை எதிர்ப்பு குறித்தும், அதன் பின்னணி குறித்தும் அவரது பேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளும்… அதற்கு பதிலளித்துள்ள வாசகர் வட்டக் கருத்துகளும்… பசுவதைத் தடையை சட்டத்தின் மூலம் நிறுத்த முடியாது  என்று குறிபிடுவதற்காக காந்தியை அவர் தனது கருத்தின் மூலப் பொருளாக இழுத்துள்ளார்.  

காங். பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்: ஜெயலலிதா நடவடிக்கை

jayalalitha சென்னை: மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் … அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவோடு நெருங்கிப் பழகியவரும், பல்வேறு பணிகளில் அண்ணாவுக்கு உறுதுணையாக விளங்கியவரும், அண்ணாவின் மறைவுக்கு பிறகு பல அரசியல் தலைவர்களிடம் நெருங்கிப் பழகியவரும், காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றியவருமான 90 வயதுடைய கிள்ளிவளவன் முதுமையும், ஏழ்மையும் வாட்டி வரும் சூழலில் நோயுற்று கவனிப்பார் இன்றி தனிமையில் தவித்து வருகின்றார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமுற்றார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் வாழ்வில் வழி இழந்து வாடி நிற்கும் மனிதர்களின் துயரங்களைப் பற்றிய செய்தி அறிந்த உடனே அவர், எவர் என்றும் பாராமல், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற பாரபட்சம் காட்டாமல் மனிதாபிமானம் என்ற மாண்பின் அடிப்படையில் அவர்தம் துயர் களைய உடனடி உதவிகளை வழங்கி வரும் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கிள்ளிவளவனின் துயர் துடைத்திடும் வகையில், அவருடைய பெயரில் 5 லட்சம் ரூபாயை நிலை வைப்பில் செலுத்தி, அதில் இருந்து வரும் வட்டித்தொகையில் அவருடைய அன்றாடச் செலவுகளை செய்துகொள்வதற்கு ஏதுவாக மாதா மாதம் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ததோடு, அவரது உடனடி செலவிற்காக 5 ஆயிரம் ரூபாயையும் வழங்குமாறு ஆணையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 10-3-2015 அன்று (நேற்று) மாலை அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.பழனியப்பன் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள கிள்ளிவளவனுடைய வீட்டிற்குச் சென்று, ஜெயலலிதா சார்பாக நலம் விசாரித்ததோடு, கழகத்தின் சார்பில் 5 லட்சம் ரூபாயை வங்கியில் நிலை வைப்பில் செலுத்தி, அதில் இருந்து வரும் வட்டித்தொகையில் அவருடைய அன்றாடச் செலவுகளை செய்துகொள்வதற்கு ஏதுவாக மாதா மாதம் பணம் கிடைக்கும் வகையில் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளது பற்றி தெரிவித்து, உடனடி செலவிற்காக 5 ஆயிரம் ரூபாயை வழங்கி, அவருக்கு ஆறுதல் கூறினார்கள். நிதியுதவியினைப் பெற்றுக்கொண்ட கிள்ளிவளவனும், அவரது குடும்பத்தினரும், தங்கள் சூழ்நிலையை அறிந்து உடனடியாக உதவி செய்த, ஏழை, எளிய மக்களின் கண்கண்ட காவல் தெய்வமாய் விளங்குகின்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கருணை உள்ளத்தை நினைத்து, நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி.க்கு 3 மாத அவகாசம்

ramajayam-murderமதுரை: திருச்சியில், ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நேற்று ராமஜெயம் கொலை வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், வழக்குரைஞர் எஸ்.ரவி ஆகியோர் ஆஜரானார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் இது குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர் சி.ரமேஷ், ‘போலீஸாரின் விசாரணையில் குற்றவாளிகள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். எனவே, விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணைக்கு 3 மாத கால அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் திருச்சியில் நடைப்பயிற்சிக்காக காலையில் சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட கொலை நடந்து 3 ஆண்டுகள் முடியும் நேரத்தில், கொலையாளிகள் குறித்து எந்தத் தகவலையும் போலீஸார் இதுவரை வெளியிடவில்லை. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் யார் என்பதை போலீசாரால் இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

ஆலங்குளம் அருகே ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: பிளஸ்-2 மாணவன் பலி: 30 பேர் படுகாயம்

திருநெல்வேலி அடுத்த ஆலங்குளத்தில் இருந்து அரசு பேருந்து தடம் எண் 303 நெல்லை டவுண் பஸ் நிலையத்திற்கு நேற்று செவ்வாய் கிழமை மாலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 40க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆலங்குளம் அடுத்த நெட்டூர் ஆற்றுப்பாலம் அருகே வரும் போது பஸ், டிரைவர் கட்டுப்பாட்டை மீறி தடுப்பு சுவரின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுப்பையாபுரத்தை சேர்ந்த கோயில் என்பவரின் மகன் சிவரத்தினம் (17) சம்பவ இடத்தில் இறந்தார். பஸ்சில் இருந்த மாணவிகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 30 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தோருக்கு பாளை அரசு மருத்துவமனை, ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் இறந்த மாணவன் சம்பவத்தன்று பிளஸ்-2 அரசு தேர்வு எழுதி விட்டு பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. siva

“நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!”

10482143_599228513527816_46027082804070919_n “நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
விழுப்புரம் பக்கம் ஏதோ ஒரு கிராமம். அங்கு
நரிக்குறவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் குடும்பத்தில்
மிகவும் துன்பப்பட்டு மனம் வெறுத்து தற்கொலை செய்து
கொள்ள நினைத்து அந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனில் வந்து
ஒரு ஒரமாகப் படுத்து விட்டான். அடுத்து வரும் ரயிலில்
தண்டவாளத்தில் விழவேண்டும் என்பது அவன் எண்ணம்.
 
படுத்தவன் தூங்கிவிட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு
போல் ஒரு தோற்றம். யாரோ ஒரு சாமியார் தோன்றி
“நீ சாக வேண்டாம்.என்னை வந்து பாரு; நான் உனக்கு
அமைதியைக் கொடுப்பேன்”-என்று சொல்ல திடுக்கென்று
விழித்துக் கொண்டான். அவன் உடலெல்லாம் ஒரு
புத்துணர்ச்சி.
 
எந்த சாமியார் கனவில் வந்தாரோ அவரைத் தேட வேண்டும்
என்று தோன்றிவிட்டது.உடனே தன் கையில் பல நாளாய்
போட்டிருந்த ஒரு தங்க மோதிரத்தை  விற்று காசாக்கிக் 
கொண்டு ஒவ்வொரு ஊராக அலைந்து திரிந்து எத்தனையோ 
சாமியார்களைப் பார்த்தும், கனவில் வந்தவர் இல்லை
என்று மீண்டும்,மீண்டும் அலைந்து வாடினான்.
 
அந்த சமயம் மஹாபெரியவா வேலூர் பக்கத்திலிருந்த
‘ஏகாம்பர குப்பம்’ என்ற ஊரில் முகாம். அலைந்து திரிந்த
அந்த நரிக்குறவன், ஒரு மாலைப் பொழுதில் பந்தலில்
தற்செயலாக ஸ்ரீ பெரியவாளைப் பார்த்துவிட்டான்.
 
“ஓ சாமி! இந்த சாமி தான்! என்னை வரச்சொன்னியே!
வெளிலே வா!” என்று கத்த ஆரம்பித்தான்.
 
ஸ்ரீ பெரியவா ராஜம்மாள் அம்மாவைக் கூப்பிட்டு,
“அந்த ஆளை விசாரித்து ஆகாரம் ஏதாவது கொடு.
நாளை காலை நான் அவனைப் பார்க்கிறேன் என்றார்.
 
ராஜம்மாள் அந்த நரிக்குறவனிடம் சென்று, “நீ யாரப்பா? உனக்கு சாப்பாடு தரேன். உன்னை
காலையிலே சாமி பார்த்து பேசுவாங்க!” என்று
விவரம் கேட்க,
 
“ஆமா! தாயி என் இரண்டு பெண்டாட்டி கூடவும்
சண்டை.மூணாவது ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டேன்.
அவ எனக்கு விஷம் கலந்து சாப்பாடு வைத்ததைப்
பார்த்துவிட்டேன்.மனது ஒடிஞ்சு போய் செத்துப்போக
இருந்தேன். அப்போ இந்த சாமியார் கனாவிலே வந்து
என்னை வந்து பாருன்னு சொன்னாரு” என்றான்.
 
மறுநாள் காலையில் பெரியவா வெளியில் வந்தார்.
அவன், “சாமி! உன்னைப் பாத்தா எங்க தாய் மாதிரி
இருக்கு. நான் குப்பையை கூட்டிக்கிட்டு உங்கூடவே
இருக்கேன்” என்று கதறி விட்டானாம்.
 
பெரியவா ” நீ ஒழுங்கா ஊருக்குப் போ. இனிமே
உன் வீட்டிலே உன்னை மரியாதையாக நடத்துவாங்க.
உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நெனச்சுக்கோ.
எல்லாம் சரியாப்போகும்” என்று சொல்லி அவனுக்கு
பழங்கள் கொடுத்தார்கள்.அங்கு இருந்தவர்களிடம்
பணம் வசூல் பண்ணி அவனிடம் கொடுத்து
அனுப்பி வைத்தார்களாம்.
 
(இந்த சம்பவம் புதுக்கோட்டை ராஜம்மாள் எனக்கு
சொன்னது.இந்தச் சம்பவம் நடந்தபோது திருச்சி சுபலக்ஷ்மி, திருச்சி தர்மாம்பாள் மற்றும் சிலர்
கூட இருந்திருக்கிறார்கள்-‘ராதா ராமமூர்த்தி’)

“கணபதியும் நானே!”

“கணபதியும் நானே!” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.10649504_925523734144259_6912074781457211637_n தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (நெட்டில் கிடைத்ததால் தட்டச்சு கொஞ்சமே) நானும் என் மைத்துனர் பெண் ஜானாவும் அடிக்கடி காஞ்சி சென்று பெரியவளை தரிசனம் செய்வோம். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி வெவ்வேறு காணிக்கைகளை சமர்பிப்போம். ஒரு சமயம் நாங்கள் காஞ்சிபுரம் போக நினைத்தபோது ” இந்த முறை பெரியவாளுக்கு அழகாக அருகம்புல் மாலை கொண்டு போகலாம்” என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. ஓரத்தில் அரளிப்பூவை பார்டர் மாதிரி அமைத்து பெரியதாக அருகம்புல் மாலை மிக அழகாகத் தயாரித்துக் கொண்டு போனோம். அடுத்த நாள் காலை ஸ்ரீ மடத்திற்குப் போகும்போது எட்டு மணி ஆகிவிட்டது. பெரியவா எல்லோருடனும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் கொண்டு போன மாலைப் பொட்டலத்தையும் கல்கண்டுப் பொட்டலத்தையும் எதிரில் வைத்து விட்டோம். பெரியவா அதை எடுத்து ஓரமாகக் தள்ளி வைத்து விட்டார். அதில் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்கவில்லை. நாங்களும் நின்றபடியே தரிசனம் செய்து கொண்டிருந்தோம். சுமார் பத்து மணிக்கு ஒரு பெண்மணி வந்தார். அவர் கையில் ஒரு பிள்ளையார் வெள்ளிக் கவசம் நல்ல வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. பெரியவா உத்தரவுப்படி அவர்கள் ஊர் கோவிலில் பிள்ளையாருக்கு வெள்ளிக் கவசம் செய்து அதை பெரியவா அனுக்ரஹத்திற்காக எடுத்து வந்திருக்கிறார், அந்த பெண்மணி. பெரியவா அந்தக் கவசத்தை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் ” அதை எடு ” என்று கையைக் காட்டினார். ஓரமாக இருந்த அருகம்புல் மாலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொடுத்தார், அவர். ‘பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார் ? மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்குச் சாற்றினார். அளவெடுத்தது போல் மாலை அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தன் மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலு பக்கமும் திரும்பி திரும்பி தரிசனம் கொடுத்தார்கள், பெரியவாள். நாங்கள் மெய் சிலிர்த்துப் போனோம். கவசம் கொண்டு வந்த பரம பக்தையான அந்தப் பெண்மணி கண்களில் நீர் மல்க கையை கூப்பிக் கொண்டு நின்றார். அப்படியே அதை அப்பெண்மணி கையில் கொடுக்கச் சொன்னார் பெரியவர்கள். நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், பெரியவா.