Home Blog Page 6036

தேமுதிக மீதான வழக்குகளில் மட்டும் வேகம் காட்டும் காவல்துறை: விஜயகாந்த்

vijayakanth சென்னை: தேமுதிக மீதான வழக்குகளில் மட்டும் தமிழக காவல் துறை வேகம் காட்டுவதாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் அவைக்காவலரை தாக்கியதாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சி.எச்.சேகர், பி.கே.தினகரன் ஆகியோர் மீது காவல்துறையினர் மூலம் உண்மைக்கு புறம்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த வழக்கிலும் காட்டாத வேகத்தை காட்டி, நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிமுக அரசு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கிறது என்பதும், காவல்துறை அதற்கு உடந்தையாக உள்ளது என்பதும் தெளிவாகிறது. சமீபத்தில் தேமுதிகவின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அய்யம்பெருமாளை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது, நடந்த உண்மை நிலவரத்தை அறிந்த நீதிமன்றம் அவர் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதை தெரிந்துகொண்டு உடனடியாக அவரை ஜாமீனில் விடுவித்தது. தேமுதிக சம்மந்தப்பட்ட வழக்குகளில் இவ்வளவு வேகம் காட்டும் காவல்துறை, எல்லா வழக்குகளிலும் இதேபோல் வேகம் காட்டினால் தமிழக காவல்துறையை பொதுமக்கள் பாராட்டுவார்கள். முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியை சார்ந்த இளைஞர் ஒருவர் முதலமைச்சரின் தம்பிதான் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆதாரப்பூர்வமான இந்தப் பிரச்னையில், முதலமைச்சரின் தம்பி என்பதற்காக எந்தவித வழக்கும் அவர் மீது பதிவு செய்யாமல் காவல்துறை மவுனம் காத்தது. ஆனால், உயர்நீதிமன்றம் அக்கடிதத்தில் உள்ளது உண்மையென உறுதி செய்து, முதலமைச்சரின் தம்பி மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா, காமராஜ், செல்லூர் ராஜு, பா.வளர்மதி உள்ளிட்டோர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பலரின் மீது கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொலை மிரட்டல், அத்துமீறிப் புகுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் போன்ற பல வழக்குகள் போடப்பட்டு சுமார் 10 வருடங்களாக எப்.ஐ.ஆர். நிலையிலேயே உள்ளது. தேமுதிக மீது சமூக வலைதளங்களில் செய்யப்படும் அவதூறான விமர்சனங்கள் குறித்து கடந்த மாதம் தேமுதிக வழக்கறிஞர்களால், சென்னை சைபர் கிரைம் பிரிவில் கொடுக்கப்பட்ட புகார் இதுவரையிலும் நடவடிக்கை ஏதும் இல்லாமல் நிலுவையில் உள்ளது. இதேபோன்ற புகார், தேமுதிகவின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர், நகர்மன்ற உறுப்பினருமான மல்லி சுப்பிரமணியன் மீது அதிமுகவினரால் சுமத்தப்பட்ட உடன் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் 45 நாட்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற காவல்துறையின் பாரபட்ச நடவடிக்கைகளால் காவல்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கையையும் இழக்க நேரிடும். ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக செயல்பட்ட தமிழக காவல்துறை, உலகின் மிகமோசமான காவல்துறை என்ற பெயரை பெறுவதற்கு முயற்சிக்காமல் மக்களின் நலனுக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும், செயல்படும் மக்கள் சேவகனாக மாறவேண்டும் என்பதை மனதில் கொண்டு தமிழக காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். – என்று விஜயகாந்த் அந்த அறிகையில் கூறியுள்ளார்.

குஜராத் வந்த சூரிய சக்தி விமானம்

first-high-altitude-flight-solar-impulse-2-8 ஆமதாபாத்: முற்றிலுமாக சூரிய சக்தியில் இயங்கி உலகைச் சுற்றி வருகின்ற விமானம் நேற்று குஜராத் மாநிலத்துக்கு வந்தது. நேற்று காலை மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 11 மணி நேர பயணத்துக்கு பிறகு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் நள்ளிரவு 11.25க்கு தரையிறங்கியது. இந்த விமானம் இன்று வாராணசி செல்கிறது. அப்போது கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக கங்கை நதி மீது பறக்க உள்ளது. பின்னர் வாராணசியில் இருந்து மியான்மர் நாட்டுக்குச் செல்கிறது.

லிங்கா பெயர் சர்ச்சை: ரஜினிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: நடிகர் ரஜினி காந்த் நடித்து வெளியான லிங்கா படத்தின் பெயர் சமஸ்கிருதப் பெயர் என்றும், அதனை தமிழ்ப் பெயராகக் காட்டி தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற்று மோசடி செய்ததாகவும் சிங்காரவேலன் என்பவர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் ரஜினி காந்த் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக்கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார். லிங்கா படத்தின் பெயர் சம்ஸ்கிருதப் பெயர் என்றும், அதனை தமிழ்ப் பெயராகக் காட்டி கேளிக்கை வரி விலக்கு பெற்றதில், தமிழக அரசுக்கு ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோடை தொடங்கியதால் மின்வெட்டு: ராமதாஸ் கிண்டல்

சென்னை: கோடை தொடங்கியதால் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அம்மா ஆட்சி உருவாக்கியுள்ள ஒளிமயமான எதிர்காலம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவரது டிவிட்டர் பதிவு… கோடை தொடங்கியதால் கோவையில் மின்வெட்டு : இதுதான் அம்மா ஆட்சி உருவாக்கியுள்ள ஒளிமயமான எதிர்காலம்!

கட்ஜு யாருடைய ஏஜென்ட்? : ராமதாஸ் கேள்வி

சென்னை: மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று கருத்து கூறியுள்ள பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவர் மார்க்கண்டேய கட்ஜுவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து… காந்தியடிகள் இங்கிலாந்தின் ஏஜென்ட்; அவர் நாட்டைக் கெடுத்தார்- மார்கண்டேய கட்ஜு: இப்படி புகார் கிளப்பும் இவர் யாருடைய ஏஜென்ட்?  

சென்னை பெண் அருணா கொலை: பிரேதப் பரிசோதனையில் வேறு தகவல்

chennai-murder சென்னை: சென்னையில் பெண் அருணா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் பூந்தொட்டியால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்த காதலன், தன் காதலியை குத்திக் கொன்று, அவரது உடலை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்தான். ஆனால் உண்மை தெரிந்து காவலாளி கத்தவே தப்பிச் சென்றான். போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். சென்னையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனி பராக்கா சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் கண்ணப்பனின் மகன் தினேஷ் (25). இவர், அம்பத்தூரில் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த கண்ணப்பன், கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி உடனிருந்து அவரைக் கவனித்து வருகிறார். இதனால் தினேஷ் மட்டும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில் தினேஷ் போர்வை, மெத்தையால் சுற்றிக் கட்டப்பட்ட மூட்டை ஒன்றை லிஃப்ட் மூலம் இறக்கிக் கீழே கொண்டு வந்தார். அதனைத் தனது காரில் ஏற்ற முயற்சித்தார். ஆனால் அவரால், அந்த மூட்டையைக் காரில் ஏற்ற முடியவில்லை. இதனால் பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த காவலாளியை உதவிக்கு அழைத்தார். மருத்துவமனையில் உள்ள தனது தந்தைக்கு தேவைப்படும் மெத்தை உள்ளிட்டவற்றை மூட்டை கட்டியிருப்பதாக அவரிடம் தினேஷ் கூறியுள்ளார். அதை நம்பிய காவலாளியும் மூட்டையைத் தூக்க உதவி செய்துள்ளார். அப்போது அந்தத் துணி மூட்டையிலிருந்து ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு பயத்தில் கூச்சலிட்டுள்ளார் காவலாளி. அவரது கூச்சலால் அக்கம் பக்கத்தினர் அங்கே திரண்டனர். இதனால் பயந்துபோன தினேஷ் அங்கிருந்து நழுவி, ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்ததில், இளம்பெண்ணின் உடல் சுற்றி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே அவர்கள் இது குறித்து போலீஸாரிடம் தகவல் அளித்தனர். தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி விரைந்து சென்று அந்தப் பெண்ணின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணைக் கொலை செய்த தினேஷ் தப்பிச் சென்றுவிட்டதால், கொலையுண்ட பெண் குறித்து போலீசார் தகவல் தெரியாமல் குழம்பினர். இதனிடையே இரவு 11 மணி அளவில், சூளை சட்டண்ண நாயக்கர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், வேப்பேரி காவல் நிலையத்தில் தனது மகள் அருணாவைக் காணவில்லை என்று புகார் அளித்தார். அப்போது அங்கிருந்த போலீசார், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய எல்லையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் உங்கள் மகள்தானா என்று போய்ப் பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பதறியடித்துக் கொண்டு அருணாவின் பெற்றோரும் உறவினர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்து, இது தங்களது மகள்தான் என்று உறுதி செய்தனர். இதன் பின்னர் விசாரணை செய்த போலீஸார், தெரிவித்த தகவல்…. பி.காம் பட்டதாரியான அருணாவும், தினேசும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி தனிமையிலும் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் தினேஷ், நேற்று மாலை அருணாவுக்கு போன் செய்து, வீட்டில் யாரும் இல்லை. வா என்று அழைத்துள்ளார். அவரை நம்பி அருணா, வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டியில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் அங்கே இருந்துள்ளனர். இரவில் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், அருணாவை அடித்து உதைத்து வீட்டில் இருந்த கண்ணாடி பூந்தொட்டியை உடைத்து சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அருணா உயிரிழந்துள்ளார். அருணா உடலை வேறு எங்காவது போட்டு விட்டால் தப்பி விடலாம் என்று நினைத்த தினேஷ், அருணாவின் உடலை மூட்டையாகக் கட்டி காரில் கடத்த திட்டமிட்டார். ஆனால், போர்வைக்கு வெளியே நீட்டிக்கொண்டு தெரிந்த அருணாவின் கை, தினேஷைக் காட்டிக் கொடுத்து விட்டது. கொலையுண்ட அருணா பி.காம். முடித்து விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கணக்கு தணிக்கை பயிற்சி மையத்தில் ‘ஆடிட்டிங்’ பட்டய படிப்பு படித்து வந்தார். நேற்று காலை புறப்பட்டுச் சென்ற அவர் இரவு வெகுநேரம் ஆன பிறகும் வீடு திரும்பாததால், தேடிக் களைத்த அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்தே அருணா கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அருணாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனிடையே தலைமறைவாகிவிட்ட கொலையாளி தினேஷ், தன்னுடைய மொபைல் போனை கையில் எடுத்துச் செல்லாமல் போனதால், அவர் இருக்கும் இடம் குறித்து போலீஸாருக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் போலீஸார் தினேஷைக் கைது செய்து உண்மை நிலை அறிய பெரிதும் போராடி வருகின்றனர்.

உலகக் கோப்பை: இலங்கை 363 ரன் குவிப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் பி பிரிவு 35 ஆவது லீக் சுற்றுப் போட்டியில், இலங்கை ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட் செய்யக் களம் இறங்குவதாக அறிவித்தது. அதன் படி களம் இறங்கிய இலங்கை வீரர்கள், சிறப்பான துவக்கம் அளித்து ரன் சேர்த்தனர். திரிமனே 4 ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், சங்ககரா, தில்ஷன் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் சதம் அடித்து அசத்தினர். சங்ககரா 124 ரன் எடுத்தார். தில்ஷன் 104 ரன் எடுத்தார். பின்னர் நடுவரிசையில் மேத்திவ்ஸ் 21 பந்துகளில் 51 ரன் என அதிரடி காட்டினார். இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 363 ரன் என்ற பெரும் இலக்கை ஸ்காட்லாந்து அணிக்கு நிர்ணயித்தது.

“காரடையார் நோன்பு 15-03-2015”

“காரடையார் நோன்பு 15-03-2015” (மாசிக் கயிறு பாசி படரும்)(விருத்தியாகும்) நல்ல நேரம்; அதிகாலை ஸுமார் 04-05 மணி முதல் 05-10 வரை. சொல்ல வேண்டிய வாக்கியம்’ உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும். நோன்புச் சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக் கொள்ள மந்திரம். தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யhஹம் பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா

ராகுலை கண்டுபிடித்துத் தரக் கோரும் மனு: நீதிமன்றம் தள்ளுபடி

லக்னோ: காணாமல் போய்விட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தரும்படி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு ஏற்க உகந்ததல்ல என்று கூறி அலஹாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்து, உள்ளூர் வழக்குரைஞர் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு அமர்வில் வந்தபோது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டிஒய் சந்த்ரசூட், நீதிபதி ராஜன் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. இந்த மனுவில், சிறப்பு காவல் படை தலைமை இயக்குனர், மத்திய அரசு இரு தரப்பும் ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியும், எஸ்பிஜியின் கண்காணிப்பில் ராகுல் இல்லை என்றால் அதனை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது.

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

kalyaniMathivanan புது தில்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 2010ஆம் ஆண்டு துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சில விதிமுறைகளை இயற்றியது. அதன்படி, ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தால் மட்டுமே, அவரை துணைவேந்தராக நியமிக்க முடியும். எனவே இதனை சுட்டிக்காட்டி கல்யாணி மதிவாணன் நியமனத்தை எதிர்த்து கெயராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். கல்யாணி மதிவாணனை நியமிக்கும்போது பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறையை பல்கலைக்கழகம் கடைபிடிக்கவில்லை என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில், கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து கல்யாணி மதிவாணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், கல்யாணி மதிவாணன் துணைவேந்தராகத் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது. கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்தது பல்கலைக்கழகம்தான் என்றும், எனவே, பல்கலைக்கழகத்தின் தவறுக்கு துணைவேந்தர் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், யுஜிசி விதிப்படி கல்யாணி மதிவாணன் நியமனம் சரிதான் என்றும் நீதிபதி எஸ்ஜே முகோபாத்யாயா தலைமையிலான அமர்வின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.