Home Blog Page 6037

TNPSC GROUP 2 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் பட்டியல் வெளியீடு

ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-II ல் (தொகுதி-II) அடங்கிய துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர்-நிலை-II, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை  ஆய்வாளர், கைத்தறி  ஆய்வாளர்,  வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிகளுக்கான 1130 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.11.2014 மு.ப & பி.ப. மற்றும் 09.11.2014 மு.ப & பி.ப. ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 11497 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள தகுதிகள் மற்றும் விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. 26.03.2015 முதல், சென்னை-3 பிரேசர் பாலச்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும்.   குறிப்பிட்ட நாளில் உரிய அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத்தவறினால், அன்னார் அடுத்தக்கட்ட தெரிவு நிலைகளுக்கான தகுதியினை இழந்தவராகிறார். சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மட்டுமே அடுத்தக்கட்ட நிலைக்கு உரிமை கோர இயலாது.

சிவகிரி:வயலுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் : நெற்பயிர்–கரும்புகள் சேதம்

  சிவகிரியில் வயலுக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் கரும்புகளை நாசம் செய்தன.  

நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் வயல்கள் மற்றும் தோட்டங்கள் உள்ளன. இங்கு நெல், கரும்பு உள்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்குள்ள வயல்கள் மற்றும் தோட்டங்களுக்குள்  காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை  காட்டு யானைகள் சிவகிரி பகுதியிலுள்ள வயலுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை காலால் மிதித்தும், கரும்புகளை துதிக்கையால் முறித்தும் சேதப்படுத்தின.
இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குற்றாலம் மலைப்பகுதியில் திடீர் தீ

 

பழைய குற்றாலம் மலைப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத்தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் குற்றாலம் வனப்பகுதியில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதுடன், இரவு வேளையில் கடும் புழுக்கமும் காணப்படுகிறது. வெயில் காரணமாக மரங்கள், செடி, கொடிகள் வாடி சருகாக மாறியுள்ளன. இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் பழைய குற்றாலம் வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது.
வெயில் காரணமாக வாடியிருந்த மரங்கள் மற்றும் சருகுகளில் தீ மளமளவென பரவியது. பல ஏக்கர் நிலப்பரப்பில் தீபற்றியதை அடுத்து வனத்துறையினர் மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்

நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்க, நீக்க 11இடங்களில் குறை தீர்க்கும் முகாம் நடக் கிறது.  இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை, ஒவ்வொரு தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்திலும் ரேஷன் கார்டு தொடர்பான குறை தீர்க்கும் முகாம் நடத்தப் படுகிறது. அதன் அடிப்படையில் வருகிற 14ம்தேதி அந்தந்த தாலுகாவிற் குட்பட்ட கிராமங்களில் ரேஷன் கார்டுகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கும் கிராமத்தின் விவரம் வருமாறு: நெல்லை-சீதபற்பநல் லூர், பாளையங்கோட்டை- திடியூர், சங்கரன்கோவில் -புன்னைவனம், தென்காசி – சங்கனாப்பேரி, செங்கோட்டை – இலத்தூர், சிவகிரி – ஏ.சுப்பிரமணியபுரம், வீ.கே.புதூர் – குறிஞ்சான்குளம், ஆலங்குளம் -மடத்தூர், அம்பாசமுத்திரம் – நாலுமுக்கு, நாங்குநேரி – வடுகச்சிமதில், ராதாபுரம் – தணக்கர்குளம். இந்த முகாம்களில் அந்தந்த வருவாய் கிராமத்திற்குட்பட்ட பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் அளித்தல் போன்ற ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து குறைகளுக்கும் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ் குமார் வெற்றி

nithish-kumar பாட்னா: பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவுடன் நிதிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 140 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோர் நிதிஷ் குமாருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஐ.ஜ.தள எம்.எல்.ஏக்களில் ஜிதன் ராம் மஞ்சியை தவிர அனைவரும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஜக., இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வில்லை. அவர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இங்கே பாஜகவுக்கு 87 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பீகார் மாநில சட்டப் பேரவையில் மொத்தம் 233 உறுப்பினர்கள் உள்ளனர். வெற்றிக்கு 117 பேர் ஆதரவு இருந்தாலே போதும். இங்கே நிதிஷ் குமார் 140 பேரின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

இஸ்ரேல் உளவாளியை சுட்டு வீழ்த்திய ஐஎஸ் பயங்கரவாத சிறுவன்: அதிர்ச்சித் தகவல்

10yearboyshoot_isis_003 ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ள இளைஞர்கள், சிறுவர்கள் பல கொலைகளை செய்து வரும் தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளின் தலையை துண்டித்து கொடூரக் கொலைகளைச் செய்து வருகின்றனர். அந்த இயக்கத்தில் சிறுவர்களை அதிக அளவில் சேர்த்து பயிற்சி அளித்தும் வருகின்றனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தில் உளவு பார்த்த குற்றத்துக்காக முகமது சயீத் இஸ்மாயில் முஸல்லம் என்ற பிணைக்கைதியை, 10 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சி இடம் பெற்றுள்ள வீடியோவை ஐஎஸ் இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் காவி நிற உடை அணிந்த முகமது சயீத் இஸ்மாயில் முசல்லம் முழங்காலிட்டபடி அமர வைக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு நிற்கும் பத்து வயதுச் சிறுவன் கையில் துப்பாக்கி உள்ளது. அவன் அருகே நிற்கும் ஒரு பயங்கரவாதி பிரெஞ்ச் மொழியில் பேசுகிறான். பிரான்சில் உள்ள யூதர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்துப் பேசுகிறான். சற்று நேரத்தில் அந்தச் சிறுவன் முஸல்லம் தலையில் துப்பாக்கியால் சுடுகிறான். இதுபோன்று 4 தடவை சுட்டவுடன் பிணைக்கைதி முசலாம் இறந்து தரையில் சாய்கிறார். இந்த வீடியோ காட்சி இப்போது உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இ.எஸ்.ஐ. கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த முடிவு: முதல்வர் கடிதம்

panneerselvamசென்னை: சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த முடிவு செய்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் அனுப்பிய கடிதத்தில், சென்னை மற்றும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்த தமிழக அரசு கொள்கை முடிவு மேற்கொண்டுள்ளது . அவ்வாறு தமிழக அரசு ஏற்று நடத்தும்பட்சத்தில், இரு கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் 85% தமிழக அரசுக்கும், எஞ்சிய 15% அனைத்திந்திய அளவுக்கும் ஒதுக்கீடு பகிரப்படும். தமிழக அரசின் இந்த முடிவை, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஏற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவையும், காப்பீடும் வழங்குவதற்காக இ.எஸ்.ஐ சார்பில் நாடு முழுவதும் 21 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 11 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு கல்லூரி சென்னையில் செயல்படுகிறது. கோவையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு திறக்கப்படவில்லை. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக மருத்துவக் கல்லூரிகளை மூட இ.எஸ்.ஐ., முடிவு செய்திருந்தது.

மகப்பேறு காலத்தில் தன்னிச்சையாக மருந்துகள் வேண்டாம்

மகப்பேறு காலத்தில் பெண்கள் தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக் கூடாது என்று அரசு பொதுமருத்துவமனை இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் கூறுகிறார். உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இரைப்பை-குடல் பிரச்னை தொடர்பாக அவசர சிகிச்சை தேவைப்படும் நிலையில் மருத்துவ ரீதியாக அதைச் சமாளிப்பது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அவர் பேசியது:- “பெண்கள் மகப்பேறு காலங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக்கூடாது. மாறாக, டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.மகப்பேறு காலத்தில் ஒட்டுக்குடல், பித்தப்பையில் கல், தொடர் குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனுக்குடன் டாக்டர்களை அணுகுவதுடன் தேவைப்படும் பட்சத்தில் ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் இருக்கும் பெண்கள் தங்கள் உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். உணவில் உப்பை அறவே தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பின் மாத்திரைகள் சாப்பிடுவதை விட உணவு வகைகள் மூலம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் மேற்கொண்டு ஏற்படும் இடர்பாடுகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும்” என்றார் டாக்டர் சந்திரமோகன்.

தவறான புரிதல்: தேசிய கீதம் இசைத்தபோது மேடையிறங்கிய சர்ச்சைக்கு ஆளுநர் தரப்பு விளக்கம்

karnataka_governorபெங்களூரு: தேசியகீதம் இசைத்தபோது கர்நாடக ஆளுநர் மேடையைவிட்டு இறங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தவறான புரிந்துணர்வில் ஏற்பட்டுவிட்டதாக ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடக மாநிலம் ராஜ்பவனில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ராகவேந்திர சிங் சௌஹானுக்கு பதவிப் பிராமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, மேடையில் தலைமை நீதிபதி வகேலா உட்பட புதிதாக பதவி ஏற்ற நீதிபதி ராகவேந்திரசிங் சவுகான் மற்றும் தலைமை செயலாளர் முகர்ஜி உள்ளிட்டோர் எழுந்து நின்றனர். ஆனால் தேசிய கீதம் ஒலிக்கும் முன்பே ஆளுநர் பாஜ்பாய் மேடையில் இருந்து இறங்கியதால், நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர் உதவியாளர் இதுபற்றிக் கூற, தவறை உணர்ந்து உடனே அவர் மேடையில் ஏறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய கீதத்தை ஆளுநர் அவமானப் படுத்த வில்லை என்றும், கவனக்குறைவின் காரணமாக கழிவறைக்குச் செல்லும் அவசரத்தில் கீழே இறங்கினார் என்றும் பின்னர் தெரிய வந்தது. இது குறித்த விளக்கத்தை ஆளுநர் மாளிகை பின்னர் தெரிவித்தது.   https://www.youtube.com/watch?v=Wr-IGMLyzHE

கிள்ளிவளவனுக்கு நிதியுதவி: ஜெயலலிதாவுக்கு தமிழருவி மணியன் பாராட்டு

சென்னை:

கிள்ளிவளவனுக்கு நிதியுதவி அளித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

நீதிக்கட்சியில் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னாளில்  அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த தோழராய் அவரோடு நெருக்கமாக அரசியல் களம் கண்டு, அவருடைய ‘ஹோம்லேண்ட்’ ஆங்கில  இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்று அரும்பணியாற்றிய கிள்ளிவளவன் பெருந்தலைவர் காமராஜரால்  ஈர்க்கப்பட்டு  காங்கிரஸ் பேரியக்கத்திற்காகத்  தன்னை முற்றாக அர்ப்பணித்துக் கொண்ட தனித்துவம் மிக்க  நெறிசார்ந்த அரசியல்வாதி ஆவார் .

வாழப்பாடி இராமமூர்த்தி முதல் பழ. நெடுமாறன் வரை இவருடைய ஆழ்ந்தகன்ற அரசியல் அறிவில் பெரிதும்  ஈடுபாடு  கொண்டவர்கள்.

சுயநலச் சிந்தனையுடன் பொது வாழ்க்கையில் வலம்  வரும்  போலித்தனமும் பொய்ம்மையும்  நிறைந்த மலினமான மனிதர்களுக்கு நடுவில்,  தனக்கென்று எதையும் பெரிதாக எதிர்பாராமல்  தன்  தெளிந்த அரசியல் ஞானத்தைத் தான் நெஞ்சில் நேர்ந்து கொண்ட தலைவர்களுக்காகவும் இயக்கங்களுக்காகவும் அர்ப்பணித்த அரிய  மனிதர் கிள்ளிவளவன்.

அரவணைப்பின்றி வயோதிகத்தில் நோயுற்று வாடும் அவருடைய நிலையறிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அன்புடன் உதவிக்கரம் நீட்டி அவரது பெயரில் ஐந்து இலட்சம் ரூபாயை  டெபாசிட் செய்ததுடன், உடனடி செலவுக்காக ரூ.5000/- அளித்திருப்பதும்,  அமைச்சர்களை நேரிடையாக அனுப்பி வைத்து ஆறுதல் வழங்கி இருப்பதும் பாராட்டுக்குரிய பண்பு நலனாகும்.

முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட்ட ஒரு மூத்த காங்கிரஸ் தலைவருக்கு உள்ளம் கனிந்து உதவிக்கரம் நீட்டிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு காந்திய மக்கள் இயக்கம் தன்  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.