ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துள்ள இளைஞர்கள், சிறுவர்கள் பல கொலைகளை செய்து வரும் தகவல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளின் தலையை துண்டித்து கொடூரக் கொலைகளைச் செய்து வருகின்றனர். அந்த இயக்கத்தில் சிறுவர்களை அதிக அளவில் சேர்த்து பயிற்சி அளித்தும் வருகின்றனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தில் உளவு பார்த்த குற்றத்துக்காக முகமது சயீத் இஸ்மாயில் முஸல்லம் என்ற பிணைக்கைதியை, 10 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லும் கொடூரக் காட்சி இடம் பெற்றுள்ள வீடியோவை ஐஎஸ் இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் காவி நிற உடை அணிந்த முகமது சயீத் இஸ்மாயில் முசல்லம் முழங்காலிட்டபடி அமர வைக்கப்பட்டுள்ளார். அவர் முன்பு நிற்கும் பத்து வயதுச் சிறுவன் கையில் துப்பாக்கி உள்ளது. அவன் அருகே நிற்கும் ஒரு பயங்கரவாதி பிரெஞ்ச் மொழியில் பேசுகிறான். பிரான்சில் உள்ள யூதர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்துப் பேசுகிறான். சற்று நேரத்தில் அந்தச் சிறுவன் முஸல்லம் தலையில் துப்பாக்கியால் சுடுகிறான். இதுபோன்று 4 தடவை சுட்டவுடன் பிணைக்கைதி முசலாம் இறந்து தரையில் சாய்கிறார். இந்த வீடியோ காட்சி இப்போது உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
