’ராக் அண்ட் ரோல்’ டான்ஸுக்கு அடிமையான கிளியின் நடனம் யுடியூபில் உலா வருகிறது. எல்விஸ் ப்ரெஸ்லியின் இசைக்கு ரசிகர்கள் பலர் அடிமையானதுபோல், காக்ட்டூ என்ற பறவையும் அடிமையாகியுள்ளது. அவரது இசைக்கு அந்தப் பறவை போடும் குத்தாட்ட டான்ஸ் வீடியோ யூடியூபில் ஹிட் அடித்துள்ளது. வீடியோவில், கிளி இனத்தைச் சேர்ந்த காக்ட்டூகளின் உரிமையாளர் ஒருவர் கிடார் இசைத்தபடி எல்விஸ் பிரெஸ்லியின் பாடலைப் பாட… ஒரு காக்ட்டூ எந்த உணர்வுமின்றி இருக்க, மற்றொரு காக்ட்டூ முதலில் இசைக்கு ஏற்ப தனது தலையை அசைக்கிறது. சற்று நேரத்தில் தனது தோகையை சிலுப்பியபடி உற்சாக நடனம் ஆடுகிறது. இந்தக் காட்சி இப்போது யு டியூபில் பிரபலம். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=CEQuDyuQFKE
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்த ஹைதராபாத் பொறியாளர் பலி
ஹைதராபாத்: ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிரியாவில் நடந்த போரில் உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான பொறியியல் பட்டதாரி முகம்மது ஹனீப் வாசீம். இவர், நவம்பர் 2014-ம் ஆண்டு படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். பின்னர் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். பயஙகரவாத இயக்கத்தில் இணைந்து போரிட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில்தான் இவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தாராம். இந்நிலையில், மார்ச் மாதம் 15 ஆம் தேதி, அங்கே நடைபெற்ற உள்நாட்டுப் போரில் வாசீம் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர், கடந்த பிப்ரவரியில் தனது சகோதரி திருமணத்துக்காக கடைசியாக வீட்டுக்கு வந்தாராம். வாசீம், கரீம்நகரைச் சேர்ந்த மற்றொரு இளைஞரையும் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்க்க அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்தில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் அபு அக்பர் அல்-பகாதியின் பேச்சைக் கேட்டு, இந்திய இளைஞர்கள் சிலர் அந்த இயக்கத்தில் இணைய முயற்சி செய்த நிலையில், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆபாசப் படத்தில் நடித்த ஆசிரியை: பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்
செக் குடியரசு நாட்டில், ஆசிரியை ஒருவரின் ஆபாசப் படம் இணைய தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பெற்றோர் கொடுத்த புகாரில் அந்த ஆசிரியை பள்ளி நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
செக் குடியரசு நாட்டின் செஸ்கா லிப்பா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றியவர் லூசி. 35 வயதான இவர், ஆண் ஒருவருடன் ஆபாசப் படத்தில் நடித்த 40 நிமிட காட்சி இணைய தளத்தில் வெளியானது. அந்த வீடியோவில் திடகாத்திரமான இளைஞருக்கு எண்ணெய் தேய்த்துவிட்டு அவருடன் லூசி ஆபாசமாகத் தோன்றிய வகையில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றன.
40 நிமிடம் ஓடும் அந்தக் காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது. அதனை அவர் பணியாற்றும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களுமே அதிகம் பார்க்கும் படி ஆனது. இதனிடையே இந்தக் காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தனர். இதையடுத்து அந்த ஆசிரியை பள்ளி நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த லூசி , “நான் எந்தத் தவறும் செய்யவில்லை. விளம்பரப் படத்தில் நடிக்க அழகான முகம் கொண்டவர்கள் தேவை என ஒரு விளம்பரம் வந்தது. அதைப் பார்த்து, வருமானம் கிடைக்கும் என்ற ஆசையில் அங்கே சென்றேன். ஆனால், அங்கே எனக்கே தெரியாமல், கோகைன் போன்ற போதைப் பொருளைக் கொடுத்து, என்னை பயன்படுத்திக் கொண்டனர். சுய உணர்வுடன் இருந்திருந்தால் நான் அவ்வாறு நடந்து கொண்டிருக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார். ஆனால் இவரது விளக்கத்தை பள்ளி நிர்வாகமோ பெற்றோரோ ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. பள்ளி ஆசிரியை ஒருவரே ஆபாசப் படத்தில் நடித்து மாணவர்கள் மத்தியில் காட்சிப் பொருளானது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் கைதான கேரள மாவோயிஸ்டுகள்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
கோவை: கோவையில் நேற்று கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் 5 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களிடம் உளவுத்துறை டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி, கியூ பிரிவு எஸ்.பி. பவானீஸ்வரி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை அருகே கருமத்தம்பட்டியில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர்கள் 5 பேரிடம் இருந்து 27 செல்போன்கள், டேப்லெட், பென் டிரைவ், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 50 ஆவணங்களும் சிக்கியுள்ளன. மேலும் தென் மாநில எல்லைப் பகுதிகளைக் குறிக்கும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்து அவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன், கோவை எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பை தீ வைத்துக் கொளுத்தியும், வனப் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் அட்டகாசம் செய்தனர் மாவோயிஸ்ட்கள். இந்நிலையில், கேரளாவில் மாவோயிஸ்ட்களைப் பிடிக்க போலீசார் சோதனையைத் தீவிரப்படுத்தினர். தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்குவதாகவும் தமிழக போலீசார் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள போலீசார் தமிழக போலீஸாரிடம் தகவல் கொடுத்தனர். இதனால், தமிழக போலீசார் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கியூ பிரிவு போலீசாரும் மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் பதுங்கி இருப்பதாக தமிழக கியூ பிரிவு போலீசார் மற்றும் ஆந்திர மாநில சிறப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை கருமத்தம்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தபோது, கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் காரில் வந்த 5 பேர் தாங்கள் வந்த காரை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தமிழக கியூ பிரிவு போலீசாரும், ஆந்திர மாநில போலீசாரும் துப்பாக்கி முனையில் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். தங்களை போலீசார் அடையாளம் கண்டுகொண்டனர் என்பதை அறிந்த அவர்கள் 5 பேரும் கோஷம் போட்டபடி போலீசாரிடம் சரணடைந்தனர். அவர்கள் கேரள மாவோயிஸ்ட்கள் என்றும், அவர்களில் ஒருவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுத் தலைவர் என்றும் தெரியவந்தது. அவர் பெயர் ரூபேஷ் (40) என்றும், கேரள மாநிலம், திருசூரைச் சேர்ந்த அவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவருடன் அவரது மனைவி சைனா என்ற திருசூரைச் சேர்ந்த பெண்ணும் பிடிபட்டார். மேலும், அனூப் (30), கண்ணன் (25) ஈஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கண்ணன், ஈஸ்வரன் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் தமிழகத்தில் பதுங்கியிருக்க இவர்கள் இருவரும் உதவியதாகத் தெரியவந்தது. கேரளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவை உருவாக்கி தீவிரமாக செயல்பட்டு வந்த ரூபேஷுக்குக் கீழ் 50க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களாக செயல்பட்டு வந்துள்ளனர். ரூபேஷ் சட்டம் படித்துள்ளார். பின்னர் இந்த இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் தீவிரவாதி சுந்தரி என்பவரும், ரூபேசின் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது. மாவோயிஸ்ட்கள் பிடிபட்டது குறித்து கேரளா மற்றும் ஆந்திர போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதை அடுத்து கேரள மற்றும் ஆந்திர போலீசார் கோவைக்கு விரைந்தனர். இதுகுறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. சங்கர் கூறியபோது, பிடிபட்ட தீவிரவாதிகள் 5 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் தொடர்பான விவரங்கள் விசாரணைக்குக் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கல்
விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை இன்று முதல் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 2015-16-ம் கல்வி ஆண்டுக்குரிய பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5-ம் தேதி முதல் கல்லூரி வேலை நாள்களில் காலை 10 மணியிலிருந்து வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் 27 ரூபாய். எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் ஜாதிச் சான்றிதழின் உண்மை நகலை எடுத்து வந்து காண்பித்து, சான்றிதழின் நகலைக் கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க மே 18-ம் தேதி இறுதி நாள். மாணவர் கலந்தாய்வு மே 21 தொடங்கி, மே 26-ம் தேதியுடன் முடிவடையும். இதனையடுத்து ஜூன் 2-ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.
அல் காய்தா மிரட்டல்: மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு அல் காய்தா பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ‘‘யுடியூப்’’ இணைய தளத்தில் சுமார் 9 நிமிடம் ஓடும் வீடியோவில் ஆசிம் உமர் என்பவன் இந்த மிரட்டலை விடுத்துள்ளான். பிரதமர் நரேந்திர மோடி பெயரைக் குறிப்பிட்டு, பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் மத்திய பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 தினங்களாக இது குறித்து ஆய்வு செய்யப்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி பங்கேற்கும் கருத்தரங்கங்கள், விழாக்களில் எத்தகைய பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிப்பது என்று மறு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அவர் தில்லியை விட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்லும் போது குறைந்தபட்சம் அவருக்கு 5 முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் செல்லும் பாதைகளில் கண்காணிப்பை இரட்டிப்பாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 9ஆம் தேதி கொல்கத்தாவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி பேலூர் மடத்துக்கு செல்ல உள்ளார். பிரதமர் மோடி கொல்கத்தாவில் இறங்கியதும் அவருக்கு சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய தில்லியில் இருந்து சிறப்பு கமாண்டோ படை நாளை மேற்கு வங்கம் செல்கிறது.
திருச்சி அருகே மணல் லாரிகளால் சாலை விபத்து: 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி
திருச்சியை அடுத்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்திலும், மணப்பாறை பகுதியிலும் மணல் லாரிகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை திருமயம் பகுதியில் 15 பேர், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கோயிலில் வழிபடச் சென்றனர். வழிபாட்டை முடித்து விட்டு, மாட்டு வண்டியில் வீடு திரும்பியபோது அவ்வழியாக வந்த மணல் லாரி ஒன்று மாட்டுவண்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியில், சாலையோரம் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்துகளில் காயம் அடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் அண்மைக் காலமாக நெருக்கடிகளுக்கு உட்பட்டு, அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கள மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முத்துக் கிருஷ்ணன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதேநாளில் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் நியாவிலைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சக்திவேல் என்பவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரிகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அரசு ஊழியர்களின் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. திருவாரூரில் தற்கொலை செய்து கொண்ட முத்துகிருஷ்ணன் அளித்த மரண வாக்குமூலத்தில் தமது உயரதிகாரியின் கொடுமையைத் தாங்க முடியாமல் தான் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல், தமது தற்கொலை முயற்சிக்கு அ.தி.மு.க. நிர்வாகியின் கொடுமையே காரணம் என்று சக்திவேல் தெரிவித்துள்ளார். அரசு பணிகளுக்கு இலக்கு நிர்ணயிக்காத அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் தங்களுக்கு மாதம் இவ்வளவு ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று ஊழலுக்கு இலக்கு நிர்ணயித்து உயரதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதால், உயரதிகாரிகளும் தங்களுக்கு கீழ் பணியாற்றுவோரை ஊழல் செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி, பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் அறிவொளி உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி நேரு உள்ளிட்ட பல அதிகாரிகள் தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அரசு அலுவலகங்களில் கடுமையான மன அழுத்தத்துடன் பணியாற்ற வேண்டியிருப்பதால் தூக்கமின்மை போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்ற அழுத்தம் சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு நிர்வாகம் சுமூகமாக நடைபெறத் தேவையான பணிச் சூழலை ஏற்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்யத் துடிக்கும் தமிழக ஆட்சியாளர்களால் அரசு நிர்வாகம் நாளுக்குநாள் சீரழிந்து வருகிறது. அமைச்சர்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் தங்கள் நிலையிலுள்ள அரசு ஊழியர்களை விதிகளை மீறி செயல்படும்படி மிரட்டுகிறார்கள். திருச்சி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி நேரு, கோவை நியாயவிலைக்கடை ஊழியர் சக்திவேல் ஆகியோர் அளித்த வாக்குமூலங்கள் இதை உறுதி செய்கின்றன. இதனால் ஒரு காலத்தில் வரமாக இருந்த அரசு வேலை சாபமாக மாறி வருகிறது. தமிழகத்தில் அதிமுக அரசு தற்கொலைகளின் அரசாக மாறி வருகிறது. இதேநிலை நீடித்தால் நேர்மையான, உண்மையான மனிதர்கள் எவரும் அரசு பணிக்கு வர மாட்டார்கள். ஏற்கனவே அரசு பணியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் கூட ஊழல்வாதியாக மாற நேரிடும் அல்லது கடுமையான மன அழுத்தத்தில் சிக்கி நடைபிணமாக வாழ வேண்டியிருக்கும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதற்காக, அரசு நிர்வாகத்தை வளைக்க நினைப்பவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், ஆளுங்கட்சி கவுன்சிலர்களாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசு நிர்வாகத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் எவரும் தலையிட மாட்டார்கள் என்று தமிழகத்தை ஆளும் கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினரின் குறுக்கீடுகள் ஒருபோதும் இருக்காது என்று அதிகாரிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மேதகு தமிழக ஆளுனர் அவர்கள் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, இதற்கு காரணமாக இருந்தவர்களையும் ஆளுனர் தண்டிக்க வேண்டும்
பேய் பட மவுசால் கோப்பெருந்தேவிக்கு கிராக்கி!
‘பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா போல இருந்தால், ‘கைநிறைய துட்டோடு போ… மனசு நிறைய சந்தோஷத்தோடு வா’ என்கிற அளவுக்கு காமெடி பேய்களை மட்டும் விழுந்துவிழுந்து ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். காஞ்சனா 2 ன் கலெக்ஷனை கேட்டால், ஆவியுலகமே ஸ்தம்பிக்கிற அளவுக்கு இருக்கிறது! ஒரு கோடி பணம் போட்டவர்களுக்கெல்லாம் நாலு மடங்கு ரிட்டர்ன் என்கிறார்கள் புள்ளிவிபர புலிகள்.
இந்த நேரத்தில்தான் காஞ்சனா 1 ல் நடித்தவர்களையும், காஞ்சனா 2 ல் நடித்தவர்களையும் சமீபத்தில் வெற்றி பெற்ற அரண்மனை படத்தில் நடித்தவர்களையும் தேடி தேடி பிடித்துப் போட்டு ‘கோப்பெருந்தேவி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சங்கர் பழனிச்சாமி. கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிறாடை மூர்த்தி, வடிவுக்கரசி என்று நீண்டு கொண்டே போகிறது நட்சத்திர கூட்டம்.
காமெடி, த்ரில், ஹிஸ்டாரிக்கல், என்று சிரிக்கவும் அதிரவும் காதலிக்கவும் கவலைப்படவும் வைப்பது மாதிரி ஏகப்பட்ட வர்ணங்களை குழைத்திருக்கிறாராம் சங்கர் பழனிச்சாமி. தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய புண்ணியவானும் இவர்தான். கிராபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கு. அதுக்காகவே இந்த படத் தயாரிப்புக்கு ரெண்டு வருஷம் எடுத்துகிட்டேன் என்கிறார். ஆராத்யா என்றொரு அட்டகாசமான லெக் பீஸ்சை கேரளாவிலிருந்து இறக்கியிருக்கிறார்கள். ஆரம்பகால நயன்தாராவை பார்த்த மாதிரியே இருக்கிறார் இவரும். படத்தில் இவர்தான் பேய்.
காஞ்சனா2 ன் வெற்றி ஆந்திராவிலும் தொடர்வதால், கோப்பெருந்தேவிக்கு தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் செம கிராக்கி. துட்டோடு கிளம்பி வரும் விநியோகஸ்தர்கள் துண்டு போட்டு இடம் பிடிக்கிற அளவுக்கு ஆர்வம் காட்டுவதால், படம் மே இறுதியில் வெளிவரலாம் என்கிறது கோடம்பாக்கத்து ஆவி.
தியேட்டர்ல ஒரு டிக்கெட்டோட ஒரு மந்திரிச்ச முடிகயிறையும் கொடுத்துட்டாங்கன்னா, ரசிகர்களுக்கு இன்னும் சவுரியமா இருக்கும்! https://www.youtube.com/watch?v=neX4B7Nvii0
சீன சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மோடி: சீ னப் பயணத்துக்கு முன்னேற்பாடு
பீஜிங்: பிரதமர் மோடி அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் சீன சமூக வலைதளமான சீனா வெய்போவில் முதன்முறையாக தனது கணக்கைத் தொடங்கி அதில் தனது கருத்தினையும் பதிவிட்டுள்ளார் மோடி. சீனா வெய்போ தளத்தில் 50 கோடி சீன மக்கள் பயன்பாட்டாளர்களாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த வலைத்தளத்தில் இணைந்துள்ள முதல் இந்தியத் தலைவராக அறியப் படுகிறார். இதில் அவர், ஹலோ சீனா! சீன நண்பர்களுடன் வெய்போ வழியாக கலந்துரையாட நான் முனைப்புடன் உள்ளேன் என சீன மொழியில் தனது முதல் பதிவை எழுதியுள்ளார். இதில் அவர் இணைந்து ஒரு மணி நேரத்தில் 7 ஆயிரம் பேர் இதனைப் பார்த்துள்ளனர். அவரது பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதில் பிளாக்கர் ஒருவர் மிக அழகாக இருக்கிறீர்கள் எனப் புகழ்ந்துள்ளார். வேறொருவர், வெய்போவிற்கு வந்துள்ள தங்களை வரவேற்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு பதிவில், மற்றுமொரு சர்வதேச பிரபலம் வெய்போவில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது பீஜிங் நகருக்கு அடிக்கடி சென்று வந்தார். தற்போது பிரதமராக வரும் மே 14 முதல் 16 வரை சீனாவுக்கு முதல் முறையாகச் செல்லவுள்ளார். மோடியின் சமூக வலைதளக் கருத்துப் பதிவு உலக அளவில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

