Home Blog Page 6039

நில நடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது: செயற்கைக்கோள் தகவல்

காத்மாண்டு: நேபாள தலைநகர் காட்மாண்டு அருகே கடந்த ஏப்.25 சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் நேபாளத்தையே உலுக்கிவிட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்துள்ளது நேபாளம். அங்கு இதற்கு முன்பும் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போது உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் அருகே நிலநடுக்கம் உருவாகியுள்ளது. பூமியின் மிகப்பெரிய 2 ராட்சத நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதிக் கொண்டதால் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 80 ஆண்டுகளில் ஏற்கெனவே உருவான நிலநடுக்கங்களை விட மிகப்பெரியதாகும். இந்த பூகம்பம் 20 அணுகுண்டுகள் வெடித்ததற்கு சமம் என தெரிவித்துள்ளனர் நிபுணர்கள். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வீசிய அணுகுண்டைவிட சக்தி வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரம் சுருங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த சென்டினல்- 1ஏ ராடார் செயற்கைக்கோள் கடந்த புதன்கிழமை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் பகுதி வழியாகச் சென்றபோது எவரெஸ்ட் சிகரத்தின் அளவு 2.8 செ.மீ., குறைந்துள்ளதை செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் தகவலை விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை இன்னும் சில வாரங்களில் அளிக்கும் என்று தெரிவித்துள்ளது.

​திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

a994b74ec437363d64f7a520e0610d3e - 2026 ​திருவரங்குளத்தில் அக்னி முதல் நாளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது இதனால் பெரும்பாலோனோர் தங்களது விவசாயத்திற்கு மழையை நம்பியுள்ளனர் இந்த சித்திரை மாதத்தொடக்கத்தில் ஓரளவு மழைபெய்தது இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர் அதன்பிறகு வெயில் சுட்டரித்தது அதைவிட புதுக்கோட்டை மாவட்டத்தில் தினந்தோறும் சராசரியாக 95முதல் 100டிகிரி வரை வெயில் அளவு இருந்தது என்பது குறிப்பிடதக்கது 4b7472e121873c1fa9213dc7ed3e7173 - 2026அதிக கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்தனர் ஆனால் இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பமாவதால் மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை வானிலை அறிக்கை மூலம் சொன்னவுடன் வயல்வெளிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் வானத்தையை தொடர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்கள் பிறகு 2.30முதல் வானம்மேகமூட்டத்துடன் காணப்பட்டதால்; சில விவசாயிகள் மழைவரவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு இருந்தனர் அதன்விளைவாக 2.45முதல் தொடங்கிய மழை 3.50வரை பெய்தது இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் அது மட்டுமல்ல திருவரங்குளத்தில் அனைத்து மதம் மற்றும் ஜாதியினர் குளிக்கும் குளமானது ஓரளவு நிறைந்தது செய்தி- பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை

வேலை கிடைத்தால் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்

  தமிழகத்தில் எந்த அரசு பணியில் சேரவேண்டும் என்றாலும் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் ஓதுக்கப்படும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக சில ஓன்றியங்களில் ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் போடப்பட்டன குறிப்பாக ஒரு ஓன்றியத்தில் 4பதவிகள் காலியாக இருந்தால் ஓரு பதவியை அமைச்சர் அல்லது மாவட்டச்செயலாளர் மற்றொரு பதவியை ஓன்றியக்குழுத்தலைவர் இன்னொரு பதவியை மாவட்ட கவுன்சிலர் அடுத்த ஓன்றை ஆணையர் ஆகிய நான்கு பதவிகளையும் பிரித்து எடுத்து பேரம் பேசப்படுகின்றது 3லட்சம் முதல் 7லட்சம் வரை கொடுத்தால் தான் வேலை நிட்சயம் இதனால் ஏழையாக இருப்பவர்கள் தகுதி இருந்தும் பணம் இல்லாமல் தடுமாறுகிறார்கள் அது போன்று தற்போது 22ம்தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஆய்வக உதவியாளர் பதவிக்கு 4362காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது அதற்கான விண்ணப்பங்களை 24ம்தேதி முதல் 6ம்தேதி வரைக்கும் பெறப்படும் வயது 18முதல் 35வயதுக்குள் இருத்தல் குறைந்தபட்ச பொதுக்கல்வி தகுதியான பள்ளியிறுதி வகுப்பு(இடைநிலைக்கல்வி)அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக்கல்வி சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3சதவீதம் இடஓதுக்கீடுவிதி ஆதரவற்ற விதவைகள் முன்னாள் இரானுவத்திற்கான நியமன ஓதுக்கீடு போன்றவைகள் இதற்கு பொருந்தும் என்றனர் இதற்கான விண்ணப்பம் பெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டன இதில் புதுக்கோட்டையில் பேராங்குளம் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி பெருங்ளுர் அரசு மேல்நிலைப்பள்ளி கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது ஆனால் விண்ணப்பம் முடியும் தேதியும் இன்னும் வரவில்லை தேர்வும் இன்னும் வரவில்லை ஆனால் பதவிக்கு பணம் எவ்வளவு என்பது நியமிக்கப்பட்டுள்ளது என்று பதிவு முடித்தும் வெளியில் வருபவர்கள் புலம்புகின்றனர் இது குறித்து திருவரங்குளத்தை சேர்ந்த இலக்கியா என்பவர் கூறியது:நான் மிகவும் கஸ்டப்பட்ட குடும்பத்தைச்சேர்ந்தவர் என்னுடைய அப்பாவும் நோய் அவதிப்பட்டு இறந்துவிட்டார் அம்மாவுக்கும் வேலைக்கு போவதற்கு உடல்சரியில்லை தங்கையும் படிக்கிறார் வேற உதவிக்கு ஆள்இல்லை என்ற காரணத்தினால் நான் தான் வேலைக்கு போகிறேன் அந்த ஊதியம் மாத செலவுக்கு போதுமானதாக இல்லை இந்த வேலை கிடைத்தால் நம்முடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆனால் மக்கள் பேசுவதைப்பார்த்தால் பணம்இல்லாமல் இந்த பதவியை வாங்கமுடியாது என்றே தோன்றுகிறது அதுவும் புதுக்கோட்டையில் மொத்தமே 176காலிப்பணியிடங்கள் தான் என்று அறிவித்துள்ளார்கள் நான் போய் ஒரு பள்ளியில் பதிவு செய்யும்போதே 1000க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றனர் குறைந்தபட்சம் புதுக்கோட்டையில் தேதி முடியும் தருவாயில் 1லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவுசெய்வார்கள் போல இருக்கின்றது தமிழக முன்னாள்; முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையீட்டு பணம் யாரும் பெறாமல் பதவிகளை வழங்குவதற்கு தயாராகவேண்டும் அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அதோடு சேர்ந்து மக்கள் மனதிலும் மக்கள் முதல்வர் மக்கள் முதல்வராகவே நீடிப்பார் என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை

உத்தம வில்லன் – திரை விமர்சனம்

கமல்ஹாசன் இந்தியாவே பிரமித்துப் பார்க்கும் சூப்பர் ஸ்டார்.  இவரின் மனைவி ஊர்வசி. இவருக்கு ஒரு ஆண்பிள்ளை. கமலின் மாமனார் விஸ்வநாத் என ஒரு குடும்பமாக வாழ, கமலுக்கு தன் பேமிலி மருத்துவரான ஆண்ட்ரியாவுடன் தொடர்பு இருந்து வருகிறது. இதனால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு எழ, ஜெயராம் ஒரு கட்டத்தில் கமலை சந்தித்து உங்களுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறார் என ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். இதைக் கேட்ட பிறகு எப்படி தூக்கம் வரும்? அவர் யார் என்று தேட பார்வதி மேனன் அறிமுகமாகிறார். கமலுக்கு திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கமலின் மாமனார் அவர் கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்கிறார். ஆனால், அவர் அதைச் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்கிறார். பார்வதி மேனன் கமலை ஒரு வில்லனாகவே பார்க்கிறார். இதற்கிடையில் கமலுக்கு உடல் நிலை சரியில்லாமல் இன்னும் சில நாட்களில் இறக்கப் போவதாக மருத்துவர்கள் கூற, அதற்குள் தன் ரசிகர்களுக்கு நல்ல ஒரு நகைச்சுவைப் படத்தை கொடுக்க வேண்டும் என தன் உண்மையான ஆசான் கே.பி.யிடம் கேட்கிறார். ஆனால், கே.பி.க்கும் கமலுக்கும் சற்று உரசல் முன்பே இருக்க, இதற்கு அவர் சம்மதித்தாரா? கமல் குணமானாரா? தன் பெண் பிள்ளையிடம் நற்பெயர் வாங்கினாரா? என்பதை மிகவும் உணர்ச்சி முடிச்சுகளாகக் கூறியுள்ளனர். உத்தமன் என்கிற எட்டாம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா ஹீரோவாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் கமல். கமல் ஒரு மகா கலைஞன் என்பதை இந்தப் படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஏதோ கெஸ்ட் ரோலில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோவார் என நினைத்து செல்பவர்களுக்கு, படம் முழுவதும்… முழுக்கவே வந்து இன்ப அதிர்ச்சி அளிக்கிறார் மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். படத்தில் தனியாக இவர்தான் நாயகி என்று யாரையும் சொல்லி விட முடியாது. முக்கியமான நான்கு பெண் கதாபாத்திரங்களுமே கதாநாயகிகள்தான். ஒருவர் கமல்ஹாசனின் கள்ளக் காதலி ஆன்ட்ரியா. இரண்டாமவர் கமல்ஹாசனின் மனைவி ஊர்வசி. மூன்றாமவர் கமல்ஹாசனின் மகள் பார்வதி. நான்காமவர் கமல்ஹாசனின் திரையுலக ஜோடி பூஜா குமார். அவரவர் கதாபாத்திரங்களில் நால்வருமே ‘நச்’ என்று நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசைப்புயலும், இசைஞானியும் சேர்ந்து செய்த கலவை போல் மனதை வருடி செல்கிறார். ஷம்தத்தின் ஒளிப்பதிவில் வரலாற்று காட்சிகள் அசத்தல்… கமல் ரசித்து எழுதிய திரைக்கதையை அப்படியே இம்மி பிசகாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். மொத்தத்தில் ‘உத்தமவில்லன்’ அனைவரும் ரசிக்கத்தக்க உத்தமமான வில்லன்…

உத்தமவில்லன்
உத்தமவில்லன்

தமிழக நதிநீர் பிரச்னைகளும், நதிநீர் இணைப்பு குறித்த புரிதல்களும்…

ksradhakrishnanதாமிரபரணி நதி தமிழகத்தின் நெல்லை மாவட்டம்  பொதிகை மலையில் உற்பத்தியாகி, 70மைல்தூரத்தில்  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக் காயலில்  வங்கக்கடலில் சேர்கின்றது. மற்ற நதிகளான காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில் அண்டை மாநிலங்களை நம்பிதான் கடைமடைப் பகுதியான தமிழகம் நீர்ப்பாசனம் பெற வேண்டும். இந்த நதிகள் மீது தமிழகத்திற்கு உரிமைகள் இருந்தும் அவை அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. தெற்கே குமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின் அணைக்கட்டு மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. தமிழகத்தின் முதல்வரான பெருந்தலைவர் காமராஜரும், கேரள முதல்வரான திரு.சங்கரும் இந்த அணையைத் திறக்கும் போது, “கேரள மக்களையும் தமிழக மக்களையும் பிரிக்க முடியாது, இடையில் மேற்குத் தொடர்ச்சி மலைதான் இருக்கின்றது, அதையும் மீறி நம்முடைய சகோதர பாசம் என்றும் அன்போடு நிலைத்திருக்கும் என்பதற்கு சாட்சியாக இந்த நெய்யாற்றின் இடதுகால் வலதுகால் பாசன வசதிகளை கேரளாவும் தமிழ்நாடும் உரிமையோடு  நாமிரு மாநிலங்களும் பகிர்ந்துகொள்வோம் என்று பேசிய பேச்சு இன்றைக்கு அர்த்தமில்லாமலும், எதார்த்தமில்லாமலும் போய்விட்டது. சிலர் புரிதல் இல்லாமலேயே செண்பகத்தோப்பு போன்ற அணைகள் கட்டினாலே முழுமையாக தண்ணீர்வரும் என்று சொல்கின்றனர். செண்பகத்தோப்பு அணை 1989ல் தி.மு.க ஆட்சியில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று தி.மு.கவிலிருந்த திரு.வை.கோ, அன்றைய நெல்லைமாவட்டச் செயலாளர் டி.ஏ.கே. லக்குமணன்,  அமைச்சர் தங்கவேலு மற்றும் நானும் மலையின் மேல் சென்று அந்த இடத்தையெல்லாம் ஆய்வு செய்து அணையும் கட்டப்பட்டது. கட்டப்பட்ட அணையில் இறுதிப்பணி முடிவு பெறுவதற்குள் 1991ல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1992-1993 காலகட்டங்களில் அந்த அணையின் கட்டப்பட்ட பகுதிகளை கேரளா அரசாங்கம் இடித்துத் தள்ளியது. இந்த விவகாரம் அன்றைக்கு  எந்தப் பத்திரிகையிலும் செய்தியாக வரவில்லை. அப்போது தொலைதொடர்பு ஊடகங்களெல்லாம் கிடையாது. செங்கோட்டை அருகே அடவிநயினார் அணை தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் மட்டும் தான் தண்ணீர் வரத்து வருகின்றது,  அணை நிரம்பி வழிகின்றது. மற்றகாலங்களில் அதிகமாக தண்ணீர் நிரம்புவது  கிடையாது. அதேபோல தான் நெல்லைமாவட்டத்தின் உள்ளாறு, செண்பகத் தோப்பு, விருதுநகர் மாவட்ட அழகர் அணை கட்டினால் மட்டும் போதாது. கேரளாவில் உள்ள நீர் வரத்தும் வந்தால் தான் இந்த அணைகளால் முழுமையாகப் பயன் பெற முடியும். ஆனால்,  மேலே குறிப்பிட்ட நெய்யாறு, நெல்லைமாவட்டத்தின் உள்ளாறு, அடவிநயினார் ,  செண்பகத் தோப்பு, விருதுநகர் மாவட்ட அழகர் அணை, முல்லைப்பெரியார், ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு -புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி ஆகிய நீராதாரப் பிரச்சனைகளில் கேரளா தமிழகத்தோடு ஒத்துப் போக மறுக்கின்றது. தமிழகத்தின் அண்டை மாநிலங்கள்  காவிரி, ஒகேனக்கல், பாலாறு, பெண்ணாறு பொன்னையாறு பிரச்சனைகளில் நமக்கு ஆதரவாக இல்லை. இந்த நிலையில் செண்பகத்தோப்பு, உள்ளாறு அணைகள்  கட்டிமுடிக்கப்பட்டாலும் நீர் நிரம்பவேண்டியது அவசியம் . அதற்கு கேரளம் ஒத்துக் கொண்டு தண்ணீர் வரத்தை தடைசெய்யக்கூடாது. 1983லிருந்து நதிகளை தேசியமயமாக்கப்பட்டு கங்கை, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறோடு இணைக்க வேண்டுமென்ற எனது பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம், “மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் கடமை என்று பார்க்காமல் அவசியம், அவசரமாக நாட்டின் நலனைக் கருதி நதிநீர் இணைப்பு வேண்டும் என்பதைப் புரிதலோடு நடவடிக்கை எடுக்கவேண்டும், அதற்கான குழு ஒன்றை அமைக்கவேண்டும்” என்று சொல்லியும் மன்மோகன்சிங் அரசு 2012பிப்பிரவரியில் அளித்த தீர்ப்பைக்கூட நடைமுறைக்குக் கொண்டு வராமல்இருந்தது. நானும் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கவேலுவும் அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரிஷ் ரவுத்தை சந்தித்துப் பேசி , “நீங்கள் குழுவை அமைக்கவில்லை என்றால் உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப் போகிறேன்” என்ற பிறகுதான் மன்மோகன் சிங் அரசு ஒப்புக்கு குழு ஒன்றை அமைத்தது.  அந்தக் குழுவும் செயல்படாமல் இருந்தது. கடந்த வருடம் பா.ஜ.க அரசு மோடி தலைமையில் அமைந்தபின் திரும்பவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி அவர்களைச் சந்தித்த பின் தான் பி.என் நவலவாலா தலைமையில் நதிநீர் இணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை செய்திகளாக, விளம்பரமாக வரவில்லை என்றாலும் எதோ ஒன்றைச் சாதித்தோம் என்ற மனதிருப்தி. தற்போது நதிநீர் இணைப்புப் பணிகளை முழுமூச்சாக இந்தக் குழு கவனிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் அமைத்த குழுவின் 80% பணிகள் முடிவுக்கு வந்து அது நிறைவு பெறாமலே காங்கிரஸ் அரசு முடக்கிவிட்டது. இதையெல்லாம் எனது கடந்த நதிநீர் இணைப்பு பற்றிய பதிவில் விரிவாகச் சொல்லியிருந்தேன். ** நதிநீர் இணைப்பு குறித்து விரிவான பதிவுகள். https://ksr1956blog.blogspot.in/2015/03/pamba-achankovil-vaippar-link.html https://ksr1956blog.blogspot.in/2015/04/river-linking-questions-and-supreme_15.html

செண்பகத் தோப்பு அணையை கட்டிவிட்டால் மட்டும் போதாது. அதற்கு நீர்வரத்து வரும் வகையில், அச்சன்கோவில் -பம்பை-வைப்பார் இணைப்பும்  கேரளாவில் மேற்குநோக்கிப் பாயும் நதிகளை கிழக்கே திருப்பினால் தான் இந்த அணைகள் கட்டினாலும் நீர் வரத்து வந்து அதனால் பாசன வசதி கிடைக்கும் என்பது புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும். நீர்வரத்து இல்லாமல்  அணைகளைக் கட்டி என்ன பயன். இதுகுறித்து பி.என் நவலவாலா குழுவுக்கு தங்கள் கருத்துகளை எழுதி பதிவு செய்யவேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். இன்னொரு வேதனையான விசயம் என்றால் இந்த நவலவாலா குழுவின் முழுப்பயனும் தமிழகத்துக்குத்தான் வருகின்றது. இந்தக்குழுவை ஒடிசா, கேரளா, கர்நாடகா போன்ற அரசுகள் எதிர்க்கின்றது.  ஆனால் இந்தக் குழுவைப் பற்றி எந்த செய்தியும் தமிழ்நாட்டின் செய்தித்தாள்களில் இடம்பெறவில்லை என்பது கொடுமையான விஷயமாகும். தினமணி மற்றும் ஆங்கில இந்து மற்றும்  ஏட்டில் 7வது அல்லது 8வது  பக்கத்தில் மட்டும் தான் செய்தியாக வந்தது. நடிகை திரிஷாவுக்குத் திருமணம் நடக்குமா என்பதைப் பெரிய செய்தியாகக் வெளியிடுகின்றார்கள். தமிழ்நாட்டின் நலன் கவனிக்கப்படவேண்டிய செய்தியில் அக்கறையில்லாமல் பத்திரிகைகள் இருப்பது வெட்கக்கேடான அவமானமான விஷயமாகும்.  குறைந்தபட்சம் இந்தப் பதிவைப் படித்தவர்களாவது தங்களுடைய நண்பர்களிடம் பகிர வேண்டுகிறேன். பி.என். நவலவாலா  குழுவுவிடம் பதிவு செய்யவேண்டியவை 1.  அனைத்து நதிகளும் தேசியமயமாக்கப்படவேண்டும். 2.   கங்கை காவேரி வைகை தாமிரபரணி நெய்யாற்றோடு இணைத்து கேரளாவில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கிழக்கே திருப்பினால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பயன்பெறும். 3.   கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பையை தமிழக வைப்பாற்றோரு இணைக்கவேண்டும் போன்ற முக்கிய பிரச்சனைகளைக் குறித்து இந்தக் குழுவிடம் நிறைவேற்றப்படவேண்டுமென்று மனுக்கள் அனுப்ப வேண்டும் . இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் தான் நீர்வரத்து வரும் என்ற புரிதலோடு நாம் கடமையாற்ற வேண்டும்.
(https://ksr1956blog.blogspot.in/2015/05/river-linking-and-water-resources.html) -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

ஜெயலலிதா தப்ப முடியாது; மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும்: சுப்பிரமணிய சாமி

subramanian-swami கோவை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தப்ப முடியாது, அவரது மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. பாஜக.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி இன்று கோவைக்கு வந்திருந்தார். அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்ப முடியாது. வழக்கு வலுவாக உள்ளது. மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர், இத்தனை சொத்துக்களை எப்படி வாங்க முடியும்? எனவே அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்று கருதுகிறேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கருணாநிதியின் குடும்பம், மாறன், ப.சிதம்பரம் என எல்லோரும் சிறைக்குச் செல்வது உறுதி. வழக்கு விசாரணை சற்று தாமதமாகலாமே தவிர வழக்கில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதிமுக., திமுக., இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒன்றுதான். நாட்டுக்கு துரோகம் செய்வது, ஊழல் செய்வதுதான் அவர்களின் கொள்கை. நிலம் கையகப்படுத்தும் சட்டம், சாலைப் பாதுகாப்புச் சட்டம், புதிய காப்பீட்டு மசோதா போன்றவற்றுக்கு எதிர்ப்பு இருந்தாலும், மெஜாரிட்டி பலம் இருப்பதால், அவற்றை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக., தேமுதிக., கூட்டணி அமையுமா என்பதை இப்போது கணிக்க வேண்டியதில்லை. அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது. தமிழகத்தில் பாஜக., தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது எனது விருப்பம். தாலி என்பது தேசத்தின் கலாசாரம் தொடர்புடையது. அதனை அகற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீதும் தாலியை கழற்றியவர்கள் மீதும் தேசத் துரோக வழக்கு தொடரவேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போதைய தமிழக அரசு அதன் மீது அக்கறை காட்டவில்லை – என்று கூறினார்.

வணிகவரித் துறை அதிகாரிகளிடமிருந்து வணிகர்களைப் பாதுகாக்க ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வணிக வரித் துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளில் இருந்து வணிகர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது…. தமிழகத்தில் வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும் போது, ஏற்கனவே செலுத்திய வரித் தொகையையும் அவற்றுக்கான தண்டத் தொகையையும் சேர்த்து கட்ட வேண்டுமென்று வணிக வரித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், அவர்கள் பிறப்பிக்கும் ஆணைகளுக்கு எதிராக வணிகர்கள் அளிக்கும் பதிலை ஏற்க மறுப்பதாகவும் செய்திகள் வருகின்றன. வணிகர்கள் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்றால், 25 சதவிகிதத் தொகையினை முன்கூட்டியே செலுத்த வேண்டிய சங்கடமான நிலை மதிப்புக் கூட்டுவரி சட்டத்தின்படி இருந்து வருகிறது. அப்படி மேல்முறையீடு செய்யும் வணிகர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடைகளை மூடி, தொழிலை கைவிட்டு விட வேண்டிய அவலநிலைக்கு ஆளாகிறார்கள்.மேல்முறையீட்டு செய்யும் வணிகர்கள் 25 சதவிதத் தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டும், அதன்படி வணிகர்கள் நலன் கருதி, அரசு இதுவரை பரிவோடு பரிசீலனை செய்யவில்லை. வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தேச வரிவிதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கற்பனையான காரணங்களைக் காட்டி வரிவிதிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.இயற்கை நீதிக்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படும் பாதிப்புகளையும், வணிகர்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்களையும், தமிழக அரசு அனுசரணையோடு ஆய்வு செய்து, வணிக வரித் துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளிலிருந்து பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

தமிழகத்தில் வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும் போது, ஏற்கனவே செலுத்திய வரித் தொகையையும் அவற்றுக்கான தண்டத் தொகையையும… Posted by M. K. Stalin on Monday, May 4, 2015

ஆட்சிக்கு வந்ததும் பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைந்ததும், பத்திரிகையாளர்கள், பத்திரிகை நிறுவனங்கள் மீதான அவதூறு வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாடப் படும் மே 3 ஆம் தேதி நேற்று, மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் பக்கத்தில் பதிவு செய்த கருத்து: சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமான மே 3 ஆம் தேதி ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு ஜனநாயகத்தை மிளிர வைத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகை நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அவர்களின் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் செலுத்தி வருகிறோம். அரசியலும், அரசியல் நடவடிக்கைகளிலும் உள்ள குற்றங்குறைகளைச் சுட்டிக் காட்டும் பத்திரிக்கைகளின் பணி மிக முக்கியமானது என்பது மட்டுமின்றி அதை எதைக் கொண்டும் அளவிட முடியாது. மக்கள் தங்களுக்குத் தேவையான, சரியான, உண்மையான தகவல்களைப் பெறுவதற்கு வழிகாட்டியாக இருப்பதே பத்திரிக்கைகளின் மிகப் பெரிய பொறுப்பு. பத்திரிகையாளர்களின் மீது திமுக மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த வகையில், திமுக எப்போதும் பத்திரிக்கையாளர்களின் மீது அன்பு செலுத்தி நம்பிக்கையும் கொண்டிருக்கிறது. அவர்களின் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்திருக்கிறது. அவர்கள் சொல்லும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் நெருக்கடி நேரங்களில் எல்லாம் மதித்து நடந்திருக்கிறது. சாதாரண மக்கள் விரும்பும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் உருவாக்குவதில் பத்திரிகைகள் முக்கியப் பணியாற்றுகின்றன என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் கருதித்தான் நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய தலைவர்கள் “அரசியல் சட்டப்பிரிவு 19 ல் வழங்கியுள்ள ஆறு சுதந்திரங்களில் ஒன்றாக பத்திரிகைச் சுதந்திரத்தையும் சேர்த்திருக்கிறார்கள்” என்பதை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும். இப்போது நடைபெறும் அதிமுக ஆட்சியில் நூற்றுக் கணக்கானமான மான நஷ்ட வழக்குகளைப் பதிவு செய்து பத்திரிகையாளர்களையும், பத்திரிகை நிறுவனங்களையும் மிரட்டிக்கொண்டுள்ளது. இவைகளுக்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில், வரும் 2016 ஆம் வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அந்த மானநஷ்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு, பத்திரிகைகளின் சுதந்திரம் மீட்கப்படும் நல்ல நிலை உருவாகும் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்.  

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு ஜனநாயகத்தை மிளிர வைத்திருக்கும் பத்திரிக்கையாளர்களு… Posted by M. K. Stalin on Sunday, May 3, 2015

விமானம் வெடிக்கும் எனக் கூறிய பயணியால் பரபரப்பு: ஏர் அரேபியா அவசரத் தரையிறக்கம்

Air-Arabia-Aircraftதுபை: விமானம் வெடிக்கப் போகிறது என்று பயணி ஒருவர் கூறியதால், விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த ஏர் அரேபியா நிறுவன விமானம் குவைத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏர் அரேபியா நிறுவனத்தின் ஜீ-9128 விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், திடீரென விமானம் வெடிக்கப் போவதாகக் கத்தினார். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்காவின் மத்தியக் கிழக்குப்பகுதியில் அமைந்த அல் மிஹாத் ராணுவத் தளத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவித்த அல் மிஹாத் விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள் “விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, உயர் அதிகாரிகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என கூறியுள்ளனர்.

பங்குச்சந்தை அபாரம்: சென்செக்ஸ் 500 புள்ளிகள், நிப்டி 150 புள்ளிகள் உயர்வு

மும்பை: பங்குச் சந்தை இன்று அபாரமாக உயர்வைச் சந்தித்தன. வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை தொடக்கம் முதலே உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் வரையிலும் உயர்வு கண்டது. கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு இரு பங்குச்சந்தைகளும் உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளி அன்று 27,011.31 என்ற புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ், இன்று 27,537.85 புள்ளிகளாக அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 8,181.50 என்ற முந்தைய நிறைவுப் புள்ளியிலிருந்து 8,346.00 புள்ளிகளாக உயர்ந்தது.