Home Blog Page 6040

14 வயது சிறுமி பலாத்காரம் செய்து கர்ப்பம்: 70 வயது முதியவர் கைது

திருச்சி: திருச்சி அருகே 14 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து, கர்ப்பம் உண்டாக்கிய 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவரது சொந்த ஊர் திருப்பூர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 14வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அந்தச் சிறுமி, தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அந்தச் சிறுமி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை ஞாயிற்றுக்கிழமை நேற்று கைது செய்தனர். அந்தச் சிறுமி தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அல் காய்தா கொலை மிரட்டல்

புது தில்லி: இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்தப்படும் என அல்கொய்தா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஒன்பது நிமிடங்கள் ஓடும் வீடியோ காட்சி ஒன்றை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் இந்தியப் பிரிவு தலைவரான ஆசிம் உமர் என்பவர் இதில் பேசியுள்ளார். உலக வங்கி, ஐஎம்எப் மூலமாக இஸ்லாமியர்களை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தாக்கி வருவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக இஸ்லாமியர்களின் எதிரி மோடி என்றும் அல் காய்தா குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து ரா அமைப்பு இந்த வீடியோ செய்தி குறித்த விசாரணையில் இறங்கியுள்ளது. இந்த வீடியோவை அல் கொய்தா ஆதரவு இணையதளமான அல் சஹாப் வெளியிட்டுள்ளது

6 வயதுச் சிறுமி 16 வயதுச் சிறுவர்களால் பலாத்காரம்: பெங்களூரில் கொடூரம்

பெங்களூரு: பெங்களூரின் புறநகர்ப் பகுதியான பன்னரகட்டாவில் 6 வயதுச் சிறுமி ஒருவள், தனது சகோதரனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளிச் சிறுவர்கள் சிலர் சிறுமியை ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வைத்து அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனிடையே தன்னுடன் விளையாடிக் கொண்டிர்ந்த அந்தச் சிறுமி திடீரெனக் காணாததால், பயந்து போன அவளது சகோதரன் அந்தப் பகுதியில் தேடியுள்ளான். அப்போது பள்ளிச் சிறுவர்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து ஓடிச் சென்று தனது தாத்தா பாட்டியிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டுள்ளர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதை அடுத்து, பெங்களூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரும் சிறுவர்கள் என தெரிய வந்ததையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களின் விசாரணையில் ஒரு சிறுவன் அகப்பட்டான். தப்பியோடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

பெண்ணுடன் தகாத உறவு: புகாரில் உண்மையில்லை என்கின்றனர் இருவரும்!

புது தில்லி : மக்களவைத் தேர்தலின் போது அமேதி தொகுதியில் போட்டியிட்ட குமார் விஸ்வாசுக்கு, அந்தக் கட்சியின் மகளிர் அணித் தொண்டர் ஒருவருடன் உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குமார் விஸ்வாஸ் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டதாக அந்தப் பெண் தில்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நீதி கேட்டு கடிதம் எழுதினாராம். அதே நேரம் அஜய் வஹ்ரா என்பவரும் குமார் விஸ்வாஸ் அந்தப் பெண் ஏமாற்றி விட்டதாகவும், இந்தக் கள்ளக் காதல் விவகாரம் விஸ்வாசின் மனைவிக்கும் தெரியும் எனவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு குமார் விஸ்வாசுக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும், குமார் விஸ்வாஸ் உடன் தமக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை என பாதிக்கப்பட்ட பெண் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை குமார் விஸ்வாஸ் விளக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், குமார் விஸ்வாஸ் தாமாக முன்வந்து உண்மையை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தகாத உறவு புகார் தொடர்பாக குமார் விஸ்வாஸ் மட்டுமின்றி, அவரது மனைவியும் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தன் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள குமார் விஸ்வாஸ், ஆம் ஆத்மி கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட சதி வேலை இது எனக் குறிப்பிட்டார்.

ரோஹித் சர்மாவும் விரைவில் காதலியை மணமுடிக்கிறார்

rohith-sharma இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மாவும் விரைவில் தனது காதலியை மணம் முடிக்க இருக்கிறார். தோனி, ரெய்னாவைத் தொடர்ந்து, தனது காதலியை கரம் பற்றி, ரோஹித்தும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர் தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும், ஐபிஎல் மும்பை அணியின் கேப்டனாகவும் திறம்பட செயலாற்றி வருகிறார். இந்நிலையில் ரோகித் சர்மா தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார். இதுவரை தனியாளாக வலம் வந்துகொண்டிருந்த ரோஹித் சர்மா விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து ஜோடியாகவுள்ளார். ரோஹித்தின் காதலி பெயர் ரித்திகா சஜ்தே. கடந்த சில ஆண்டுகளாகவே ரோகித் சர்மாவின் விளம்பர மேலாளர் பணியை அவர் திறம்பட நிர்வகித்து வருகிறார். தொடக்கத்தில் நட்பாக இருந்த இவர்களது பந்தம் பின்னாளில் காதலாக மாறியதாம். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமண தேதியை அறிவிப்பேன் என ‘டுவிட்டரில் தகவல்’ தெரிவித்துள்ளார் ரோஹித் சர்மா.

சுஷ்மா ஸ்வராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்ட முடிவு

ராமேஸ்வரம்: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீனவர் சங்கங்களின் அவசரக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முழு அடைப்புக்கு ஆதரவு தருமாறு வரும் 15-ஆம் தேதிக்குப் பின்னர் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவது என அந்த சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அண்மையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தில்லியில் வைத்து சந்தித்தனர். அப்போது தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக எல்லை தாண்டிச் செல்லக் கூடாது என்று அவர் எச்சரித்தார். எல்லை தாண்டும் மீனவர்களால் இந்தியா – இலங்கை இடையே பிரச்னை அதிகரிப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும், எல்லை தாண்டிச் சென்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு அதற்குப் பொறுப்பாகாது என்றும் தம்மைச் சந்தித்த மீனவர்களிடம் அவர் தெரிவித்திருந்தார். சுஷ்மா ஸ்வராஜின் இந்தப் பேச்சைக் கண்டித்து, மீனவர் சங்கங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு யசோதா பென் மனு

yashoda-benஆமதாபாத்: தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு மோடியின் மனைவி யசோதா பென் மீண்டும் மனு அளித்துள்ளார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் யசோதா பென்னுக்கு துப்பாக்கி ஏந்திய 10 வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாநில தகவலறியும் அலுவலகத்தை யசோதா பென் அணுகியுள்ளார். அவர் சார்பில் வழக்கறிஞர் சம்மித் இரண்டாவது முறையாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு வழங்குவதற்கான அரசு ஆணையை தம்மிடம் வழங்குமாறு கேட்டுள்ள அவர், இது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்திரா காந்தி தனது பாதுகாப்பு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் அந்த மனுவில் யசோதா பென் தெரிவித்துள்ளார். 2014 நவம்பரில் இது போன்ற மனுவை அவர் தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் மாநில போலீசாரிடம் விளக்கம் கேட்ட மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் 4 மாதத்திற்கு பின்னர் மீண்டும் அவர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்கே வாங்கி இங்கே விற்று மறைமுக கொள்ளை; முதல்வர் தலையிடாவிடில் போராட்டம்: ஆவின் குறித்து கருணாநிதி

சென்னை: பால் உற்பத்தியாளர்களிடம் வாங்காமல் அவர்களை தனியாரிடம் பாலை விற்பதற்கு கட்டாயத்தை ஏற்படுத்தி, தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு வாங்கி, ஆவினில் மறைமுக கொள்ளை நடக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயம் கிடைக்க உதவிக் கரம் நீட்ட அரசு தவறுமேயானால், அதனைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: “தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 30 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இது தவிர அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் விற்பனைக்காகப் பால் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அரசின் ஆவின் நிர்வாகம், பால் கொள்முதலில் ஏற்கனவே செய்து கொண்டிருந்த அளவை விடத் தற்போது சுமார் 15 சதவிகிதம் குறைத்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 25.12 லிட்டர் பாலை மட்டுமே ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறதாம். இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுவதுமாக விற்க முடியாமலும், பாதுகாத்திட வழி இல்லாமலும் நட்டத்தை அடைகிறார்கள். ஆவின் நிர்வாகத்தில் இதுபற்றி ரகசியமாக விசாரித்த போது, தற்போதைய கோடை காலத்தில் பாலைச் சேமித்து வைக்க செலவு அதிகமாகும் என்பதால், அதனால் ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, பால் கொள்முதலைக் குறைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அதன்படி பால் கொள்முதல் செய்வதைக் குறைத்திருப்பதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, பால் உற்பத்தியாளர்கள் சுமார் நான்கு இலட்சம் பேர் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை விற்பனை செய்கின்ற நிலையில், தமிழகத்தில் பால் உற்பத்தி பெருமளவு அதிகரித்தும், அதனை முழுமையாக விற்பனை செய்ய வேறுவழியின்றி பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க மறுக்கின்ற ஆவின் நிர்வாகம், சில தனியார் பால் விற்பனையாளர்களைத் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் இணை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டு, அவர்களிடமிருந்து லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் விலை கொடுத்து வாங்குகின்றது. அதன் மூலம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், நிர்வாகத்திலே இருப்பவர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள் என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பாலின் தரத்தைப் பற்றியும் வேண்டுமென்றே குறை கூறி ஆவின் நிர்வாகம் உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக்கொள் முதல் செய்ய மறுப்பதைக் கண்டித்து அவர்கள் ஆங்காங்கு போராட்டமும் நடத்தி வருகிறார்கள். ஆவின் நிர்வாகம் பாலை வாங்க மறுப்பதால், உற்பத்தியாளர்கள் அதனைக் குறைந்த விலைக்கு சில தனியார்களிடம் விற்றுத் தீர வேண்டிய கொடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு குறைந்த விலைக்கு வாங்கும் தனியார்களே, மீண்டும் ஆவின் நிர்வாகத்திற்கே இரு தரப்பினரும் செய்து கொண்டிருக்கும் மறைமுக ஒப்பந்தத்தின்படி கூடுதல் விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆவின் நிர்வாகத்தின் இத்தகைய அட்டூழியச் செயல்களைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன அறிக்கைகள் வந்துள்ளன. எனவே ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகின்ற இந்த அரசு, மற்றப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைப்பதைப் போல பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையையும் கருதக்கூடாது. உடனடியாகத் தலையிட்டு பால் உற்பத்தியாளர்களின் அவலத்தை அகற்றுவதற்கு உதவிக் கரம் நீட்டத் தவறுமேயானால், அதனைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயம் கிடைத்திடவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பால் கொள்ளை போகும் கொடுமையைத் தடுத்திடவும் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அளவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த ஆட்சியினருக்கு முன்னெச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு கொண்டு வர நடவடிக்கை

புதுதில்லி: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யும் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகாரிகள் சஸ்பெண்ட் விவகாரத்தில் இனி மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. இதற்கான கட்டுப்பாடுகளை விதிக்கவும், புதிய விதிமுறைகளை கொண்டு வர உள்ளது மத்திய அரசு. பல மாநிலங்களில் அரசுக்கு சாதகமாக நடக்காத அல்லது நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ் அதிகாரிகள் பலர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதோடு சஸ்பெண்ட் அல்லது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. வட மாநிலங்களில் அசோக் கேம்கா, துர்கா சக்தி நெய்பால், குல்தீப் நாராயண் போன்ற மூத்த அதிகாரிகள் பலர் அடிக்கடி இடமாற்றம், சஸ்பெண்ட் போன்றவற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதை அடுத்து, இந்தப் பிரச்னையை மத்திய அரசுக்கு மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அரசியல் நோக்கத்துக்காக அகில இந்தியப் பணி அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தடுக்கும் விதமாக, ஒரு அதிகாரியை ஒரு வாரத்துக்கு மேல் சஸ்பெண்ட் செய்ய முடியாது; சஸ்பெண்ட் செய்த 48 மணி நேரத்துக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: ஒரு வாரத்துக்கு மேல் சஸ்பெண்ட் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமானால், உரிய காரணம் அளிக்க வேண்டும்; மத்திய சிவில் சர்வீசஸ் வாரியம் அல்லது மத்திய ஆய்வுக் குழு இதை பரிசீலித்து அனுமதி தர வேண்டும். இல்லாவிடில் சஸ்பெண்ட் ரத்தாகிவிடும். ஓர் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவதை உறுதி செய்ய, 30 நாளுக்குள் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வகுத்து, அந்த விதிமுறைகள் அனைந்திந்திய சேவைகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) திருத்தச் சட்டத்தின் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அதிகாரியை மாநில அரசுகள் பழிவாங்குவதோ, அல்லது வீணான நடவடிக்கை எடுப்பதோ தடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கஞ்சி தொட்டி திறப்போம்: விசைத்தறி தொழிலாளர்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறித் தொழிலாளர்கள், கஞ்சித் தொட்டி திறக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 35% ஊதிய உயர்வு கோரி பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள், கடந்த 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் 8 நாட்களாக நீடித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகமோ, அரசோ தங்களை கண்டுகொள்ளாத நிலையில், சுமார் 10 இடங்களில் கஞ்சித் தொட்டி திறக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.